இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் ஜெனீவாவை நோக்கி நகர்த்தப்பட்டு ஏழு ஆண்டுகளாகியிருக்கின்ற சூழலில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடந்து
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து வைத்ததால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜெனீவாவுக்குப் பதிலளிக்க வேண்டிய அழுத்தங்களை தமது அரசாங்கம் எதிர்கொண்டதாக, ஆட்சியை இழந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.
போருக்குப் பின்னர், ஜெனீவாவில் முன்னைய அரசாங்கம் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது.
ஆட்சியிலிருந்த வரைக்கும் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் ஜெனீவா அழுத்தங்களை பெரியதொரு விடயமாக வெளிப்படுத்தவில்லை. வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாதது போன்றே பிரசாரங்களை மேற்கொண்டது.
ஆனால், ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் ஜெனீவாவில் கடுமையான அழுத்தங்களை சந்திக்க நேரிட்டது என்பதை வெளிப்படையாகவே கூறியிருந்தனர்.
கலாநிதி தயான் ஜயதிலக, கலாநிதி ராஜீவ விஜேசிங்க போன்ற இலங்கையின் முன்னாள் இராஜதந்திரிகள், இந்த அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்ள நேரிட்டது என்பது பற்றி பின்னர், ஊடகங்களில் கட்டுரைகளையும் எழுதியிருந்தனர்.
மஹிந்த ராஜபக் ஷ அரசுக்கு ஜெனீவா என்பது சிம்மசொப்பனமான விவகாரமாகவே மாறியிருந்தது.
ஜெனீவா நெருக்கடிகள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது தான், மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தியிருந்தார்.
அவர் தேர்தலை ஏன் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே நடத்த முனைந்தார்? என்பது பற்றிய சந்தேகங்கள் இப்போதும் எழுப்பப்படுகின்றன.
ஜெனீவா நெருக்கடியிலிருந்து தப்பிக்கவா அந்த முடிவு எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அண்மையில் இந்தக் கேள்வியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எழுப்பியிருந்தார்.
போருக்குப் பின்னர், இலங்கையின் அரசியலையும் – அரசாங்கத்தையும் ஆட்டிப் படைக்கின்ற ஒரு கருவியாக ஜெனீவா மாறியது.
இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? எங்கிருந்து ஆரம்பித்தது? எங்கு போய் முடியப் போகிறது? இந்தக் கேள்விகளுக்கு கடந்துபோன வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, விடை தேடுகிறது இந்தத் தொடர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் போர், 2009 மே 19ஆம் திகதி முடிவுக்கு வந்த பின்னர், புதிய போர்க்களம் ஒன்று ஜெனீவாவில் திறக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர், ஜெனீவாவில், இலங்கையில் தமிழர்களுக்கு நீதிகோரும் போராட்டங்கள் புலம்பெயர் தமிழர்களால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், 2009இல் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தான் ஜெனீவாவில் இன்னொரு போர் முனை பகிரங்கமாகத் திறக்கப்படும் நிலை உருவானது.
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களும் தான், ஜெனீவாவில் புதிய போர்க்களம் திறக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தன.
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்த கையுடன், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் நிகழ்ந்த பேரவலங்கள் பற்றிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கின.
அரசாங்கம் முன்னர் கூறிவந்ததற்கு மாறாக, இரண்டரை இலட்சம் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி வந்து வவுனியாவிலுள்ள முகாம்களில் அடைக்கப்பட்ட போது, சர்வதேச சமூகம் திகைத்துப் போனது.
சர்வதேச சமூகத்தினதும், ஊடகங்களினதும் கண்களை மறைத்துவிட்டு ஒரு கொடுமையான போர், வன்னியில் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டது.
இங்கிருந்து தான், இலங்கை அரசின் கழுத்தில் முடிச்சுக்கள் போட ஆரம்பிக்கப்பட்டன. ஜெனீவா களமுனைக்கான திறவுகோலாக முள்ளிவாய்க்காலைக் குறிப்பிடலாம்.
மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்தபோது சர்வதேச சமூகம் அதனைக் கொண்டாடி வரவேற்கத் தவறவில்லை.
போர் முடிவுக்கு வந்ததாக அரசாங்கம் அறிவித்த பின்னர், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
“இலங்கையில் இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதேவேளை, பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்.
இலங்கையில் மோதல்கள் நடைபெற்றபோது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதற்கு நாம் ஆதரவளிப்போம்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் எங்கெல்லாம் மீறப்படுகின்றனவோ அங்கெல்லாம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
பல நூற்றாண்டு காலமாக சமூகங்களைப் பிரித்து வைத்ததனால் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மருந்து போட வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அதற்கு ஐ.நா. உதவத் தயார் என்றும் அந்த அறிக்கையில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் தெளிவாகக் கூறியிருந்தார்.
இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மீறல்கள் தொடர்பான, போர்க்குற்ற விசாரணைகளுக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்தவர்கள் இருவர்.
அவர்களில் ஒருவர் தான் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.
இரண்டாமவர் யார் என்று பார்ப்பதற்கு முன்னதாக, பான் கீ மூன் எவ்வாறு இதனைத் தொடக்கி வைத்தார், அவரது பொறியில் மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு மாட்டிக் கொண்டார் என்று பார்க்கலாம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் விடுத்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் அவ்வளவு தீவிரமான விடயமாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. இதற்குப் பின்னால் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்று கருதியிருக்கவுமில்லை.
போர் முடிந்ததாக அரசாங்கம் அறிவித்த அடுத்தடுத்த நாட்களிலேயே ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கொழும்பில் வந்து இறங்கினார்.
அவர் கொழும்பு நோக்கிப் புறப்படுவதற்கு முன்னதாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.
2009 மே 22 ஆம் திகதி பின்னிரவில் இலங்கை வந்த அவர், விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியை வானத்தில் இருந்தே பார்வையிட்டார்.
வவுனியாவில் இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலிகளுக்குப் பின்னால் அடிப்படை வசதிகளற்ற கூடாரங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மெனிக் பாம் முகாமுக்கும் சென்றிருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் முகாமில் இருந்த மக்களுடன் பான் கீ மூன் கலந்துரையாடினார். ஐ.நா. பொதுச்செயலருடன் நிழல் போலத் தொடர்ந்த புலனாய்வாளர்கள், மக்களை மறைமுகமாக அச்சுறுத்திக் கொண்டிருந்ததுடன், யாராவது எதையாவது சொல்கிறார்களா என்று தகவல்களையும் திரட்டிக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் பான் கீ மூன், கண்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து பேசப்பட்டது.
அந்தப் பேச்சுக்களின் முடிவில், ஒரு கூட்டறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனும் இணைந்து வெளியிட்டனர். மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கூட்டறிக்கையில் ஒன்றுமில்லாதது போலத்தான் இருந்தது.
ஆனால், அதுவே மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு பெருந்தலைவலியை ஏற்படுத்துவதற்கு பான் கீ மூன் போட்ட பிள்ளையார் சுழி என்பது பின்னரே தெரிய வந்தது.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை வந்திருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அவரைச் சந்திக்க விடாதபடி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், இலங்கையை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்திக்க ஏற்பாடு செய்து தரலாம் என்று அரசாங்கம் கூறியது.
அதனை நம்பி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்க, அவர்களின் கண்களில் படாமலேயே, கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம், ஏற்றிச் சென்று, பான் கீ மூனை கொப்பன்ஹேகனுக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தது அரசாங்கம்.
“அப்பாடா பான் கீ மூன் போய் விட்டார்” என்று அரசாங்கத்தினால் நிம்மதி கொள்ள முடியவில்லை.
ஏனென்றால், அடுத்த தலைவலி அப்போது தான், ஜெனீவாவில் முளைகொள்ளத் தொடங்கியிருந்தது.
