இனவாதம், மதவாதம், தேசியவாதத்தை விதைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய

519

இலங்கை அரசியல் வரலாற்றில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந் நிலை யில், தமிழ் மக்களுக்கான அபி லாசைகளை அல்லது தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வென்றெடுக்க முடியுமா? என்கிற நிலை தற்போது எழுந்துள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களையும் தம்வசப்படுத்துவதன் மூலம் தான் சிங்கள தேசம் இந்நாட்டில் தொடர்ச்சியாக தமது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதற்கிடையில் காலங்கள் பல உருண்டோடிவிடும். ஆட்சியைத் தொடர்ந்தும் தக்கவைப்பதா?, கவிழ்ப்பதா? என்கிற இழுபறி நிலைகள் தொடரும்.

சிங்களத் தரப்பினைப் பொறுத்தவரையில் பண்டாரநாயக்கா குடும்பமே இந்நாட்டை ஆட்சிசெய்ய வேண்டும் என்கிறதொரு நிலைப்பாடு அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. இந்நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள் கைவிட்டபாடில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் ஆட்சியாளர் மைத்திரிபால சிறி சேனவை வைத்து தனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பலப்படுத்தும் நோக்கில் தான் அவர் செயற்பட்டார். அதனது விளைவினை மக்கள் நன்கு அறி வர். ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கையில் இருக்கக்கூடிய இரு பிரதான கட்சிகளிடையே நடைபெறும் போட்டி மட்டும் தான். இப்போட்டியானது தமிழ் – முஸ்லீம் சமூகத்தினரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தேர்தல் அல்ல. ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய, மைத்திரிபால சிறி சேன, ரணில் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என மாறி மாறி கருத்துக்களை மாத்திரம் தெரிவிப்பார்கள். இந்நாட்டை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றுவதில் அவர்கள் ஒற்றுமையுடன் தான் எப்போதும் செயற்படுவார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை என்கிற விடயங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் பின்னடைவுகள், போலியான வாக்குறுதிகள் என்பன எடுத்துக் காட்டுகிறது.

யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்துபோன நிலையிலும் இந்த நாட்டில் சிறுபான்மை இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இன்னமும் நிரூபிக்கப்படாத, தீர்வுகள் எதனையும் எட்டமுடியாத நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக ஊடக வியலாளர்கள் 35 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப் பட்டுக் கொலை செய்யப்பட்டவர்கள், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனோர், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த வர்களின் நிலை, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வசித்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்ன? என இவ்வாறான பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் சார்பில் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இவற்றுக்கானத் தீர்வு எப்பொழுது கிடைக்கும் என தற்போதும் தமிழ் மக்கள் ஏக்கத்துடன் தான் வாழ்கிறார்கள். இவ்வாட்சி மாற்றத்தினால் இந்நாட்;டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தீர்வுகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் விடுத லைப் புலிகளின் போராட்டத்தை சுட்டிக் காட்டியவர்கள் விடுதலைப் புலிகளின் போர் மௌனிக்கப்பட்ட போதிலும் ஒரு ஜனநாயக வழியில் மாகாண சபைகள் செயற்பட்டபோதிலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை மாறி மாறி வந்த அரசுகள் வழங்குவதில் தயக்கம் காட்டினர். தொடர்ந்தும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது.

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் நோக்கிய செயற்பாடுகளைச் செய்வாரா?. கடந்த காலங்களில் தமிழினம் சந்தித்த துன்பங்கள் எல்லாம் பாடங்களாகவே இருக்கின்றன. அபிவிருத்தி அரசியல் பற்றிப் பேசுகின்ற அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொன்றும் இனியாவது சிந்திக்கவேண்டும். உங்களது சுயநல அரசியலுக்காக எமது தமிழினத்தை விற்றுப்பிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. தமிழினத்தை அடகுவைக்கும் நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளாது இருப்பது சிறந்தது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் அரச படைக ளால் கொலை செய்யப்பட்ட, அரசினால் கடத்திக் காணா மல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் பற்றிய தேடல்கள் உங்களிடம் இருக்கிறதா?

