உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று மேற்குலக நாடுகளில் அதியுச்ச மனித அழிவை ஏற்படுத்தி வருகிறது.
அதிகரித்துவரும் ரைவஸ் பரவலால் உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 58 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு பதிவாகியதுடன் நேற்று மட்டும் பல்வேறு நாடுகளிலும் 4 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 42ஆயிரத்து 158 ஆக நேற்றுப் பதிவான நிலையில் நேற்றுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78ஆயிரத்து 100ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவருகின்ற கொரோனா வைரஸ் நேற்று மட்டும் அங்கு 748 பேரை பலியெடுத்துள்ளது.
அத்துடன் தீவிர பரவலின் காரணமாக அங்கு நேற்று 24 ஆயிரத்து 742 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்கள் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 530 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 889 என்பதுடன் அதி தீவிர சிகிச்சையில் 4 ஆயிரத்து 576 பேர் இதுவரை உள்ளனர்.
இதேவேளை, கொரோனாவால் வரும் இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிகவும் வலியைத் தரக்கூடிய வாரங்களாக இருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய அளவிலான சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ள அவர், அதனை தீவிரமாக கடைப்பிடித்தால்கூட சுமார் இரண்டு இலட்சம் அமெரிக்கர்கள் வரையான உயிரிழப்புகளை வைரஸ் ஏற்படுத்தும் என்று வெளியான ஆய்வுகளை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, வரும் கடுமையான நாட்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அமெரிக்கரும் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இத்தாலியில் 837 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள அதேவேளை, மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 428 ஆகப் பதிவாகியுள்ளது. உலக நாடுகளில் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள நாடாக இத்தாலி உள்ளதுடன் அங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா தொடர்ந்து இத்தாலிக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது. இத்தாலியின் பல்வேறு நகரங்களுக்கு, மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள ரஷ்யா, ஏராளமான மருத்துவர்களையும் அங்கு அனுப்பியுள்ளது.
இதையடுத்து, ஸ்பெயின் பெரும் மனித அழிவைச் சந்தித்து வரும் நிலையில் அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 748 பேரின் உயிரை மாய்த்துள்ள கொரோனா வைரஸ் ஒரேநாளில் 7 ஆயிரத்து 967 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக இதுவரை அங்கு 95ஆயிரத்து 923 பேர் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்கள் 8 ஆயிரத்து 464 ஆகக் காணப்படுகிறது. மேலும் 5 ஆயிரத்து 600இற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளமை பதிவாகியுள்ளது.
இதையடுத்து பிரான்ஸில் அதிக உயிரிழப்புக்களை வைரஸ் ஏற்படுத்திவரும் நிலையில் ஒரே நாளில் அங்கு 499 பேரை மாய்த்துள்ளது. இதுவரை இல்லாத உயிரிழப்பைச் சந்தித்துள்ள பிரான்ஸில் மொத்தமாக 52 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் நேற்று 130 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 775ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் 71 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் அங்கு 16 ஆயிரம் பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவில் தீவிர நிலையை ஏற்படுத்தியுள்ள கொரோனா நேற்று 381 பேரின் உயிரைப் பறித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 1789ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் ஈரானில் நேற்று மட்டும் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட, பெல்ஜியத்திலும் அதிக உயிரிழப்பு நேற்றுப் பதிவாகியுள்ளது. அங்கு ஒரேநாளில் 192 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 705 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நெதர்லாந்தில் 175 பேரும், சுவிற்ஸர்லாந்தில் 74 பேரும் நேற்றைய நாளில் உயிரிழந்து்ளள அதேவேளை, துருக்கியில் 46 பேரும், பிரெஸிலில் 38 பேரும் சுவீடனில் 34 பேரும் கடந்த 24 மணிநேரங்களில் மரணித்துள்ளனர்.
இதனைவிட அயர்லாந்து, ஈக்குவடோர், ரோமானியா ஆகிய நாடுகளில் தலா 17 பேரும் ஆசிய நாடான இந்தோனேஷியாவில் 14 பேரும் என நேற்று ஒரேநாளில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த சீனாவில் வைரஸ் பரவல் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு நேற்று புதிய நோயளர்கள் 79 பேர் பதிவாகியுள்ளதுடன் உயிரிழப்பு 5 ஆக உள்ளது. அங்கு தீவிர சிகிச்சையில் 528 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.