இனமதவாத சகதிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்களையே அரசு தொடர்ந்து செய்து வருகிறது

513

ஹலால் முதல் அழுத்கமை வரையிலான அனைத்து காழ்ப்புணர்வு வன்முறை கட்டவிழ்ப்புகளிற்கும் பின்னால் தேசிய பிராந்திய பூகோல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதனை அவ்வப்போது சுட்டிக்காட்டினோம்.

அதே போன்றே இந்தநாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அத்தகைய நிகழ்ச்சி நிரல்கள் ஒருபொழுதும் காலாவதியாவதில்லை என்பதனையும் நீறுபூத்த நெருப்பாக இருந்து காலத்துக்குக் காலம் சந்தர்பங்கள் சாதகமாக அமைகின்ற பொழுதெலாம் அவை தலை விரித்து தாண்டவமாடும் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவ்வப்போது சந்தர்பங்களை சமாளிக்கவும் பின்னர் மறந்துவிடவும் கூடிய உஷார் மடையர்கள் போல் செலாற்றுவதில் அல்லது எதிர்வினையாற்றல்களோடு நின்று கொள்வதில் பிரசித்தமாக இருக்கின்றோம்.

அண்மைக் காலமாக தலைதூக்கும் இனமத வெறி சக்திகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை, அரச ஊடகங்கள் அவர்களுக்கு ஏன் சந்தர்பங்களை வழங்குகின்றார்கள், தனியார் ஊடகங்கள் விடயத்தில் காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை தடைசெய்கின்ற சட்டங்கள் ஏன் அமுலாக்கப் படுவதில்லை ? என பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

தற்போதைய தேசிய அரசில் ரணில் மைத்திரி புரிந்துணர்வுடன் செயற்பட்டாலும் அவ்விருவரும் இரு பிரதான தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் ஆவர்.

பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுத்தளம் குறித்த அவர்களது கரிசனை, கட்சி அரசியலில் மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் காய் நகர்த்தல்கள், அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற பெரும்பான்மைநெருக்குவாரங்கள்,  மதகுருமார்களின் அழுத்தங்கள், கடும்போக்கு சக்திகளை கையாள்வதில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்குதல்கள் அரசியல் இராஜ தந்திர நகர்வுகள் என பல பரிமாண சவால்கள் அவர்களது நிலைப்பாடுகளிலும் தாக்கம் செலுத்துகின்றன.

ravya-2தென்னிலங்கையில் சிங்கள முஸ்லிம் கலவர நிலையினை தோற்றுவித்து நல்லாட்சி அரசிற்கு நெருக்கடிகளை கொண்டுவருகின்ற நோக்கில் சில கடும்போக்கு சக்திகளை கருவிகளாக பயன்படுத்துகின்ற மறைமுகமான நிகழ்ச்சி நிரல் அல்லது சூழ்ச்சி இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் ராவய பத்திரிகையின் 30 aஆண்டு நிகழ்வில் தெரிவித்திருந்ததோடு தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

இவ்வாறான ஒரு பின்புலத்தில் தான் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அரசின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார், அவரது உரையில் முஸ்லிம்களையும் இஸ்லாமிய அமைப்புகளையும் பற்றி அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் ISIS தொடர்பான காலம் கடந்த புலனாய்வுத் தகவல்கள் என்பன கடும்போக்கு சக்திகளை ஆற்றுப் படுத்துவதாகவும் முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதாகவும் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசியல் களநிலவரங்கள்:

இன்று தேசிய அரசியலில் குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் மூன்றாவது அணியாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவர்களோடுள்ள கடும் போக்கு உதிரிக் கட்சிகளும் களமிரங்குகின்ற சமிக்ஞைகளை வெளியிட்டு வருவது அரசிற்கு பன்முக சவால்களை தோற்றுவித்துள்ளது.

