இன்றைய கிழக்கின் அரசியல்-றாசிக் நபாயிஸ்

592

 

ஒரு வண்டியை நான்கு குதிரைகள் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்வது போன்றதொரு அரசியல் சூழ்நிலை-
இன்றைய கிழக்கின் அரசியலுக்கு ஏற்பட்டிருப்பதால் எந்த கயிறு முதலில் முறுக்கேறி பிய்ந்து போகும் என்பது இன்னும் புரியாத மெளன போராட்டமாகவே இருந்து வருகிறது.
கிழக்கின் புல்மோட்டை முதல் பொத்துவில் வரையான பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் எந்த எந்த தலைமையை அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்வது என்றதொரு குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை தற்காலத்தில் உணர முடிகிறது.
இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் பல
சின்னங்களில் பல புதிய முகங்கள் வாக்கு
வேட்டைக்கு தயாராகி வருகின்றது.
இந்நிலையில் போட்டியிட  களமிறக்கப்படவுள்ள  வேட்பாளர்களில் யாரை ஆதரித்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற தடுமாற்றத்தை மக்கள்களின் மனதில் உருவாக்கியிருப்பது  ஒட்டுமொத்த கிழக்கில் தலைமை வகிக்கக் கூடிய பல அரசியல் தலைமைத்துவத்துக்கான வெற்றிடம்  காணப்படுவதை தெளிவுபடுத்துகிறது.
இயற்கை வெற்றிடத்தை வெறுக்கும் என்பது இயற்பியலில் அனைவருமறிந்த ஒன்றாகும். ஏதோவொன்றில் வெற்றிடம் இருக்குமாயின் அதன் மறைவில் இன்னுமொன்று இருந்து கொண்டே இருக்கும்.
ஓளியின் வெற்றிடத்தில் இருள் இருக்கும். அறிவின் வெற்றிடத்தில் அஞ்ஞானம் இருக்கும்.
இவ்வாறு வெற்றிடம், நிரப்பப்படக் கூடியதாக இருந்தாலும், சமுதாயமொன்றில் வாழ்ந்து அச்சமுதாயத்தின் விருப்பு வெறுப்புக்களில் பங்குகொண்டு, தேசத்தினதும், தேசத்தின் சொத்துக்களான சமுதாய மக்களினதும்  எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயற்பட்டு, அச்சமூகத்தின் உரிமைக்காகவும், பிரதேசத்தினதும், நாட்டினதும் முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்தவர்கள், குரல் கொடுப்பவர்கள்   மண்ணையும் அந்த மண்ணில் வாழும் மக்களையும், விட்டு பிரிகின்றபோது, அவர்களால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற இடைவெளி நிரப்பப்படுவதற்கு பல நூறு ஆண்டுகள் கழிகின்றன. அல்லது அவ்வெற்றிடங்கள்; நிரப்பப்படாமல் சமுதாய இடைவெளிகளாவே காணப்படுகின்றன.
சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும், ஒருமைப்பாடும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றினால் மக்களும், பிரதேசங்களும், நாடும், சுபீட்சமும், நிம்மதியும் அடைய வேண்டும் என்ற உன்னத மனப்பாங்கு கொண்டு, அவற்றை மலரவிப்பதற்காக  அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றைப்  பகிர்ந்து செயற்பட்ட பல சமூகச் சிற்பிகள் இன்று நம்மிடையே இல்லையே என்று எண்ணத் தோன்றுகின்றது.
நாட்டிலும், சமுதாயங்களிடையேயும் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணம் செய்து வாழ்ந்த சமூகத் தலைவர்கள்; இத்தேசத்தைவிட்டு மறைந்து விட்டார்கள்.
