சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் டுபாயில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் புதிய தலைவர் சம்மி சில்வா,செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
கடந்த வருடம் மே மாதம் முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தால் இலங்கையின் உறுப்புரிமையை தற்காலிகமாக தடைசெய்ய ஐ.சி.சி நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அதன் கூட்டங்களில் மேற்பார்வை உறுப்பினராக செயற்படுவதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன், இலங்கைக்கு கிடைக்கவேண்டிய நிதிகளையும் தேர்தல் நடைபெறும்வரை இடைநிறுத்துவதற்கும் ஐ.சி.சி நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தப் பின்னணியில் தான் கடந்த இரண்டு நாட்களாக டுபாயில் நடைபெற்ற ஐ,சி.சியின் செயற்குழுக் கூட்டத்தில் சம்மி சில்வா உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
இதன்டி, கடந்த 9 மாதங்களாக தற்காலிமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஐ.சி.சியின் நிதியினை இலங்கைக்கு வழங்குவதற்கும், ஐ.சி.சியின் முழுமையான உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், ஐ.சி.சியின் பணிப்பாளர்கள் சபையுடன் நடத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைக்க வேண்டிய 11.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (200 கோடி ரூபா) நிதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டி, இலங்கை அணியின் எதிர்கால சுற்றுப்பயணங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 2019 ஆசியக் கிண்ணத்தை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.