முன்னணி மொபைல் பேமெண்ட் செயலியான கூகுள் பே (Google Pay) குறிப்பிட்ட சேவைகளுக்கு சேவைக் கட்டணங்களை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள் பே மொபைல் ரீசார்ஜ் சேவைகளுக்கு சேவைக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
மொபைல் ரீசார்ஜ் சேவைகளுக்கு ஃபோன் பே (PhonePe) மற்றும் பேடிஎம் (PayTM) ஆப்ஸ் ஏற்கனவே சேவைக் கட்டணங்களை வசூலிக்கின்றன. அதேபோல், கூகுள் பே ரீசார்ஜ் ஒன்றுக்கு ரூ.3 வரை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப மதிப்பாய்வாளரான முகுல் ஷர்மா, X தளத்தில் ஒரு போஸ்டை பகிர்ந்துள்ளார், இது Google Pay-ன் முக்கியமான நகர்வைக் குறிக்கிறது. மொபைலை ரீசார்ஜ் செய்யும் போது செலுத்த வேண்டிய கூடுதல் தொகையின் ஸ்கிரீன் ஷாட்களை அவர் பகிர்ந்துள்ளார்.
ரூ.1 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்கள் தொடர்ந்து இலவசம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 101 முதல் 200 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.1 சேவைக் கட்டணமும், 201 முதல் 300 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.2ம், 301க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.3ம் வசூலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மொபைல் ரீசார்ஜ் சேவைகளுக்கு மட்டுமே சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் ஃபாஸ்ட் டேக் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை.