இராணுவ முகாம்களை அகற்றும் யோசனையில் ஸ்ரீலங்கா அதிருப்தி

298

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாக தற்போதைக்கு முடிவுகள் எதனையும் எடுக்க முடியாது என அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு கூறியுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இராணுவ முகாம்கள் தடையாக இருப்பதாகவும் தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா குறித்து அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் நகல் யோசனையில் கூறப்பட்டுள்ளது.

அந்த விடயங்களை ஜெனீவாவில் உள்ள ஸ்ரீலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பாக கால அவகாசம் தேவையென கூறியுள்ளதாகவும் அது தொடர்பாக தற்போதைக்கு தீர்மானங்களை எடுக்க முடியாது என்றும் தெரிவித்ததாக ஜெனீவா தகவல்கள் குறிப்பிட்டன.

அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் நகல் யோசனைகள் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்ற அதிகாரபூர்வமற்ற சிறிய கூட்டம் ஒன்றில் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகள், அமெரிக்க இராஜதந்திரிகள் கலந்துகொண்டதாகவும் அங்கு ஸ்ரீலங்கா இராஜதந்திரிகள் இந்த விடயங்களை எடுத்துக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்காவின் நகல் யோனையில் கூறப்பட்டுள்ள கடுமையான விடயங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சின் உயர் குழு ஒன்று அமெரிக்க இராஜதந்திரிகளை ஜெனீவாவில் சந்தித்து தனியாக உரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை சந்தித்து ஸ்ரீலங்கா தொடர்பாக கூறப்பட்டுள்ள கடும் வாசகங்கள் மற்றும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பான யோசனைகளை தவிர்க்குமாறு பேசுவார் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த தீர்மானத்தின் பின்னரே இந்தியாவும் சர்வதேச விசாரணை தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

SHARE