இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயமும் எதிரணியின் ஏமாற்றமும்
ஜனாதிபதி அநுர குமார திசாநயக்கவின் முதலாவது வெளிநாட்டு விஜயமாக அமைந்தது இந்தியாவுக்கான விஜயம். ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றிவாகை சூடிய ஜனாதிபதியின் இந்திய விஜயம் ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் பூரண அரச மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க, இந்திய இராணுவ அணிவகுப்புடன் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அநுர குமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பளித்தனர். ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஒன்றிணைந்து ஒரு வெளிநாட்டுத் தலைவரை இவ்விதம் வரவேற்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதலாவது முறையாகும்.
முதலாவது நாளன்று இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அதேநாள் இரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் இலங்கைக் குழுவினருடன் இந்திய உபஜனாதிபதியும் ராஜ்யசபா சபாநாயகருமான ஜகதீப் தங்கருடன் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
16 ஆம் திகதி இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2022 ஆம் ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து போது இந்தியா, இலங்கைக்கு வழங்கிய 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கை பற்றியும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டம் பற்றியும் இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி.
நல்லாட்சிக்கான தேசிய மத்திய நிலையத்தினூடாக 5 வருடங்களில் இலங்கையில் அரச சேவையாளர்கள் 1500 பேருக்கு பயிற்சியளிக்கவும் இருநாட்டுத் தலைவர்களும் உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக இலங்கை_ இந்திய அரசின் உதவியை பெற்றுக் கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார். இலங்கையில் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாகவும் மத, கலாசார, சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 1984 இல் நிறுத்தப்பட்ட தலைமன்னார்_ இராமேஸ்வரம் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா கடன் உதவி இல்லாமல் உதவியை அன்பளிப்பாக வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார். இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளவும் இரு நாட்டுத் தலைவர்களும் உடன்பட்டனர்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் மற்றும் பிராந்திய நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையைப் பயன்படுத்த தாம் இடமளிக்கப் போவதில்லையென இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான ஜே.பி.நட்டா வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோ அல்லது சந்திப்பதோ கிடையாது. எனினும் ஜனாதிபதி அநரவுடன் இம்முறை நீண்ட நேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பற்றி ‘த ஹிந்து’ பத்திரிகையில் மிக முக்கியமான சந்திப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மீனவர் பிரச்சினை தொடர்பாக இதுவரை வடமாகாண மீனவர் சங்கம் தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்திருப்பினும் இதுவரை உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இலங்கையில் எதிர்க்கட்சிகள் அநுரவின் இந்திய விஜயம் தொடர்பாக குறை காண்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தபடி ஜனாதிபதி அநுர இந்தியாவில் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்காமையினால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்தன. அதானி குழுமத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில் கைச்சாத்திடப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம், கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனை அபிவிருத்தி போன்ற உடன்படிக்கைகள் தொடர்பாக இம்முறை இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் பேசப்படுமென எதிர்க்கட்சிகள் எதிர்பார்திருந்தாலும், அவ்வாறான எந்தவொரு பேச்சுக்களும் இடம்பெறவில்லை. 13 ஆவது அரசியல் திருத்தம் பற்றிப் பேசப்படுமென்று எதிர்பார்த்தனர். அவ்வாறான எந்தவொரு தலைப்பும் பேசப்படவில்லை.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை வைத்து அரசியல் செய்வதற்கு ஏதாவது துரும்பு கிடைக்குமென நினைத்திருந்த எதிரணியினருக்கு மிஞ்சியது, பிரதமர் நரேந்திரமோடி அநுரவின் தோளின் மீது கைபோட்டு அரவணைத்துச் சென்றது மட்டுமே.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்கம்பிகளின் ஊடாகவும், மசகு எண்ணெய் குழாய்கள் ஊடாகவும் தொடர்புகளை ஏற்படுத்துதல் தொடர்பாக இருதலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில், இந்திய விரிவாக்கத்திற்கு உடன்படல் போன்றதொரு மாயவிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த எதிரணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் காணக்கூடியதாக இருந்தது.
எதிர்க்கட்சிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான காலத்தில் தற்போது இருப்பதையே உணர முடிகின்றது. உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியுடன் நாடு முன்னோக்கிச் செல்வதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
எட்கா உடன்படிக்கையினால் இந்தியத் தொழிலாளர்கள் நமது நாட்டிற்குள் ஊடுருவி விடுவார்கள் எனவும், எமது இளைஞர் யுவதிகள் தொழிலின்மையால் பாதிக்கப்படுவார்கள் எனவும் விமல் வீரவன்ச கூறியதை மக்கள் பொருட்படுத்தவுமில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதிர்க்கட்சிகளுக்கு தற்போது நினைவில் இல்லை. அக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் இருந்த ‘நாட்டுப் பற்றாளர்கள்’ என தங்களைக் கூறிக் கொண்டவர்கள் யாரும் அன்று அதனை எதிர்க்கவில்லை.
ஜனாதிபதி அநுர அரசின் வெளிநாட்டுக் கொள்கையானது எந்த அணியுடன் சேராததும், உலகிலுள்ள எல்லா நாடுகளுடனும் பரஸ்பர புரிந்துணர்வோடு நவீன காலத்திற்கேற்றவாறு செயற்படுதலுமாகும். இதனையே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்திய விஜயம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் ஊடகவியலாளர்களிடம் தெளிவாகக் கூறி இருந்தார். கடந்த கால அரசாங்கம் போலல்லாது எல்லா நாட்டினருடனும் உறவுகளைப் பேணுவோம் என்று அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்தின் பின்னர் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக 15000 அலகுகளை தாண்டியது. ஒரே நாளில் 8.44 பில்லியன் ரூபாவிற்கு வர்த்தகம் நடைபெற்றிருந்தது. என்பதும் குறிப்பிடத்தக்கது
இரணியன் thinappuyal news