மேற்படி தரப்பினர் மீண்டும் தமது பலமான அரசியல் பிரவேசத்திற்கு கடும்போக்குவாத இனமதவெறி பரப்புரைகளில் தங்கியிருப்பதனை குறிப்பாக சிறுபான்மை இனங்களுக்கெதிரான அரசியல் பரப்புரைகளில் ஈடுபாடு காட்டுவதனை நாம் அறிவோம்.

mrஅதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மஹிந்த அணி பிளவு படுவதை ஏதேனும் வகையில் கையாள்வதன் மூலம் மாத்திரமே உள்ளூராட்சி தேர்தல்களில் மாத்திரமன்றி எதிர்கால பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முகம்கொடுக்கும்வகையில் சுதந்திரக் பலப் படுத்திக் கொள்ளும் கடப்பாடு ஜனாதிபதி மைதிரிக்கு இருக்கின்றது.

அதேபோன்றே ஏதோ ஒரு வகையில் சுதந்திரக் கட்சியை பலவீனப் படுத்தவேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சியிற்கு இருப்பதனை அண்மைக்கால நகர்வுகள் உணர்த்துகின்றன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ அணியினரை பிரித்தெடுப்பதில் அவர்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் தான் பல்வேறு பாரிய ஊழல் மோசடி குற்றங்களுக்காக பிடிக்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்ட பின்னரும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் புரிந்துணர்வுகளில் பெரும்நம்பிக்கைகளுடன் ஈடுபாடுகாட்டி வருகின்றனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அரசியலுக்கு வருவாரா ? அதிபர்ம ஹிந்த பிரதமர் வேட்பாளராக வருவாரா..? அவர்கள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்டால் சந்திரிக்கா அம்மையார் தேசிய அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்வாரா ? என்றெல்லாம் செய்திகள் அடிபடுகின்றன.

BBS1இவ்வாறான அரசியல்கள நிலவரங்களில் மூன்றாம் அணியினருக்கும் கடும்போக்கு உதிரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சாதகமான சந்தை வாய்ப்புக்கள் அவர்களுக்கு துணை போகும் இன மத வெறிக் கும்பல்களிற்கு மிகச் சாதகமான களநிலவரங்களை தோற்றுவித்துள்ளன.

எனவே, இவ்வாறான தேசிய அரசியல் கள நிலவரங்களை, தேசிய அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புணர்வுடன், சாணக்கியமாகவும், சாதுரியமாகவும் சமூகத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும்!

சர்வதேச பிராந்திய அரசியல் இராஜதந்திர நகர்வுகள்:

அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுதலைப் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரை தீவிரப் படுத்தியிருந்த நிலையில் மேலைத்தேய நாடுகளுடன் இராஜதந்திர முறுகல் நிலையை தோற்றுவித்திருந்தார், நோர்வே மத்தியஸ்தம் முற்றாக நிராகரிக்கப்பட்டது, மனித உரிமை மீறல்கள் குற்றச் சாட்டுகளுடன் இலங்கை மீது மேலைத்தேயம் எகிறிக் குதித்தது.

unhrc-in-sessionபோருக்குப் பின்னரான இலங்கையில், பிராந்தியத்தில் மேலாதிக்க சக்திகளின் முஸ்தீபுகள் அதிகரித்தன சீனாவுடனான நெருக்கமான உறவு சர்வதேச சமூகம் என்ற மேலைத்தேய சக்திகளிற்கும் இந்தியாவிற்கும் பெரும் சவாலாக இருந்தது, ஐ நா மனித உரிமை ஆணையகத்தில் அமெரிக்க நோர்வே இஸ்ரவேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக் கெதிராக தீர்மானங்களை கொண்டுவந்த பொழுது இந்தியாவும் ஆதரவை அளித்தது.

