தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் முற்றுப்பெற்று 06ஆண்டுகளைக் கடந்துள்ள நிலை யில் குறிப்பாக 2000இற்குப் பின்னர் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளை கண்டுகொள்ளாத சர்வதேசம் இன்று போர்க்குற்ற விசாரணை என்று ஐ.நா சபையில் அலட்டிக்கொள்வதென்பது காலத்தை வீணடித்து, தமிழ் – சிங்கள இனத்திற்கு ஒரு சுமுகமான நிலை மையினை தோற்றுவிப்பதுடன் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு அதனை இடை நிறுத்துவதாகும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்கள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளால் பல்வேறு தடவைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இவையணைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது எனலாம். முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து அகதிகளாக தஞ்சமடைந்திருந்த காலத்திலும் இந்த சர்வதேசங்கள் பார்த்துக்கொண்டிருந்தன.
ஈராக், ஈரான், சிரியா, வட கொரியா, மியன்மார், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் யுத்தத்தை திட்டமிட்டே அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகள் ஏவிவிட்டிருந்தன. இதற்கான உடனடித் தீர்வுகளையும் அவர்கள் பெற்றுக்கொடுத்திருந்தனர். ஆனால் இன்னமும் இந்நாடுகளில் எங்காவது ஒரு பகுதியில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக் கின்றது. அதிகூடிய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே வருகின்றனர். அங்கு கந்தகார் போன்ற பகுதிகளில் லக்சரி தொய்பா, ஹமாஸ், அல்கைதா போன்ற பல்வேறு இஸ்லாமிய தீவிர வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கையில் மாத்திரம் விடுதலைப்புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும் சர்வதேச நாடுகள் அழித்தொழிப்பதில் தீவிரம் காட்டியது ஏன்? கடல், வான், தரை, தற்கொலை என இந்த நான்கு படை களையும் விடுதலைப்புலிகள் கொண் டிருந்தமையா? இல்லை. பிராந்திய வல்லரசுகள் தமது பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்வதற்காக விடு தலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக இணைந்து அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் இன்னமும் யுத்தம் இடம்பெறுகிறது. சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டம், வளர்ச்சி என்பது உலகமே வியக்கும் அளவிற்கு அதனது செயற்பாடுகள் அமைந்திருந்தது. விடுதலைப்புலிகளது யுத்தப்பொறிமுறை 04 கட்டங்களாக மாற்றம் பெற்றது. ;விடுதலைப்போராட்டத்தின் வளர்ச் சியால் இலங்கையில் இன்னு மொரு நாடு உருவாகும். நீதி, நிர்வாகம் போன்ற துறைகளை கட்டமைப்பாக விடுதலைப்புலிகள் கொண்டிருந்தமையின் விளைவாக விடுதலைப்புலிகளையும் போராட் டத்தினையும் அழித்தொழிக்க சர்வதேசம் திட சங்கற்பம் பூண்டது. விடுதலைப்புலிகளுடைய வளர்ச்சி எவ்வாறிருந்தது என்பது பற்றி பார்க்கும்போது, ஈழப்போர் வரலாற்றில் இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலை யில் இருந்து உலகில் வேறெங்கும் நிகழாத வரலாற்றுப் பதிவை உருவாக்கிய பிரபாகரன் மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும், நான்காம் கட்ட ஈழப்போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில், ஒரு மென்தீவிர யுத்தத்தினை கையாண்டார். அந்தக் காலகட்டத்தில், இருதரப்புமே ஆட்லறிகள், மோட்டார்கள், கொண்டு மோதிக்கொள்ளாவிட்டாலும், தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன. துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒரு வரையொருவர் சுட்டுக்கொன்றன. ஆழ்கடலில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. கடற்படைக் கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல்களும் நடந்தன. அதேவேளை, கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடந்தன. இந்த மென்தீவிர யுத்தம் பிற்காலத்தில், குறிப்பாக, 2005 டிசம்பரில், சரத் பொன்சேகா இராணுவத் தளபதியா கப் பொறுப்பேற்ற பின்னர், கிளைமோர் தாக்குதல்களும் இடம்பெற்றன. இது தனியே இராணுவத்தினர் மீது இராணு வக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம்பெற்றன.
மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடிய பின்னர், அதனைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அது நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கம் எனலாம். அத்துடன், ஆட்லறி தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் ஆரம்பமாகின. ஆனாலும், போர்நிறுத்த உடன்பாடு நூலிழை யில் தொங்கிக்கொண்டிருந்தது. கடைசியாக, 2006 ஓகஸ்ட் 11ம் திகதி, முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து, நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது.
