ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிப்பார்களாக இருந்தால் தனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்வேன்.
இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவது உறுதி. அதில் நாமும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.
தேர்தலில் எதிர்த்து வாக்களித்து விட்டு அவர் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் அவரிடம் சென்று அமைச்சுப் பொறுப்பை பெற்று என்ன முகத்துடன் எமது பகுதிக்கு அபிவிருத்திக்கான நிதியை கேட்பது. அதனால் தான் கூறுகின்றேன்.
கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் குறைவாக வாக்குகள் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களால் அளிக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வேன்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் மாத்திரம் தான் தோற்கடிக்க முடியும் என்றால் நாம் ஒற்றுமைப்பட்டு அவரை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும். மாறாக மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பதால் அவரை தோற்கடிக்க முடியாது.
மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமல் அவரை தோற்கடித்து வெல்ல வேண்டும் அல்லது அவர் வெல்வார் என்றால் அவருக்கு வாக்களித்து வெல்ல வேண்டும். எந்த வெற்றி பொருத்தமாக இருக்குமோ அதன்படி நடப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக அவர் வருவது உறுதி. அவ்வாறு அவர் ஜனாதிபதியாக வரும் போது அந்த வெற்றியில் பங்காளர்களாக இல்லாமல் நாம் இருப்போமானால் நட்டமடையப் போவது வாக்களிக்காத முஸ்லிம்கள் தான். மஹிந்த ராஜபக்ச அல்ல என்றார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், ஓட்டமாவடிக் கோட்டக் கல்வி அதிகாரி எம்.எஸ்.கே.றகுமான், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.முஸ்தபா, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களாக ஏ.எல்.ஜுனைட், ஐ.ரீ.அஸ்மி, எஸ்.ஏ.அன்வர் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசிகசாலை, வகுப்பறைக் கட்டிடம், நிருவாகக் கட்டிடம் என்பன அமையப் பெறவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கு முதலாம் கட்டமாக கல்வி அமைச்சினால் ஒரு கோடி நாற்பத்தொரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.