இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டமையே அதிகம் : கெலும் மெக்ரே

753

 

132882288_41nவிடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சுமத்தி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் பொது மக்கள் கொல்லப்பட்டமையே அதிகம். இதற்கான சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று செனல்-4 ஊடவியலாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் எவ்வித திட்டமும் எமக்கில்லை. நாம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக நினைத்து அரசாங்கம் எம்மை எதிர்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீகொத்தாவில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினர் செய்தியாளர் சந்திப்பில் கெலும் மெக்ரே கலந்து கொண்ட போது அவர் ஊடகங்களுக்கு விசேட செவ்வியினை வழங்கினார்.
இதன்போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரின் தாக்குதலில் பொது மக்கள் உயிரிழந்தமையே அதிகம்.

யுத்தக் குற்றத்தில் அதிகளவான பங்கினை இராணுவத்தினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு சார்பாகவோ அல்லது எவ்வித நிறுவனங்களின் பெயரிலேயோ செயற்படவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளினால் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆனால் அரசாங்கம் விடுதலைப்புலிகளின் பெயரைச் சொல்லி தமது குற்றங்களை மறைத்து விடக் கூடாது.
இராணுவத்தினர் அதிகளவில் போர் குற்றங்களை செய்துள்ளனர் என்பதற்கான சர்வதேச ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் நாம் செயற்படுகின்றோம். எனவே இலங்கை அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் சுயாதீனமாக விசாரணைகளை மேற் கொள்ள வேண்டும்.

அதே போல் இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டு காலப்பகுதியில் எவராலும் எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறாதென அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

எனினும் இங்கு நாம் வந்தபோது நிலைமை தலைகீழாகவுள்ளது. எதிரணிகள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என குறிப்பிடப்பட்டவர்கள் எமக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றமை கேள்விக்குறியதான விடயமாகவே உள்ளது.

செனல்-4 காணொளிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எம் மீது பொய்க்குற்றங்கள் சுமத்தியுள்ளது.
ஆனால் எமக்குக் கிடைத்த காணொளிகள் அனைத்தும் உண்மையானவை. நாம் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு உயர் தொழிநுட்ப வசதிகள் மூலமும் இந்த காணொளிகள் குறித்து ஆராய்ந்து யுத்த குற்ற காணொளிகளைத் தயாரித்துள்ளோம்.
இவற்றினை ஐக்கிய நாடுகள் சபையும் பல கோணங்களில் விசாரித்து உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இதனை அடிப்படையாக வைத்தே நாம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய ஆரம்பித்துள்ளோம்.

விடுதலைப் புலிகளினாலும் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அவர்களும் கொலைகளைச் செய்துள்ளனர். அவை தொடர்பிலும் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம். எனவே எம்மை பக்கச்சார்பான ஊடகவியலாளர்கள் என்று குறிப்பிடுவதில் எவ்வித உண்மைகளுமில்லை.

 

SHARE