முழு சூரிய கிரகணம் உட்பட 4 கிரகண நிகழ்வுகள் நிகழாண்டு நடைபெற உள்ளது. இதில் 2 கிரகண நிகழ்வுகளை இந்தியாவில் காணமுடியும் என மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்தார்.
நிகழாண்டில் நிகழும் கிரகணங்கள் குறித்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள அரசு ஜிவாஜி வானாய்வகத்தின் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது, நிகழாண்டில் இரு சூரிய கிரகணமும் இரு சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும். இந்நிகழ்வை இந்தியாவில் இருந்து காண இயலாது.
இதைத்தொடர்ந்து, மே மாதத்தின் 5,6 ஆம் திகதிகள் சந்திக்கும் இரவில் சந்திர கிரகண நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்தியாவிலிருந்து பார்க்க முடியும். வளைய சூரிய கிரகண நிகழ்வு ஒக்டோபர் 14, 15 திகதிகளில் நடைபெறும். இந்நிகழ்வு இரவில் நடைபெறுவதால், இந்தியாவில் இந்நிகழ்வை காண முடியாது.
அதே மாதத்தில் 28, 29 ஆம் திகதிகளில் நிகழும் பகுதியளவு சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணலாம் என அவர் தெரிவித்தார். சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரணமும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி இருக்கும் போது சந்திர கிரகணமும் நிகழ்கிறது.