ஈழப்போர் வரலாற்றில், மிகவும் நீண்டதும், போரிடும் தரப்பினருக்குப் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியதுமான மூன்றாம் கட்ட ஈழப்போர், விடுதலைப் புலிகளை சமபலம் கொண்ட சக்தியாக, இலங்கை அரசை ஏற்க வைத்ததுடன் நிறைவுக்கு வந்தது. 2002 பெப்ரவரியில், போர்நிறுத்த உடன்பாடு முறைப்படி கையெழுத்திடப்பட்ட பின்னர், 2006 ஜூலையில் மாவிலாறில் போர் வெடிக்கும் வரை, ஒரு நீண்ட அமைதியையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, போரற்ற அந்த அமைதி நிலை நீடித்தது. அதனை முழுமையான அமைதி நிலை என்று கூறமுடியாது. இன்னொரு போருக்கான ஆயத்தநிலை என்று உறுதியாகக் கூறலாம்.
ஆரம்பத்தில், அமைதியான சூழல் நிலவியபோதும், பின்னர் மெல்ல மெல்ல ஒரு நிழல் யுத்தத்தினுள் அந்த அமைதிக்காலம் நுழைந்தது. ஒரு கட்டத்தில் அது ஒரு மென்தீவிர யுத்தமாக மாறியது. கடைசியாக அந்த அமைதியை முறித்துக்கொண்டு நான்காவது கட்ட ஈழப்போர் வெடித்தது. போர்நிறுத்தம் நடைமுறை யில் இருந்தபோதிலும், இருதரப்புமே தம்மைப் போருக்குத் தயார்ப்படுத்திக் கொண்ட அமைதிக்காலம் அது. அந்தக் காலகட்டத்தில், இராணுவத் தலைமையக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டும் மற்றொரு ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. அந்த ஆய்வை செய்திருந்தவர் மருத்துவ கலா நிதி ருவான் ஜெயதுங்க. இலங்கையில் போரிடுவோரை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட, போர் அழுத்தங்களின் உளவியல் முகாமைத்துவம் (Psychological Mana gement of Combat Stress – A Study Based on SriLankan Combatants) என்ற ஆய்வே அது. அந்த ஆய்வுக்காக, இராணுவத்தரப்புக் கொடுத்த புள்ளிவிபரங்களின் படி, மூன்று கட்ட ஈழப்போர்களிலும் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 17,066 ஆகும். அந்தக் காலகட்டத்தில், 9220 அதிகாரிகளும், 20,266 படையினருமாக, மொத்தம், 29,486 படையினர் காயமடைந்து, உடல் உறுப்புகளை இழந்ததாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தரப்பில் அந்தக் காலகட்டத்தில் 17,903 பேர் மரணமா னதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இராணுவத் தலைமையகத்தினால், அண்மையில் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, காணாமற்போனவர்களையும் சேர்த்து, மூன்றாம்கட்ட ஈழப்போரின் முடிவில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 18,123 ஆகும். (ஈழப்போர் -1இல்-1031 பேர், ஈழப்போர்-2 இல் 4535 பேர், ஈழப்போர்-3 இல் 12,557பேர்). இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, காணாமற்போனவர்களை கொல்லப்பட்டவர்களாக இராணு வத்தரப்பு கணிக்கவில்லை.