வெறுமனே அபிவிருத்தி மட்டும் ஒரு மனித வர்க்கத்தை விடுதலை நோக்கிய பாதைக்கு இட்டுச்செல்லாது. வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற ஒரு சூழல் என்று உருவாக்கப் படுகின்றதோ அன்றுதான் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.

சர்வதேச விசாரணை, போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற விடயங்களுக்கான தீர்வுகள் என போலியான செயற்பாடுகளை இப் புதிய அரசாங்கமும் முன்னெடுக்குமாக விருந்தால் அது தமிழ் மக்களை மாற்றுப் பாதையினை நோக்கி வழிநடத்தும் செயற்பாடாகவே அமையும்.

போருக்குப் பின்னரான செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிற நிலைப்பாடு தான் தோற்று விக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட படு கொலைகள் போன்று அல்லது ரணசிங்க பிரேமதாச வின் காலத்தில் ஏற்பட்ட படு கொலைகள் போன்று தமிழினத்தின் மீது மீண்டும் படுகொலைகள் கட்டவீழ்த்து விடப்படுமாகவிருந்தால் மாத்திரம் சர்வதேச நாடொன்றின் உதவி யுடன் இலங்கையரசுக்கு எதிராக ஆயுதமேந்திப்போராட வேண்டிய நிலைக்குள் தமிழினம் தள்ளப்படும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் நன்கு நிதானித்து அறிந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது புலப்படுகின்றது.

இதே ஒற்றுமை பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களிலும் உறுதிப்படுத்தப்படுமானால் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டஙக்ளில் வெற்றி பெற முடியும். சிங்களத் தரப்புகள் ஒற்றுமையாகச் செயற்பட்டிருப்பது இவ் ஜனாதிபதித் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எமது கருத்துக் கணிப்பின் படி கோட்டாபய அவர்கள் இனவாத மதவாத தேசியவாதத்தை முன்வைத்து வெற்றி பெறுவார் எனக் குறிப்பிட்டிருந்தோம். அது மட்டுமன்றி ஐ.தே.கவின் இனப்படுகொலைகளும், மஹிந்த தரப்பின் இனப்படுகொலைகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். அதில் 200க்கும் மேற்பட்டவை யூலைக் கலவரத்திலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை ஐ.தே.க அரசு செய்தவை. ஆசியாவின் தலை சிறந்த நூலகத்தை எரித்ததும் இதில் உள்ளடக்கம். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மஹிந்த தரப்பு 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் படு கொலைகளைச் செய்திருக்கிறது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை நாம் மக்களாகிய உங்களின் தெரி வாக விட்டிருந்தோம். தமிழ் பேசும் மக்கள் தெளிவாக தமது வாக்கினை வழங்கியிருந்தார்கள். ஆனாலும் இந் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதம் தலை தூக்கியதாலும் இதிலிருந்து விடு பட சிங்கள மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள் என்பதையே இவ் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றது.

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நூற்றுக் கணக்கான மக்கள் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைவிடவும் இந்நாட்டில் முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்விகளும் அண்மைய காலமாக தென்னிலங்கையில் எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் உறுதிப்படுத்தப்படுமா என்பது மற்றைய விடயம். ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் தான் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெறுவேன் என்றும், சஜித் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இதனால் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதம் மேலும் தலைதூக்கும் என்கிற விடயத்தை கருத்திற்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கி தற்போது வெற்றியும் பெற்றுள்ளார். ஆகவே தமிழ் மக்கள் இவருக்கு அதி கமாக வாக்களிக்கவில்லை என்பதற்காக மீண்டும் தமிழ் மக்களை பழிவாங்கும் நடவடிக்கையில் கோட்டாபய ஈடுபடுவாராகவிருந்தால் த.தே.கூ வின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டதைப்போன்று தமிழினத்திற்காக ஒரு ஈழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே கூறலாம்.

இரணியன்

SHARE