ஈரான் லிபியா பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகள் யுத்த காலத்திலும் போருக்குப் பின்னர் வளைகுடா முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவை அளித்தன, இலங்கை முஸ்லிம்களும் அமெரிக்க தலைமையிலான மேலைத்தேய நெருக்கடிகளின் பொழுது இலங்கை அரசிற்கு ஆதரவளித்தனர், வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் செய்தனர்.

இவ்வாறான நிலையில் தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கை அரசிற்கான முஸ்லிம்களது ஆதரவுத் தளத்தை இலக்கு வைத்து பல்வேறு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, முஸ்லிம் விரோத சக்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

ஏக கலாத்தில் மஹிந்த அரசை அடிபணியச் செய்வது அல்லது இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது, மனித உரிமை மீறல்கள் அழுத்தத்திலிருந்து விடுபடவும், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் அப்போதைய இலங்கை அரசு   பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முனைப்புக் காட்டியது.

SL MUSLIMSஇல்லாத பயங்கரவாதம், அடிப்படை வாதம் , தீவிரவாதங்களை இலங்கையில் அரங்கேற்ற பல்வேறு உள்நாட்டு பிறநாட்டு சக்திகளும் கூலிப் படைகளும் களத்தில் இறங்கின, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் எதிராக சர்வதேச அரங்கில் சந்தைப் படுத்தப் படும் “இஸ்லாமோபோபியா” இலங்கையில் சந்தைப் படுத்தப் பட்டது.

நாட்டில் இராணுவத்தின் பிடியை ஸ்திரப்படுத்த வேண்டிய தேவைப்பாடு அன்றைய அரசிற்கு இருந்தது, அதற்கான நியாயங்கள் தேவைப்பட்டன.

ஹலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன, முஸ்லிம் அரசியல் தலைமைகள் எவ்வாறு போனாலும் சிவில் சன்மார்கத் தலைமைகள் முஸ்லிம்களை சரியாக வழிநடத்தியமை முஸ்லிம்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டமை , சமாதான சகவாழ்வு நிகழ்ச்சி நிரலை தீவிரப் படுத்தியமை நாடு தழுவிய அமைதியின்மை ஏற்படுவதனை தவிர்த்தது. இது குறித்து பல தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் திருப்தியை வெளியிட்டிருந்தன.

இவ்வாறான ஒரு அரசியல், இராஜ தந்திர களநிலவரங்களின் பின்புலத்தில் நாடு எதிர் கொண்டிருந்த பொரளாதார நெருக்கடியையும் கவனத்தில் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இரண்டு வருடங்களிற்கு முன்னரே நடாத்தி தனது நிலையை மேலும் ஸ்திரப் படுத்திக் கொள்ள முன்வந்தார்.

ஆட்சி மாற்றமும் இனவாத சக்திகளும்:

இலங்கையில் நல்லாட்சி மாற்றம் நிகழ்ந்தமை உண்மைதான், அதற்கு முஸ்லிம்களும் பிரதான பங்களிப்பினைச் செய்தார்கள், தமிழர்களும் செய்தார்கள், தேசிய அரசியல் சக்திகளும் செய்தன, பின்னால் சர்வதேச பிராந்திய சக்திகளும் செய்தன.

ஆனால், இனவாத சக்திகள் அழிந்துவிடவில்லை, அவர்களை பின்னாலிருந்து கருவிகளாக இயக்குகின்ற பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க சக்திகள் அழிந்துவிடவில்லை, மீண்டுமொரு ஆட்சிமாற்றத்தை விரும்புகின்ற புதிய சக்திகள் தோன்றுவதற்கான அதே வழிமுறைகளை புதுப் புது வடிவங்களில் களநிலவரங்களில் கையாள்வதற்கான சத்தியப் பாடுகளும் இல்லாமல் இல்லை.

கடந்த காலங்களில் இனமத வெறி கடும்போக்கு  நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாக முன்னேடுத்த சக்திகள் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகிப்பதாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

நாம் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.

இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள் அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும். அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை,அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!”

SHARE