இலங்கையின் போர்க்குற்றப் பின்னணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் சிக்கிக்கொள்ளுமா?

466

இலங்கையில் 30வருட காலப் போராட்டம் 18.05.2009 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் இன்று போர் முடிந்துவிட்டது. போர்க்குற்ற விசாரணைகள் துரித கதியில் விசாரிக்கப்படவேண்டும் எனக்கூறிக்கொள்ளும் அமெரிக்கா, போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக பின்னணியில் செயற்பட்டதும், காலத்திற்குக்காலம் தனது அரசியல் நகர்வுகளை மாற்றியமைத்தும் வருகின்றது என்பதே உண்மை.

சீனாவின் தலையீடின்றி இலங்கை தேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதே அமெரிக்காவின் நீண்டகால குறிக்கோள். அதற்காகவே இந்த ஆட்சிமாற்றமும் கொண்டுவரப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எனவும், சர்வதேச விசாரணைகள் மற்றும் உள்ளாட்டு விசாரணைகள் என மாறி மாறி பேச்சுக்கள் இடம்பெற்று காலம் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்ததே தவிர, யுத்தம் நிறைவடைந்து 06வருடங்கள் உருண்டோடியுள்ள போதிலும் இதுவரையில் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கானத் தீர்வு எட்டப்படவில்லை.

இப்போராட்டமானது தமிழினத்திற்கு எதிரான போராட்டம் இல்லை என்றும் இது வெறுமனே பயங்கரவாதத்திற்கு எதிராக நடாத்தப்பட்டது எனவுமே அரச தரப்பில் உள்ளவர்கள் கூறிவருகின்றார்கள். ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள் என்பதை சர்வதேசம் அறிந்திருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பின்னரே இந்திய அரசிற்கு விடுதலைப்புலிகள் எதிரி களாக மாற்றம் பெற்றனர். பின்னர் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்குள்ளானதன் விளைவாக நாடுகளிலுள்ள போராட்ட அமைப்புகள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் பட்டனர். இதனைத்தொடர்ந்து உலகத்திலுள்ள பயங்கரவாத அமைப்புக்களில் கடல், வான், தரை என முப்படைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இனங்காணப்பட்டு சர்வதேசம் அவர்களை அழிக்க திட்டம் தீட்டியது.

விடுதலைப்புலிகளுடனான 30 வருட உரிமைப்போராட்டத்தில் சிங்கள அரசு வெற்றிபெற்ற வரலாறுகள் இல்லை. விடுதலைப்புலிகளது போர் தந்திரோபாயங்களை வெற்றிகொள்ள சர்வதேசத்தினை அணுகவேண்டிய தேவை இலங்கை அரசிற்கு ஏற்பட்டது. 2004, ஜனவரி 05 இல் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்று புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு சோனியாவின் அரசு தனது முழு ஆதரவி னையும் வழங்கியிருந்தது. இராணுவம் தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசேட பயிற்சி ஒன்று இந்திய அரசி னால் வவுனியாவின் யோசப் முகாமில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் கடல் வளங்களை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் அமெரிக்க அரசினால் இலங்கைக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இதற்கான வரைபுகளும் வழங்கப்பட்டது. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று இழுபறி நிலையில் காணப்பட்டபோது விடுதலைப்புலிகள் சர்வதேச நாடுகளிடமிருந்து ஆயுதக் கொள்வ னவுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாயுதக்கொள்வனவுகளின் போது சர்வதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதன் அவர்கள் உக்ரைன், எரித்தெரியா, யூக்கஸ்லாவியா போன்ற நாடுகளிடமிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஆயுதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார். இலங்கை யிலிருந்து 250மீற்றர் கடல் மைல் தொலைவில் அமெரிக்காவின் விசேட கண்கானிப்புக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கப்பல்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை அண்மிக்கும் தறுவாயில் தாக்குதலுக்குள்ளானது. இதில் 02 கப்பல்கள் கல்முனை கடற்பிராந்தியத்திலும், 03 கப்பல்கள் வடமராட்சிப் பகுதியிலும், இலங்கை அரசினால் துல்லியமான முறையில் தாக்குதலுக்குள்ளானது.