தலைமைகளும்
ஞாபகமூட்டல்களும் 
பல்லின சமூகம் வாழும் இலங்கைத் திருநாட்டில் ஒவ்வொரு சமூகத்திலும் பல்லாயிரக் கணக்காணோர் பிறந்து வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலரே இன்றும் மக்களினால் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
1505ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 443 வருடங்கள் ஏகாதிபத்தியவாதிகளினால் இலங்கை மண் ஆளப்பட்டது. அவர்களின் தேவைக்காக இத்தேசம் பயன்படுத்தப்பட்டது. இத்தேசத்தினதும் மக்களினதும் அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் கவனம் கொள்ளாது அவர்களது நலனை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு செயற்பாடுகளையும் திட்டங்களையும் ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துச் செயற்பட்டனர். அது மாத்திரமின்றி சமூகங்களுக்கிடையே பிரிவினையையும் மோதல்களையும் ஏற்படுத்தினர்.
அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு எதிராக நமது முன்னோர்கள்  இந்த மண்ணிலிருந்து அவர்களை அகற்றுவதற்காகவும் மண்ணுக்கு விடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் கிளர்ந்தெழுந்தனர். ஆனால், ஏகாதிபத்தியவாதிகளுக்கெதிரான அவர்களின் எழுச்சி திட்டமிடப்படாத, ஒருமித்த போராட்டமாக அமையாததானால் அப்போராட்டங்கள்; வெற்றி கொள்ளப்படவில்லை.
இருப்பின் 1930 களின் பின்னரான காலப்பகுதியில் அனைத்துச் சமூகங்ளையும் சார்ந்த தலைவர்கள் இன, மத, மொழி பேதங்களை கடந்து ஒரு தாய்பெற்ற பிள்ளைகள்போல் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து போராடியதனால் ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாழும் தந்திரத்திற்கும், அடிமை சானசத்திற்கும் சாவுமணி அடிக்க முடிந்தது. அதனால் 1948ல் இந்நாட்டு மக்கள் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க வழியேற்படுத்தப்பட்டது.
அந்தவகையில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தி நாட்டு மக்களின் நலனிலும் சுதந்திரத்திலும் அக்கறைகொண்ட தலைவர்களாக அநாகரிக தர்பால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெப்பை, டி.பி.ஜாயா போன்ற தலைவர்கள் பல தசாப்பதங்களுக்கு முன்னர் விளங்கினர்.
இத்தலைவர்கள் சமுதாயத்தின் குரல்களாக இருந்து சமூக விழுமியங்களைப் பாதுகாத்தது மாத்திரமின்றி, மக்களின் நலன்களிலும் அக்கறைகொண்டு செயற்பட்டதனால் அவர்கள் இன்றும் சமூகங்கள் மத்தியில் ஞாபகமூட்டப்படுகிறார்கள்மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
இவ்வாறு காலத்திற்குகாலம் சமூகங்கள் மத்தியில் சமூகத்திற்காக குரல்கொடுக்கக் கூடிய தலைவர்கள் உருவாகி அவர்களது சமூகக் கடமைகளை மனச்சாட்சியோடு நிறைவு செய்து மறைந்திருக்கிறார்கள். அவ்வாறான தலைவர்களின் சேவைகளும், பணிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரவர் சார்ந்த சமூகங்களினாலும், சமூகங்களை நேசிக்கின்ற ஏனையவர்களினாலும் புடம்போடப்படுகிறது.
பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் பல தலைவர்கள் உருவாகி பல்வேறு துறைகளில் அவர்களின் சமூகப் பணியினை நிறைவு செய்திருக்கிறார்கள். இந்நாட்டை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக அனைத்து இனத் தலைவர்களுடனும் ஒன்றிணைந்து குரல் கொடுத்த சுதந்திரத் தியாகிகளில் ஒருவரான குணாநந்த தேரர் முதல் இலஞ்சம், மோசடி, ஊழல் நிறைந்த ஆட்சியிலிருந்து நாடும் மக்களும் விரும்பும் ஆட்சி இந்நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும் என்று அதற்காக சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து ஆட்சிமாற்றத்தையும் ஏற்படுத்திய மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர் வரை சிங்கள சமூகத்தின் மத்தியில் மதிக்கப்பட்ட தலைவர்களாக பேசப்படுகிறர்கள்.
மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர் ஒரு பௌத்த துறவியாக இருந்தும். அத்துறவரத்துக்கும் அப்பால் இந்நாட்டில் சமூக ஒற்றுமை மலர வேண்டும். நாட்டில் நல்லாட்சி  ஏற்படுத்தப்பட வேண்டும். சமூகங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எந்தவொரு சமூகமும் மற்றுமொரு சமூகத்தினால் பாதிக்கப்படக் கூடாது. சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் இந்நாட்டு மக்களே, அவர்களும் நிம்மதியாக வாழ வேண்டும். அவர்களது வாழ்விடங்களும்,  விழுமிங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.
இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பது முக்கியமல்ல. மாறாக மனிதப் பண்புகளைக் கடைப்பிடித்து, அப்பண்புகளை மதித்து, மனித நேயத்துடன் வாழ்ந்து, சமூகத்திற்கு பயனளித்த ஒரு மனிதனாக மரணிப்பதே முக்கியமாகும். இவ்வாறு, பெரும்பான்மை சமூத்தில் மாத்திரமின்றி சிறுபான்மை சமூகத்திலும் மக்கள் மனங்களை விட்டு மறையாத தலைவர்கள் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்
தந்தை செல்வாவும், தலைவர் அஷ்ரபும்
ஒரு சமூகத்தின்  சமூகக் கட்டமைப்புக்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்ட துறைசார் நிபுணர்களும் தலைவர்களும் வாழ்ந்து மறைந்தாலும் அவர்கள் காலங்களினால் நினைவூட்டப்படுகின்றனர்.
ஒரு சமூகத்தின் தலைவிதியை நிர்ணைக்கும் சமூகக் கட்டமைப்புக் கூறாக அரசியல் துறை உள்ளது. இத்துறையில் கால்பதித்து ஆளுமையுள்ள தலைமைத்துப் பண்புகளினால் மக்களை ஒன்றிணைத்து செயற்பட்ட அரசியல் தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் சமூகத்தினால் அதிகம் பேசப்படுபவராக மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவும் முஸ்லிம் சமூகத்தில் அதிகம் பேசப்படுபவராக மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபும் திகழ்கின்றனர்.
1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப் பெற்றுக்கொடுக்க உழைத்த தந்தை செல்வா தமிழ் மக்களின் உரிமைப் போரட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டார்.
1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் அன்றைய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, தாய் மொழி தமிழ் மொழிக்கான உரிமை கேட்டு பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை பெருந்தலைவர் தந்தை செல்வா முன்னெடுத்தார். இப்பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள் என அன்றைய பிரதமர்  பண்டாரநாயக்க அழைப்பு விடுத்தபோது, அவரைச் சந்தித்த தந்தை செல்வா ‘இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் ஏதேனும் ஒன்றினை செய்தே ஆக வேண்டும். இன்றைய சூழலில் நாங்கள் ஒன்றிணைந்து இப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் நாம் இறந்த பின்பு இந்நாட்டிற்கு இப்பிரச்சினை பெரும் பேராபத்தை உண்டாக்கும்’ என அவர் அன்று    சொன்னது பிற்காலத்தில் நிஜத்தில் நடந்தேறுவதையும் நாம் காண்கிறோம்.
இவ்வாறு எதிர்காலத்தையும் நிகழ் காலத்தில் எதிர்வு கூறி அப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து தாம் சார்ந்த இன மக்களும் ஏனைய மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று செயற்பட்டு, மக்களுக்காக வாழ்ந்த தந்தை செல்வா, அவர் மறைந்து தசாப்தங்கள் பல கடந்தும் இன்றும் தமிழ் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சமூகத்தின் மத்தியில் அவரது வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை என்றே கூற வேண்டும்.
