யுத்தத்துடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் மிருசுவில்லில் 2000ம் ஆண்டு எட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவசிப்பாய் கடந்த தினம் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ்விடயம் குறித்து பரஸ்பர விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று அல்லாமல், அனைவரும் சம நீதி என்ற சர்வதேச கோட்பாடுகளுக்கு அமையாக, யுத்தம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.