விடுதலைப்புலிகளுக்கு தக்க சமயத்தில் ஆயுதக் கப்பல்கள் வந்திருந்தால் எதி ரியை சமாளிக்கும் திறன் அதிகரித் திருக்கும். அதேவேளை கப்பல்களும் வந்திருந்தால் இராணுவத்தினர் திரும்பிச்செல்லவேண்டிய நிலை யும் ஏற்பட்டிருக்கும். இதற்கிடையில் அதிவேக டோரா படகுகளை பாக்கிஸ்தான் அரசு இலங்கை அரசிற்கு வழங்கியிருந்தது. இரண்டு தடவைகள் ஜெட்லைனர் மீது தாக்குதல் நடத்தியும் அவைகள் தப்பித்துக்கொண்டன. விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடையும்வரை இலங்கை யரசிற்கான ஆதரவினை பாக்கிஸ்தான் அரசும் வழங்கியது. எது எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிக்காட்ட மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசுடனும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போரிட்டனர். சர்வதேச மற்றும் உள்ளூர் அரசுகள் விடுதலைப்புலிகளுடன் தோல்வியினைக்கண்டால் அது தமக்கும், சர்வதேச ரீதியாகவும் அவ மானம் என்பதை உணர்ந்துகொண்ட பின்னரே தமது முழுப்பலத்தினையும் விடுதலைப்புலிகள் மீது பிரயோகித்தனர்.

இறுதிக்கட்டத்தின்போது விடுதலைப் புலிகளை வெற்றிபெற இயலாது என எண்ணிய அரசு சீனாவின் உதவியுடன் மல்ரிபெரல் போன்றவற்றை தமிழ் மக்களின் மீது பயன்படுத்தினார்கள். அதனையும் முறியடிப்புச்செய்த விடுதலைப்புலிகள் மீது இரசாயனத் தாக்குதலை ஆரம்பித்தது அரசு. இதற்கும் சீனா வின் முழு ஆதரவும் கிடைத்தது. எனினும் விடுதலைப்புலிகளின் கரும்புலித்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் இந்த நாடுகள் திக்குமுக்காடின. ஆகவே இரசாயனக்குண்டுகளைப் பயன்படுத்தி அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் தீர்மானத்திற்கு இந்நாடுகள் வந்ததுடன், இதனை செயற்படுத்த இலங்கை அரசின் அனு மதி தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் இருக்கும் இடத்திலிருந்து 5கி.மீற்றர் வரை பின்வாங்குமாறு இலங்கை இராணுவத்;திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்காலத்தில் 20கி.மீ சுற்றுவட்டத்திலேயே விடுதலைப் புலிகளும், பொதுமக்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இதனால் சர்வதேச நாடுகளுக்கு எவ்வாறு விசவாயுவினை பிரயோகிப்பது என்ற சிரமம் ஏற்பட்டது. சர்வதேச போர்க்குற்றம் என வரும்பொழுது தாமும் குற்றவாளியாக்கப்படுவோம் என்பதைக் கருத்திற்கொண்டு, இச்செயலை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன் பிரகாரம் விசவாயு பயன்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலைப்புலிகள், பொது மக்கள் என வேறு வேறாகப் பிரித்தெடுக்கப்பட்டனர்.

அதன்பின்னர் 18.05.2009 இல் யுத்தம் வெற்றியென தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கா, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கையில் இருந்து வெளியேறினர். ஆனால் இன்று இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நிரூபித்து போர்க்குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்க சர்வதேச பொறிமுறையே தேவை என தமிழ்த் தரப்பிலிருந்து குரல்கள் எழுப்பப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா இலங்கை அரசிற்கு ஒத்துப்போகின்றதானதொரு போக்கினையே வெளிக்காட்டி நிற்கின்றது. இதனைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்கும் அதேசமயம் கூடவே தமிழ் மக்களது உரிமைப்போராட்டத்தையும், பொதுமக்களையும் அழித்தொழித்த இந்நாடுகள் தமிழினத்திற்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவார்கள் என இவர்களை நம்புவது தகுமா? சர்வதேச மற்றும் உள்ளூர் பேச்சுவார்த்தைகள் என பேச்சுக்கள் நடந்து முடிந்திருக்கின் றனவே தவிர, செயலில் எதுவும் செயற்படுத்தப்படவில்லை.

திம்புவில் இருந்து ஆரம்பித்து தொடர்ந்த பேச்சுக்கள் அனைத்தும் பயனற்றவையாகவே கருதப்படுகின்றது. அதன்பின்னர் 2001-2004வரை சமாதான காலம் எனக்கூறி விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களை வடகிழக்கில் முடக்குவதற்கான முழு பிரயத்தனத்தையும் அரசு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 22 சர்வதேச அமைப்புக்களும், 52 சர்வதேச நாடுகளும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளுக்கு மத்தியில் குழப்பநிலைகளை ஏற்படுத்திய பின்னரே மாவிலாறுப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் டோக்கியோ பேச்சுக்களுக்கு சென்று வந்த கருணா அம்மான் அவர்களை பிரித்தாழும் தந்திரோபாயம் மேற்கொள்ளப்பட்டு அதில் இலங்கையரசு வெற்றியும் கண்டது.

அதன்பின்னர் கருணா அணியினரைக்கொண்டு விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை இனங்கண்டு இலங்கையரசு துல்லியமாகத் தாக்கியது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கு கருணா அணியினரும் காரணமாக இருந்த அதேநேரம் சர்வதேசத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் சவாலாகவே விளங்கினர். அவர்களுடைய மனோபலம், திருப்பித்தாக்கும் திறன் அபரீதமானது. ஆனால் இன்று சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் பரிண மித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர் மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என இம்மூன்றுத் தேர்தல்களும் நிறைவடைந்துள்ளன. இதிலொரு விடயம் என்னவென்றால் உலக வல்லரசுகளுடன் இணைந்து விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை வென்றெடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

அதேநேரம் அமெரிக்க அரசிற்கு ஆதரவான UNP கட்சி இன்று கூட்டாட்சி என்கின்ற போர்வையில், தனக்கு எதிரி களே இருக்கக்கூடாது என்ற காரணத்தை நிலைநிறுத்தி, எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்தில் அமரச்செய்துள்ளது. இந்நிகழ்வு குறித்து வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் பெருமையடைந்து கொண்டாலும் இலங்கை அரசினுடைய சதிவலைகளில் இதுவும் ஒன்று என்றே கூறவேண்டும்.

பாராளுமன்றப் பதவிகளையும், ஏனைய பதவிகளையும் தமிழர் தரப்பிற்கு வழங்குவதன் ஊடாக இனப்படுகொலையை மூடிமறைக்கும் சதிவலைத்திட்டமே மறைமுகமாக செயற்படுத்தப்படுகிறது. போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளூர் விசாரணையை நடை முறைப்படுத்துவதா? அல்லது சர்வதேச விசாரணையை நடத்துவதா? என்கின்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதில் தற்பொழுது காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படும் என்று கூறலாம். அது மட்டுமல்லாது இதனை போர்க்குற்ற விசாரணை என்றே பெரும்பாலும் கூறக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. காரணம் என்னவென்றால் சர்வதேச நாடுகளின் தலையீட்டுடனேயே இவ்யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலை யில் அவர்கள் பெரும்பாலும் தம்மையும், இலங்கையையும் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் முற்றுமுழுதாக ஈடுபடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இரணியன்

SHARE