ஏனெனில், அவர் உருவாக்கிய இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில்  விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றமையும், அக்கூட்டமைப்பை ஆதரித்தும் எதிர்த்தும் தமிழ் அரசியல் தளத்தில் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றமையும்  தந்தை செல்வா போன்ற அரசியல் தலைமையை தமிழ் சமூகம் வேண்டி நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
அவ்வாறு, 1982ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷை உருவாக்கி நீலமென்றும் பச்சை என்றும் பிரிந்து நின்ற வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை ஒன்றிணைத்து பெரு விருட்சமாக்கி, அதன் மூலம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்கத்தக்க பல பணிகளை 14 வருடங்கள் மேற்கொண்ட தலைவர்  அஷ்ரபின் குறுகிய கால அரசியல் பயணம்; சமூகத்தின் பல எதிர்காலத் தேவைகளுக்கு நிகழ்காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பெற்றுத்துக்  மறைந்துவிட்ட தலைவர் அஷ்ரபின் மரணம் கிழக்கு முஸ்லிம் அரசியலில் நிரப்பப்பட முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அவர் உருவாக்கிய கட்சியின் அடிநாதம் தெரியாவர்கள், அவர் இக்கட்சியின் விருட்சத்திற்காகப் புரிந்த  உழைப்பின் ஒரு துளி அனுபவத்தைக் கூடப் பெறாதவர்கள், அக்கட்சியினால் மகுடங்களைச் சுமந்துகொண்டு மக்களின் நலன்களை விடவும் தங்களது நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டமை தொடர்பில் மறைந்த தலைவர் அஷ்ரபை  விசுவாசித்துக்கொண்டிருக்கும் அவரது அபிமானிகள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியிருப்பதைக் காணமுடிகிறது.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடைகளில் அவ்விமர்சனங்கள் பலமாக ஒலிக்கப்படுவதை அவதானிக்க முடியும்.
அவரின் பாசறை வாரிசுகள் நாங்கள்தானென ஆளுக்கொரு கட்சியை உருவாக்கிக் கொண்டு தேர்தல் காலங்களில் வாக்குகளைக்  பெற வருகிறார்களே தவிர, கடநத 17 வருட காலமாக மறைந்த அஷ்ரப் சமூகத்திற்காக புரியவிருந்த பணிகளை முன்னெடுத்துச் செயற்பட முஸ்லிம் அரசியலிலுள்ள எவரும் இதய சுத்தியுடன் முனவரவில்லை என்ற முனுமுனுப்பை இனி வரும் தேர்தல் காலத்தில் அவரை நேசித்தவர்களிடமிருந்து கேட்க முடியும்.
ஏனெனில் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும்
தந்தை செல்வா மற்றும் தலைவர் அஷ்ரப் சந்தைப் படுத்தப்படுவது போன்று இத்தேர்தல் சந்தையிலும் அவர்கள் வடக்கு, கிழக்கைத் தளமாக் கொண்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்  கட்சிகளினால் மக்கள் மத்தியில் சந்தைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கட்சிகளின் சின்னங்கள், தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களின் நிழற்படங்கள் என்பவற்றுடன் அன்னார்களது நிழற்படம் பதித்த போஸ்டர்கள், பெனர்களை தமிழ் மற்றும் முஸ்லிம்  பிரதேசங்களில் காண முடிகிறது.
கிழக்கு தமிழ்,  முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தந்தை செல்வா, தலைவர் அஷ்ரப் சந்தைப்படுத்தல் பெரும் துரும்பாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தருவாயில் ஆரதவாளர்களை பலிகொடுத்தும், பலியெடுத்தும் இடம்பெறுகின்ற சம்வங்கள் அரசியல் கலாசாரத்தையும் மாற்றியிருக்கிறது என்பதாககத் தெரவிக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ், முஸ்லிம்களின் தேசியமும் நிரப்பட வேண்டிய வெற்றிடமும்
தூரநோக்கோடு ஒன்றை உருவாக்கி அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, ஏனையவர்களின் ஆதரவைத் திரட்டி, தூரநோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்கப்படுத்தக் கூடிய தலைமை கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியத்துக்கு அவசிமாகவுள்ளது.  