இதனால், மூன்று கட்ட ஈழப்போர்களிலும் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட, 3718 படையி னரையும் உள்ளடக்காமலேயே, அந்த ஆய்வுக்காக, 17,903 படை யினர் கொல்லப்பட்டதான தரவு வழங்கப்பட்டுள்ளது என்று கருதலாம். இந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட தரவி லும், அண்மையில் வழங்கப்பட்ட தரவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், காணாமற்போன படையினர் இதில் உள்ளடக்கப்படாது போனால் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை காணலாம். அதுபோலவே, மூன்று கட்ட ஈழப்போர்களிலும், படுகாயமடைந்து அங்கவீனமடைந்த படையினரின் மொத்தத்தொகை, 29,486 என்று கூறுகி றது இந்த ஆய்வு. ஆனால், இராணுவத் தலைமையகம் அண்மையில் வழங்கிய, ஈழப்போர்கள் பற்றிய தனித்தனியான புள்ளிவிபரங்களின்படி, மூன்று கட்ட ஈழப்போர்களிலும் படுகாயமடைந்த படை யினரின் மொத்த எண்ணிக்கை, 15,606 ஆகும். (ஈழப்போர்-1இல் – 180 பேர், ஈழப்போர்-2 இல் 2671 பேர், ஈழப்போர் -3 இல் 12,755 பேர்). இதன்படி, ஆய்வு அறிக்கைக்கு வழங்கப்பட்ட தரவுக்கும், இந்தத் தரவுகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம். இதில் சரியான எண்ணிக்கை எது என்று, சுயாதீன மான தரப்புகளால் முடிவுக்கு வருவது முடியாத காரியம். இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போன்று, போர் தொடர்பாக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் பெரியளவில் முரண்பாடுகள் இருந்தன என்பதே முக்கியமானது. ஆழ்கடலில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
கடைசியாக, 2006 ஓகஸ்ட் 11ம் திகதி, முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து, நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது. அந்தப்போர் 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கும் வரை, ஓயாமல் நடந்தது. முகமாலையில் புலிகள் தொடுத்த போர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதற்காக புலிகள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளிலும் தரையிறங்கினர். ஆனால், முகமாலை முன்னரங்கை உடைத்து எழுதுமட்டுவாள் வரை முன்னேறிய புலிகளால் கிளாலிப் படைத்தளத்தை வீழ்த்த முடியாது போனது. அதுபோலவே மண்டைதீவு, அல்லைப்பிட்டியிலும் தொடர்ந்து தாக்குப்பிடிக்கமுடியாது போனது. அதனால், புலிகளின் யாழ்ப்பாணம் மீதான தாக்குதல் திட்டம் பிசுபிசுத்துப் போய் கைவிடப்பட்டது. எனினும், நான்காவது கட்ட ஈழப்போரில் வடமுனையில் நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி இராணுவ வேலியை கடைசிவரை பாதுகாப்பதில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனையிறவைப் படை யினர் கைப்பற்றும் வரை அதைத் தக்கவைத்துக்கொண்டனர்.
நான்காவது கட்ட ஈழப்போரில், கிழக்கில் மூதூரைக் கைப்பற்றும் ஒரு தாக்குதலையும் புலிகள் நடத்தினர். ஆனால், சில நாட்களிலேயே அந்த முயற்சியும் படையினரால் முறியடிக்கப்பட்டது. இருவாரங்களுக்கு முன்னர், புத்தளம் கருவெலகஸ்வௌ பகுதியில் நடந்த வாகன விபத்தில் மரணமான, கேணல் ரவீந்திர ஹன்துன்பத்திரன இந்த முறியடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர். அப்போது மேஜராக இருந்த அவரது தலைமையி லான 2வது கொமாண்டோ படைப்பிரிவு தான், காலாற்படையினருடன் இணைந்து மூதூர் பிரதேசத்தில் புலிகளி டம் இழந்த பிரதேசங்களை மீட்டது.
நான்காவது கட்ட ஈழப்போரின் முக்கியமான ஒரு விடயம், விடுதலைப் புலிகளின் ஆட்லறிகள் கிழக்கிற்கும் பரவலாக்கப்பட்டது தான். 122மி.மீ, 130மி.மீ, 152மி.மீ ஆட்லறிகளை விடுதலைப்புலிகள் திருகோணம லையிலும், மட்டக்களப்பிலும் நிறுத்திச் சண்டையிட்டது ஈழப்போர் வரலாற்றில் அதுவே முதன்முறை. புலிகள் திருகோ ணமலைத் துறைமுகம், கடற்படைத் தளங்கள் மீது ஆட்லறிக் குண்டுகளை பொழிந்தபோது. அரசாங்கம் ஆடிப் போனது உண்மை.
அதுபோலவே இன்னொரு விடயம், விடுதலைப்புலிகளின் விமானப்படை.சில இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலை யில் இருப்பதாக ஏற்படுத்திக்கொண்ட பிம்பம், அரசின் போர்த்திட்டத்தில் கணி சமான தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்றுவரை உலகில் அரசு இல்லாத அமைப்பு ஒன்று விமானப்படையை வைத்திருந்து, குண்டுகளை வீசிய தான வரலாறு பதிவாகவில்லை. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இனிமேல் உலகில் வேறெங்கும் அப்படியொரு வரலாற்றுப் பதிவு உருவாகும் என்று எதிர்பார்ப்பதும் கடினம். நான்காவது கட்ட ஈழப்போர், இரண்டு தரப்புமே நவீன தொழில்நுட்பங்களையும், தந்திரோபாயத் தாக்குதல்களையும் கொண்டதாகவே தொடங்கியது.
தொடரும்…
– இரணியன் –