இனவாதத்துடன் விளையாடினால் அது முழுச் சமூகத்தையும் அழிக்கும். இனவாதத்தின் அழிவுகளை எமது நாடு இதற்கு முன்னரும் சந்தித்துள்ளது. அரசியல் பிரச்சினைகளுக்கு தேர்தல் காலத்திலேயே தீர்வுகாண வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை மக்களே வழங்குவார்கள். ஆகவே தற்போதைய நிலைமையில் எஞ்சியுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதும் நாட்டின் உறுதியை பேணுவதற்கும் இடமளிக்க வேண்டியது அவசியமாகும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
”மதுரட குடிநீர்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரட பிரதேசத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
குண்டுத்தாக்குதல்கள், பிரச்சினைகள், அரசியல் சேறுபூசல்களுக்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒருபோதும் இடைநிறுத்தப்போவதில்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. அரசியல் பிரச்சினை களைக்கண்டு பயங்கொள்ளப் போவதுமில்லை. சகல மக்களுக்கும் சம அந்தஸ்தை வழங்குவதே எமது எதிர்பார்ப்பா கும்.
இனவாதம் மிகவும் பயங்கரமானது. முழுச் சமுதாயத்தையும் அழிக்கும் தன்மை இனவாதத்துக்கு உள்ளது. இனவாதத்துடன் விளையாடினால் அது முழு நாட்டையும் அழிக்கும்.
இதற்கு முன்னரும் இனவாத வன்முறைகள் இடம்பெற்றன. அதனால் பாரதூரமான அழிவுகள் ஏற்பட்டன. இனவாதத்தால் ஏற்படக்கூடிய அழிவுகளை நாம் இதற்கு முன்னரும் அனுபவித்துள்ளோம். இன்னும் ஆறு மாதங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்வார்கள். அதற்கான ஆயத்தங்களும் இடம்பெற்று வருகின்றன.
எனவே தேர்தல் காலத்தில் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம். வேட்பாளர் யார்? எந்த கட்சி வெற்றிபெறும் ? யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்க வில்லை. இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது இந்த கேள்விகளுக்கான பதிலை மக்கள் வழங்குவார்கள். அதன்போது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த காலம் வரும்வரை எஞ்சியுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவும் நாட்டின் உறுதி தன்மையை நிலைநாட்டுவதற்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு முன்னரும் 30 வருடகால யுத்த சூழ்நிலையை நமது மக்கள் சந்தித்துள்ளனர். அது நிறைவடைந்து 10 வருடங்களில் மீண்டும் பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளோம். முஸ்லிம் மக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என அனைத்து முஸ்லிம் இன மக்கள் மீதும் குற்றஞ்சுமத்த முடியாது. முஸ்லிம் மக்களை கேடயமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டவை என்பது அனைவரும் அறிந்ததே.
என்னை மக்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து 19 வருடங்கள் நிறைவடைகின்றது. எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால் அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. காரணம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த திருப்தி எனக்கு உள்ளது. அதேபோன்று ஊழல்செய்யவும் இல்லை. மக்கள் சேவை செய்யக்கூடியவர்களை எதிர் காலங்களில் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும். எந்த பிரச்சினைகள் ஏற் பட்டாலும் மக்களின் எதிர்கால தலைவர் களை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.