இராணுவம் தமிழர் பகுதியில் காணிகளை ஆக்கிரமிப்பதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்-தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன்

486

பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று தேவையற்றதாக இருந்திருக்குமென தமிழ்த்

தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய முன்னணியின் வவுனியா அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று சர்வதேச பொறிமுறை என்பதனை நாம் எமது பார்வையில் எடுத்துக்கொள்ளும் போது யுத்தம் இடம்பெற்று மனித அழிவுகள், சொத்தழிவுகள் உட்பட பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை நிறுத்தியிருந்தால் இன்று இவ் விசாரணை தேவையற்ற ஒன்று.

எனினும் சர்வதேச விசாரணை பிழையான ஒன்று என சொல்வதற்கு நாம் தயாரில்லை. ஏனெனில் பல பிரச்சனைகளும் பேரழிவுகளும் அங்கு இடம்பெற்றிருக்கின்றது. எனவே நாங்கள் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கமுடியாது.

அத்துடன் இராணுவம் தமிழர் பகுதியில் காணிகளை ஆக்கிரமிப்பதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். அது தமிழ் பிரதேசம். அங்கு இராணுவத்தின் காணிகள் இருந்ததற்கான வரலாறுகள் இல்லை.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இதற்காக உண்ணாவிரதம் இடம்பெற்றிருந்தது. அவ்வாறான போராட்டங்களுக்கு எமது ஆதரவு என்றும் இருக்கும். எனவே அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாமும் அரசுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியுள்ளோம். அதற்கு அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என மேலும் தெரிவித்தார்

SHARE