ஒரு செயல் திறன் மிக்க தலைவர் எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார். அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கான அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார். அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஆதரவையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக் கூடிய மிக முக்கியமான அங்கத்தினர்களின் ஒத்துழைப்பையும் திரட்டுவார். அவற்றுடன் செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் பங்குகொண்டு தொழிற்படக் கூடிய நபர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துவார். அவ்வாறு ஊக்கப்படுத்துபவர்களாக விளங்கிய தந்தை செல்வாவின் மரணம் மற்றும் அஷ்ரபின் மரணம்
ஏற்படுத்தி இடைவெளி தமிழ் முஸ்லிம் தேசியத்தில் இன்னும் நிரப்பப்படவில்லை.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை நிர்ணைத்து, ஒழுங்குபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களை வகுத்து, இத்திட்டங்களைச் செயலுருப்படுத்த தம்மோடு இணைந்திருக்கும் பலரையும் ஆர்வத்தோடு பங்குகொள்ளச் செய்வதற்கும், குறித்த திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஏற்படக் கூடிய முரண்பாடுகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறக் கூடியவரகவும் தலைவர் அல்லது தலைமைத்துவம் இருக்க வேண்டும்.
தலைவர்கள், உண்மைத்தன்மை, நன்பகத்தன்மை, தூரநோக்குச் சிந்தனை, தொடர்பாடல் திறன், ஏனையவர்களுடன் சுமுகமான உறவு, செல்வாக்குச் செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்மானிக்கும் ஆற்றல், திட்டமிடல். கலந்துரையாடல் போன்ற பண்புடையர்வளாக இருத்தல் அவசியம.;
ஒரு சமூகத்தை அரசியல் ரீதியாக வழிநடத்தக் கூடிய இவ்வாறான தலைமைத்துவப் பண்புகளினால் கவரப்பட்ட கிழக்கு தமிழ், முஸ்லிம்கள் நாளுக்கு நாள் அவர் பக்கம் திரண்டன. ஆனால், இத்தகைய தலைமைத்துவப் பண்புகள் தற்போதை தமிழ், முஸ்லிம் தலைமைகளிடையே காணப்படுகிறதா?
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும்
 முஸ்லிம் காங்கிரஸின் சமகாலத் தலைமைகள் அதிகளவில் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் வழிகாட்டிய தலைமைகளின் தலைமைத்தவ பண்புகளைத் தவறவிட்டதுதான் என கட்சியின் பல அபிமானிகள் ஆதங்கப்படுவதிலும், அர்த்தமில்லாமலில்லை.
தற்போதைய தமிழ்,  முஸ்லிம் தலைமைகளை ஒப்பிட்டுபார்க்கும் தமிழ், முஸ்லிம் தேசியம் ஒட்டுமொத்த கிழக்கு தமிழ், முஸ்லிம்களையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து செயற்படக் கூடிய தலைமையை தேடுவதில் நியாமில்லாமில்லை.
ஒரு தூர நோக்கை இலக்காகக் கொண்டுதான் கட்சிகள் உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த இலக்கு நோக்கிய பயணம் அவர்களது மரணத்துடன் திசைமாற்றப்பட்டுள்ளது.
போலி வாக்குறுதிகளினாலும், ஏகாதிபத்திய தலைமைத்துவப் பண்புகளினாலும் அவர் வித்திட்ட அரசியல் புரட்சி மீண்டும் பழைய குருடி கதவைத்திறடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என கட்சிகளை உருவாக்கிய மக்கள் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை நிராகரிக்க முடியாது.
கிழக்கு தமிழ், முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவப் பலம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி, புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை வாழும் தென்னிலங்கை தமிழ், முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க வழியமைக்கும்.
தென்னிலங்கை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது முதல் சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ்,  முஸ்லிம் மாணவர்களும் விகிதாசார அடிப்படையில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம்களின் வாக்குப் பலமும் தந்தை செல்வா, தலைவர் அஷ்ரபின் இராஜதந்திர அரசியல் நகர்வுகளாகுமென்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இதனால் இன்று ஒட்டுமொத்த இடைவெளி களை நிரப்ப என்னதான் நிகழுமோ இன்றைய கிழக்கின் அரசியல் களத்துக்கு.
———————————-
(றாசிக் நபாயிஸ்)
SHARE