அது என்ன? பான் கீ மூன்- மஹிந்த ராஜபக் ஷ இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இடம்பெற்றிருந்தவை என்ன? போர்க்குற்ற விசாரணைக்குப் பிள்ளையார் சுழி போட்ட இரண்டாமவர் யார்?
ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. பொதுச்செயலர்பான் கீ மூன், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தக் கூட்டறிக்கையின் அடிப்படையில் தான், இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஐ.நா.வின் அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கத்தை தெரிந்தோ, தெரியாமலோ, சிக்கலுக்குள் மாட்டிவிட்ட கூட்டறிக்கையின் மிகமுக்கியமான பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததையடுத்து, போருக்குப் பிந்திய புதிய சூழலுக்குள் இலங்கை பிரவேசிக்கிறது என்பதை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் உதவி, புனர்வாழ்வு, நல்லிணக்க விவகாரங்களில், பல உடனடி மற்றும் நீண்டகால சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதேவேளை, வடக்கில் நீண்டகால அபிவிருத்திகளை மேற்கொள்ளவும், ஜனநாயக நிறுவனங்களையும் தேர்தல் அரசியலையும் மீள நிறுவுவதற்கும், இந்தப் புதிய சூழல் இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர் வாய்ப்புகளை அளித்திருக்கிறது.
தனது திட்டங்களின் ஊடாக, வடக்கில் உள்ள மக்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
எல்லா சமூகங்களினதும், அபிலாஷைகள் மற்றும் குறைகளை தீர்த்து வைத்து, நீண்டகால சமூக, பொருளாதார, அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் அடிப்படையில், நிலையான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கிப் பணியாற்றுவதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனும் இணங்குகின்றனர்.
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின் அடிப்படையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பதிலும், இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை பாதுகாப்பதிலும், தாம் உறுதிபூண்டிருப்பதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களுக்கு தீர்வு காணும், பொறுப்புக்கூறும் செயல்முறைகள் முக்கியமானவை என்று ஐ.நா. பொதுச்செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனக்குறைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” இவையே கூட்டறிக்கையின் மிக முக்கியமான- அரசாங்கத்தைச் சிக்கலில் மாட்டிய பகுதிகள்.
வெறுமனே பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்களை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டறிக்கை அமைந்திருக்கவில்லை.
வடக்கில் மீண்டும் தேர்தல் அரசியல் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடக்கம், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு உள்ளிட்ட எல்லா விடயங்களையும் அது உள்ளடக்கியிருந்தது.
இந்த கூட்டறிக்கையின் கடைசிப் பந்தியில் தான், இலங்கை அரசாங்கம் ஐ.நா.வின் பொறியில் மாட்டிக்கொண்டது.
போரின் போது இடம்பெற்ற சர்வதேச சட்டமீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற ஐ.நா. பொதுச்செயலரின் கருத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக் கொள்வதாக அதில் இணங்கியிருந்தார்.
ஐ.நா. பொதுச்செயலரின் மனக்குறைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற அந்த வாக்குறுதி தான், இலங்கை அரசாங்கத்தைப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.
இந்தக் கூட்டறிக்கையை வெளியிட முன்னர், வெளிவிவகார அமைச்சுக் கண்ணை மூடிக் கொண்டிருந்ததா என்ற பரவலான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
ஏனென்றால், பொறுப்புக்கூறல் சார்ந்து சர்வதேச சமூகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு உறுதி ஆவணமாகவே இது பார்க்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் மற்றும் ஜெனிவாவில் இப்போதும் ஐ.நாவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும், இந்த ஆவணத்தை முன்னிறுத்தி நியாயப்படுத்தப்படுகின்றன.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது இருந்த அரசியல் சூழல், அரசாங்கத்தினதும், மூத்த இராஜதந்திரிகளின் கண்களை மறைத்து விட்டது. வெற்றி கண்ணை மறைக்கும் என்பது போலத் தான் இதுவும் நடந்தது.
