உங்கள் மூளையில், ஒரு மொழியை பதிவேற்றினால் வெறும் ஒரு நிமிடத்தில் உங்களால் உலகின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். எந்தக்கலையில் வேண்டுமானாலும் எக்ஸ்பெர்ட் ஆக முடியும்.
ஒரு நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் தரவுகளாக மாற்றி உங்கள் மூளையில் பதிவேற்றினால், எல்லா தகவல்களும் உங்கள் மூளையில் பதிவாகிவிடும். உங்கள் மூளையில் இருக்கும் எல்லா நினைவுகளையும், தகவல்களையும் டவுன்லோட் செய்து அதனை சேமித்து வைக்கவும் முடியும். இதையெல்லாம் கேட்கவே வியப்பாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கிறதா? ஆனால், இவையனைத்தும் சாத்தியமாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த HRL ஆய்வகம்.
எப்படி சாத்தியம்?
இன்றைக்கு நம் பயன்படுத்தும், செல்போன், கணினிகள் போன்றவையெல்லாம் தானாக இயங்குவது கிடையாது. நாம் குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக அதனை புரோகிராம் செய்கிறோம். உதாரணத்திற்கு நீங்கள், இரண்டு ஐபோன்களை புதிதாக வாங்குவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டிற்கும் செயல்பாடுகளில், தொழில்நுட்பங்களில் ஏதாவது வேறுபாடு இருக்குமா? இருக்காது அல்லவா? அதே இரண்டு போன்களையும் இருவேறு நபர்களிடம் கொடுத்துவிட்டு, சில நாட்கள் பயன்படுத்தக்கொடுப்பதாக நினைத்துக்கொள்வோம்.
இப்போது இரண்டிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும். இருவரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை பதிவேற்றி வைத்திருப்பர். தாங்கள் பார்த்த காட்சிகளை போட்டோ எடுத்து வைத்திருப்பர். தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப, அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பர். இதே போலதான் மனித மூளையின் செயல்பாடும்.
எல்லா மனிதர்களின் மூளையும் அடிப்படையில் ஒரே செயல்பாட்டையும், பண்புகளையும் கொண்டது. பின்பு மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து அது தன்னை தினமும் அப்டேட் செய்துகொண்டே வருகிறது. நீங்கள் பார்க்கும் விஷயங்கள், வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள், கற்றுக்கொள்ளும் விஷயங்கள் ஆகியவற்றைப்பொறுத்து மாறுகிறது. ஆகவே, மூளையும் கணினி போன்றதே. கணினியில் எப்படி நம்மால் தரவுகளை சேமிக்கவும், விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடிகிறதோ, அதனை மூளையிலும் நிகழ்த்த முயற்சி செய்யலாம் அல்லவா? அந்த தொழில்நுட்பத்தின் பெயர்தான் ப்ரெய்ன் ஸ்டிமுலேஷன் (Brain Stimulation).