புரோக்ரேட்டஸ் என ஒரு கொடூர அரக்கன் இருந்தானாம். பகல் நேரத்தில் தன் வீட்டின் வழியே யார் போனாலும் அவர்களைக் கூப்பிட்டு, ராஜ உபச்சாரம் செய்து, விருந்தளித்து அனுப்புவானாம். அதுவே இரவு ஆனால் போதும்… நபர்களைப் பிடித்து தன் அறையினுள் உள்ள ஸ்பெஷல் கட்டிலில் படுக்க வைப்பானாம். அப்படிப் படுப்பவரின் உடலானது, கட்டிலைவிட நீளம் குறைவாக இருந்தால், கை, கால்களை அசுரத்தனமாக இழுத்து நீட்டிவிடுவானாம். நீளம் அதிகமாக இருந்தால், அவரது தலையையும் கால்களையும் வெட்டி விடுவானாம்.
அவனது கட்டிலில் விழுகிற யாரும் தப்பிக்க முடியாது. ஒன்று ஊனமாக வெளியேறுவார்கள் அல்லது செத்து மடிவார்கள். சரி… இப்போது எதற்கு இந்த கிரேக்கக் கதை?அனேக கணவன்-மனைவியரும் ஒரு வகையில் புரோக்ரேட்டஸ் போன்று அரக்கர்கள்தான். நமது வாழ்க்கைத் துணையைப் பற்றி ஒவ்வொருவரும் மனதுக்குள் ஒரு அளவுகோலை வைத்துக் கொள்கிறோம். அந்த அளவுகோலுக்குள் பொருந்தாமல் கொஞ்சம் மாறியிருந்தாலும், நமது துணையை நம் விருப்பத்துக்கேற்ப, நாம் உருவாக்கிய அளவு கோலுக்குள் பொருத்த நினைத்து அரக்கனைப் போலவே சித்ரவதை செய்கிறோம்.
கணவனும் மனைவியும் வேறு வேறு சூழலில் வளர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்துவம் கொண்டவர்கள். தனித்தனி விருப்பு, வெறுப்பு கொண்டவர்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் நமது கட்டிலுக்குள் அவர்களைப் பொருத்த நினைப்பது அரக்கத்தனம் அன்றி வேறென்ன?நமது துணை ஒரு தவறை மறுபடி மறுபடி செய்து கொண்டே இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். காலையில் சரியான நேரத்துக்கு எழுந்திருக்காததில் ஆரம்பித்து, தாமதமாக வேலைக்குக் கிளம்புவது, எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காதது என ஏகப்பட்ட புகார்களை அடுக்குகிறீர்கள். அவரோ எதையுமே காதில் போட்டுக் கொள்வதில்லை.
உங்களுக்கு டென்ஷன் தலைக்கேறும். கன்னாபின்னாவென கத்தித் தீர்ப்பீர்கள். கடுமையாக நடந்து கொள்வீர்கள் அல்லது அதை அப்படியே மனதுக்குள்ளேயே அழுத்தி, கறுவிக்கொண்டே இருப்பீர்கள். பழி தீர்க்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். இந்த இரண்டு அணுகுமுறைகளுமே தவறு. பிறகு எதுதான் சரி? உங்கள் துணை என்றில்லை, உங்கள் உறவினரோ, சக ஊழியரோ, குழந்தையோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் தவறு செய்கிற போது கோபம் வருவது இயல்புதான். ஆனால், அந்தக் கோபத்தை அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என அவசியமில்லை.
என்ன மனநிலையில் இருக்கிறோமோ அதன்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஒரு மாறுதலுக்கு அன்பாக நடந்து பாருங்களேன். ஒரு பிரச்னை வருகிறது… நமது இடத்தில் புத்தரோ, காந்தியோ, இயேசுவோ இருந்திருந்தால் அதை எப்படி அணுகியிருப்பார்கள்… யோசியுங்கள். அவர்கள் யாரும் நிச்சயம் கோபத்துடனோ, வன்மத்துடனோ நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்தானே? அதே அணுகுமுறை நமக்கும் சாத்தியம்தான். எல்லாரும் புத்தராவும் காந்தியாவும், இயேசுவாகவும் ஆயிட முடியுமா? மனது வைத்தால் எதுவும் சாத்தி யம். சரி… இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்கிறேன். உங்கள் அபிமான நட்சத்திரம் நடித்த படத்தைப் பார்க்கிறீர்கள்.
அவர் ஒரு விஷயத்தை அணுகும் முறை உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ‘ சூப்பரா இருக்கே… நாம கூட இப்படி ட்ரை பண்ணிப் பார்க்கலாமே…’ என நினைக்கிறோம். ஆனால், உண்மையிலேயே நமக்கு அதே போன்ற ஒரு சூழ்நிலை வரும் போது நினைத்தபடி நடந்து கொள்வதில்லை. கொஞ்சம் மனது வைத்தால் நாமும்கூட அந்த மாதிரி நடந்து கொள்ள முடியும். ஒரு இடத்துக்கு உங்கள் துணையை வரச் சொல்கிறீர்கள். நீங்கள் முன்கூட்டியே போய் காத்துக் கொண்டிருக்க, உங்கள் துணையோ சரியான நேரத்துக்கு வரவில்லை. அல்லது நீங்கள் சொன்ன விஷயத்தை உங்கள் துணை முடித்து வைக்கவில்லை.
‘உன்னைப் போய் நம்பினேன் பாரு… ஒரு நாளாவது சரியான நேரத்துக்கு வந்திருக்கியா?’ என்றோ, ‘நீ எதுக்குத்தான் லாயக்கு…’ என்றோ சட்டென எரிந்து விழுவீர்கள். உங்களை நீங்கள் கொஞ்சம் முன்கூட்டியே தயார்படுத்திக் கொண்டீர்களானால், அதே சூழ்நிலையை அன்புடன் கடக்க முடியும். துணையின் தவறுகளை, குறைகளை பெரிதுபடுத்தாமல் இயல்பாக இருந்து பாருங்கள். அவர்களைப் பற்றிய முன் முடிவுகளை வைத்துக் கொள்ளாதீர்கள். இப்படி இருப்பது சாதாரண காரியமில்லைதான். ஆனாலும், சம்பவங்களைவிட, உறவுகள் முக்கியம் என்பதை உணர்ந்து, இந்த அணுகுமுறைக்குப் பழகிவிட்டீர்களானால் உங்களைப் போல வாழ்க்கையை ரசனையுடன் வாழ்பவர் வேறு யாரும் இருக்க மாட்டார்!
எப்படிப் பழகுவது?
உங்கள் துணையின் செயல் கோபம், வருத்தம், ஏமாற்றம் என என்ன மாதிரியான உணர்வை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். ‘என் செயல் அன்பைத் தவிர வேறெதையும் பிரதிபலிக்காது’ என்பதில் உறுதியாக இருங்கள். அன்பை மட்டுமே கொடுக்கும் இந்தச் சவாலை சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து பழகிப் பாருங்கள். உதாரணத்துக்கு உங்கள் துணை வீட்டுக்குத் தாமதமாக வரும் போது, வந்ததும், வராததுமாக கோபப்பட்டு, வீட்டின் சூழலையே மோசமாக மாற்றாமல், சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்யலாம். இப்படி நீங்கள் பழகும் சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்களுக்குத் தேவையான பக்குவத்தை உங்களுக்குத் தரும்.
உங்களது மாறிய அணுகுமுறையை உங்கள் துணை கண்டுகொள்ளாமலிருக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். துணையை கவனிக்க வைப்பதல்ல உங்கள் நோக்கம்.அன்பை மட்டுமே பகிர்கிற உங்கள் அணுகுமுறையின் ஆரம்பத்தில், ‘நானே ஏன் எப்போதும் விட்டுக் கொடுக்கணும்?’ என்கிற எதிர்க்குரல் அடிக்கடி தலைதூக்கும். அதைப் புறந்தள்ளுங்கள். பழகப் பழக, நீங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததன் பலன் உங்களுக்குப் புரியும்.
உங்கள் துணை வழக்கமாகச் செய்கிற தவறுகளுக்கு நீங்கள் எப்போதும் எப்படி ரியாக்ட் செய்வீர்களோ அதை மாற்றி திடீரென அப்படிச் செய்யாமல் அமைதியாக இருப்பதே துணையின் கவனத்தை ஈர்க்கும். காலப் போக்கில் அந்த அணுகுமுறை உங்கள் துணையை மாற்றிவிடும் அல்லது உங்கள் வாழ்க்கை அமைதியாகவும் அழகாகவும் மாறிவிடும். அதுதானே உங்கள் இலக்கு? எல்லோரின் இலக்கும்?