விடுதலைப்புலிகளின் தலைவரைக் காப்பாற்றும் நோக்கோடு பொக்கனைப் பகுதியில் இருந்து நந்தன், தீபன் விதுஷ உள்ளிட்ட தளபதிகள் பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கோடு கடும் சமர் ஒன்றைத் தொடுத்தனர். இதில் 380 போராளிகள் மரணத்தைத்தழுவிக் கொண்டார்கள். இராணுவத்தரப்பில் 1000த்திற்கும் மேற்பட்டோர் கொள்ளப்பட்டனர்.
இந்த யுத்தத்தின் போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. இது ஒரு பக்கம் இருக்க 57 விசேட படையணியினர் முல்லைத்தீவுக் கடற்கரையோரமாகச் சென்று முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கி முன்னேறிய படையினர் மீது முள்ளிவாய்க்கால் காட்டுப் பகுதியின் ஊடாக ஊடுருவிய விடுதலைப்புலிகளின் கரும்புலிப்படையினர் தாக்குதலை நடந்தினர். இதன் காரணமாக இராணுவத்தினர் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச் சந்தர்ப்பத்தின் போது 500ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் மரணமாகி, 1500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். விடுதலைப் புலிகளில் 250 கரும்புலிகள் மரணமாகினர். வான்படையின் தாக்குதலில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர் முள்ளிவாய்க்காலில் 20 சதுர KM பரப்பு கொண்ட பகுதியில் விடுதலைப்புலிகள் நிலை கொண்டனர். இதன் பின்னர் பொட்டு அம்மானிடம் பிரபாகரனால் போருக்கான நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. நடேசன், புலித்தேவன் போன்றோரை சரணடையுமாறு பிரபாகரன் உத்தரவிட்டார். அப்போது சரணடையச் சென்ற இருவரும் அடங்கிய குழுவினர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மாறாக சரணடையச் சென்ற புலித்தேவன், நடேசன் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர் என இராணுவம் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் மற்றுமோர் கட்டமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடுருவிய 57வது படையினர் எஞ்சியிருந்த பொது மக்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்த மீட்டெடுத்து நலன்புரி நிலையங்களில் தங்க வைத்தனர். பின்னர் அப்பகுதியில் கடும் சமர் வெடித்தது விடுதலைப்புலிகளின் பொட்டு அம்மான் குழுவினர் பல்வேறு பகுதிகளில் சென்று முன்னேறும் இராணுவத்தினர் மீது உக்கிர தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது பொட்டு அம்மான உட்பட பல மூத்த தளபதிகள் கொல்லப்பட்டதாக இராணுவத் தரப்பில் கூறப்பட்டது. படிப்படியாக விடுதலைப்புலிகள் நகர்வு முடக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் 10 சதுர KM பகுதியில் ஒடுக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி கொல்லப்பட்டார்.
பின்னர் இரு நாட்கள் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே உக்கிர சமர் நடந்தது. இந்தத் தாக்குதலின் போது பிரபாகரன் இறந்து விட்டார் (மே.18.2009) என அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக மாலை 3.00 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஏனைய செய்தி ஊடகங்களும் உறுதிப்படுத்திக் கொண்டன. இருந்தபோதும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இணையத்தளங்கள் செய்திகள் வெளியிட்டன.
பிரபாகரனின் பூத உடலைப் பார்க்கச் சென்ற கருணா அம்மான், தயா மாஸ்டர் இது பிரபாகரனின் உடல் தான் என்றனர். பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் கடலில் வீசப்பட்டதாக ஊர்ஜீதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால், நவம்பர் -27.2010ம் ஆண்டில் மாவீரர் தின உரையாற்றுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் உரையாற்றவில்லை. இன்றுடன் பிரபாகரன் மரணித்து மூன்று ஆண்டுகள் முற்றுப் பெற்றன, யுத்தம் முழுமையாக முற்றுப் பெற்றது யுத்தம் முற்றுப் பெற்ற போதிலும் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(இரணியன்)