வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் தனஞ்செய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் 2 இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்தனர்.
தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ்
சில்ஹெட்டில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில், இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் சதம் விளாசினார்.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 280 ஓட்டங்களும், வங்கதேசம் 188 ஓட்டங்களும் எடுத்தன. இதனைத் தொடர்ந்து 92 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
நிஷான் மதுஷ்கா (10), குசால் மெண்டிஸ் (3) சண்டிமல் (0) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கருணரத்னே 52 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் கூட்டணி நங்கூரம் போல் நின்று ஆடி ஸ்கோரை உயர்த்தியது.
தனஞ்செய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்ய, கமிந்து மெண்டிசும் சதம் விளாசினார். இவர்களின் கூட்டணி 173 ஓட்டங்கள் குவித்தது. 108 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தனஞ்செய டி சில்வா ஆட்டமிழந்தார்.
511 ஓட்டங்கள் இலக்கு
அதனைத் தொடர்ந்து பிரபத் ஜெயசூர்யா 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, லஹிரு குமார டக் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக வெளியேறிய கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 418 ஓட்டங்கள் குவிக்க, வங்கதேச அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தரப்பில் மெஹிடி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், நஹித் ராணா மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தனர். ஒரே டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த இலங்கை வீரர்கள் இவர்கள் தான். இதற்கு முன்பு பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக், அஸார் அலி மற்றும் அவுஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், இயான் சேப்பல் இந்த சாதனையை படைத்திருந்தனர்.