பான் கீ மூன் கொழும்புக்கு வந்திருந்த காலகட்டத்தில் ஒரு பக்கத்தில் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. வெற்றியின் மமதையின் உச்சியில் அரசாங்கம் நின்றுகொண்டிருந்தது. தலைகால் புரியாத சந்தோசம், தென்னிலங்கையில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்றையும் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.
அந்த நெருக்கடியை வெற்றி கொள்வதில் கவனம் செலுத்திய முக்கிய இராஜதந்திரிகள், ஐ.நா. பொதுச்செயலருடனான கூட்டறிக்கை விடயத்தில் கோட்டை விட்டு விட்டனர்.
ஐ.நா. அதிகாரிகளால் அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட அந்தக் கூட்டறிக்கை, பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கம் இணங்குவது போன்று சூட்சுமமாகத் தயாரிக்கப்பட்டிருந்ததை இலங்கையின் மூத்த இராஜதந்திரிகள் சரியாக கண்டுகொள்ளவில்லை.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் கடந்த ஆண்டு, ஐ.நாவுடன் இணங்கிச் செயற்பட, தற்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் முடிவு செய்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்த அரசாங்கம் படையினரைக் காட்டிக் கொடுத்து விட்டதாகவும், விசாரணைகளில் சர்வதேச தலையீட்டுக்கு வழிகோலி விட்டதாகவும், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்கு மறுப்பு வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜெனீவா தீர்மானத்துக்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு, 2009 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்ட கூட்டறிக்கை தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மே மாதம் 15ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எழுதியிருந்த ஒரு நீண்ட கடிதத்திலும் கூட இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
“2009ஆம் ஆண்டில், ஐ.நா. பொதுச்செயலருடன் இணைந்து நீங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தான், 2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார் மங்கள சமரவீர.
ஐ.நா. பொதுச்செயருடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை ஒரு தொடரான அரசியல் விளைவுகளுக்கு காரணமாக அமையும் என்றோ, அதுவே தன்னைப் படுகுழியில் தள்ளிவிடும் என்றோ மஹிந்த ராஜபக் ஷ ஒருபோதும், எண்ணியிருக்கவில்லை.
இந்தக் கூட்டறிக்கையின் விளைவினால் தான், ஐ.நாவின் தலையீடு இலங்கையில் ஏற்பட்டது என்பது தொடர்பாக, 2010ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஒரு சூடான விவாதம் நடந்திருந்தது.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கும் இடையில் நடந்த அந்த விவாதம் என்னவென்று, இந்தத் தொடரின் மற்றொரு சந்தர்ப்பத்தில் தரப்படும்.
இந்த நிலையில், போரின் போது நடந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதற்குப் பிள்ளையார் சுழி போட்ட இரண்டாவது நபர் யார் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
இறுதிக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக இருந்தவர் ரொபேர்ட் ஓ பிளேக். போரின் முடிவு எவ்வாறானதாக இருக்கக்கூடும் என்று, போர் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே சரியாகக் கணித்தவர் இவர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போர், தொடங்கப்பட்ட காலத்தில்- 2006ஆம் ஆண்டு இவர், வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியிருந்த ஒரு தகவல் குறிப்பில், மன்னாரில் தொடங்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள், புலிகளை அழிவு நிலைக்குக் கொண்டு செல்வததற்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த இராஜதந்திர தகவல் குறிப்பு பின்னர் விக்கிலீக்சில் வெளியாகியிருந்தது.
போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் தான், இலங்கைக்கான தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக்கின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. அவர் அதற்கடுத்து, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டிருந்தார்.
புதிய உயர் பதவிக்குச் செல்லவிருந்த ரொபேர்ட் ஓ பிளேக், அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷச் சந்தித்தார். போரில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக் கூறுவதற்கும், இலங்கையில் இருந்து செல்வதற்கு முன்னர் விடைபெறுவதற்குமான மரியாதை நிமித்தமான சந்திப்பு அது.
அந்தச் சந்திப்பில் நடந்தது என்ன? பிளேக் எவ்வாறு பொறுப்புக்கூறலுக்குப் பிள்ளையார் சுழி போட்டார்?