அரசாங்கமானது தீர்வுத்திட்டத்தில் அக்கறைகாட்டாது பதவிக்காலத்தை நீடிப்பதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றது.
தமிழ் மக்கள் படும் துன்ப, துயரங்கள் இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நன்கு தெரியும்.
இந்தியா சென்று பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை. என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு சென்றுதான் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் இல்லை.
பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பில் இதனை அறிந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உட்பட பலரையும் சந்தித்து பேசியிருந்தனர்.
கூட்டமைப்பினரின் புதுடில்லி விஜயம் குறித்து அரசாங்க அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த விஜயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் விசனம் அடைந்திருந்ததாக செய்திகள் வெ ளியாகியிருந்தன. இது குறித்து கேட்டபோதே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.