இன்று இலங்கை தமிழர்கள் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

675

tamilnadu-seekers-01

இன்றுஅதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி சென்றடைந்தனர்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்களர்களும், இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதால் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வர தொடங்கினர்.

அவ்வாறு வந்த அகதிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைபுலிகளுடனான மோதல் அதிகரித்த நிலையில் அப்பாவி தமிழர்கள் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் லட்ச கணக்கான பேர் அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளனர்.

உள்நாட்டு போருக்கு பின் தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனாலும், இலங்கை இராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர்.

தமிழர்களின் நிலங்களில் சிங்களர்களையும், இராணுவத்தினரையும் குடியமர்த்துவது, விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படும் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவது, வெள்ளை வான்களில் வரும் கும்பல் அப்பாவி தமிழர்களை கடத்தி செல்வது என தொடர்ந்து நடந்து வருகிறது.

இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு வெற்றிக்கு பின்னரும் அங்கு அமைதி நிலவவில்லை. இதனால் இலங்கையில் வாழ முடியாத தமிழர்கள் அவ்வப்போது அகதிகளாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கை மாங்குளம் சதீஷ், குளத்துமோட்டை ரவீந்திரன், தோணிக்கல் சாந்தி மற்றும் மலர் ஆகிய நால்வரும் நேற்று மாலை மன்னாரில் இருந்து இலங்கையை சேர்ந்த படகு ஒன்றில் கிளம்பியுள்ளனர். நள்ளிரவு தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டு அருகே மார்பளவு தண்ணீரில் இவர்களை இறக்கிவிட்ட படகோட்டிகள் இலங்கைக்கு திரும்பி சென்றனர்.

இரவு முழுதும் நடந்து வந்த இவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்தினை அடைந்தனர். அங்கு போலீஸார் அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகதியாக வந்த சாந்தி தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் எனக்கு 5 குழந்தைகள். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் என் அம்மாவோடதான் இருக்கிறேன். அதனால், அரசாங்க சலுகை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. கூலி வேலை பார்த்து கிடைக்கும் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. இலங்கையில் விலைவாசி அந்தளவுக்கு உயர்ந்து இருக்கிறது. ஒரு கிலோ அரிசி 90 ரூபாய், சீனி 110 ரூபாய், சின்ன தேங்காய் 50 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் எங்க சொந்தகாரர்களுடன் தங்கிவிடலாம் என்று அம்மா, குழந்தைகள் எல்லாரும் கிளம்பினோம். படகு சின்னதாக இருந்ததால அவர்களை அழைத்து கொண்டு வர முடியவில்லை. அதனால் நான் மட்டும் இங்கே வந்துள்ளேன் என்றார்.

மற்றொரு அகதியான சதீஷ் கூறுகையில்,

பாண்டிச்சேரியில் உள்ள எங்க உறவினர் வீட்டில் என் மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே பாஸ்போர்ட் எடுத்து இந்தியாவுக்கு வந்தேன். விசா முடிந்து போனதாலும், இலங்கையில இருக்கும் காணியை (நிலம்) விற்பதற்காகவும் இலங்கைக்கு திரும்ப போனேன். ஆனால் என் காணியை விற்க முடியவில்லை. வேலையும் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனால், என் பொண்டாட்டி புள்ளைங்களோட சேர்ந்து வாழ அகதியாக வந்துள்ளேன். மறுபடி இந்தியா செல்ல விசா கொடுக்க மாட்டாங்க என்பதால் படகில் ஏறி தப்பி வந்தேன் என்றார்.

இலங்கையில் தமிழர்கள் சந்தோஷமாக வாழ எல்லா முயற்சியும் எடுப்பதாக ஐ.நா.வும், இந்திய அரசும் சொல்லி கொண்டிருந்தாலும் தமிழர்கள் இலங்கையைவிட்டு அகதிகளாக வெளியேறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

SHARE