இலங்கையில் சமஸ்டி இல்லையெல் தமிழ் இனம்ஆயுதம் ஏந்திப்போராடுவதை விட வேறு வழியில்லை-இரணியன்

625

இலங்கையில் சமஸ்டி இல்லையெல் தமிழ் இனம்ஆயுதம் ஏந்திப்போராடுவதை விட வேறு வழியில்லை

ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒன்று  சமஷ்டியாகும். அதிகாரம் ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படுவது சமஷ்டியாகும். இது கனடா, பிரேசில், பெல்ஜியம், ஸ்பெயின்,  சுவிஸ்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கைத்தீவு பல்லின மக்களை கொண்ட ஒரு நாடாக காணப்படுகின்றது. அதில் கடந்த காலத்தில் தமது உரிமைகளுக்காக போராடி மிகவும் பாதிப்படைந்த ரீதியில் காணப்படுவது தமிழ் மக்களேயாவர். இலங்கையில்.1956ம் ஆண்டுக்கு பின் உச்சம் பெற்ற அரசியல் மோதல்கள் வலுப்பெற்று 1983ம் ஆண்டுக்கு பின் எழுச்சி பெற்று ஆயுத போராட்டமாக வளர்ச்சி பெற்றது. இதற்கான காரணத்தை ஒரே வரிகளில் கூறுவதானால் அதிகாரம் என்பது பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே அல்லது அவை தமிழர்களுக்கு வழங்கப்படாமல் இருந்ததேயாகும்

இலங்கையில் ஆட்சிபீடம் ஏறும் சிங்கள ஆட்சியாளர்கள் மனநிலை காலம் காலமாக தமிழர்களை அடிமைப்படுத்துவதிலையே நோக்கமாக கொண்டிருந்தது.

இதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்துக்கும் இடையில் குரோத மனப்பான்மை வளர்ந்தது. இது அறுபது வருடம் கொண்ட தீராத பகையாக வளர்ந்த உணர்வாகும். இதனை இன்று மறுதலிக்க முடியாது. இதன் அடிப்படையிலையே தமிழ் மக்கள் தமது தீர்வை பெற வேண்டும் என சிந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு விடுவோம் என அச்சம் கொள்கிறார்கள். இதனால் மற்றவர் பார்வையில் இனவாதிகளாக மாற்றப்படுகிறார்கள். தமது இனத்திற்காக குறைந்தபட்ச தீர்வாக தருவதை வாங்குவதற்கு பதிலாக இந்த நாட்டின் பூர்விகத்தின் பங்காளிகள் என்பதால் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள துடிக்கிறார்கள். இதன் அடிப்படையிலையே வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி பற்றி தமிழ் மக்கள் இன்று பேசுகிறார்கள். மிகவும் சிக்கலான இன அமைப்பை பெற்றுவிட்ட இன்றைய வடகிழக்கு அல்லது நாட்டுக்குள் சமஸ்டி எப்படி சாத்தியம் என்பது பற்றியோ, சிங்கள அதிகார வர்க்கம்  தமிழர்களை அடிமைப்படுத்தியது போல தமிழர்கள் யாரையும் அடிமைப்படுத்த கூடாது என்ற எண்ணமோ தற்போது வரை தமிழ் மக்களுக்கு எழவில்லை. அதுவே 1947ல் கோரப்பட்ட அதாவது 70 வருடங்களுக்கு முன் தமிழருக்கு தந்தை செல்வநாயகம் முன்மொழிந்த சமஸ்டி தீர்வாகும். இதனை விட முக்கியமானது  அதனை இப்போது தான் தமிழ் தலைமைகள் ஆய்வு செய்கின்றமையாகும். இன்றைய சிக்கலான முறைக்குள் சமஸ்டி தீர்வை  வழங்க நாட்டின் நிலைமை இடமளிக்க போவதில்லை. தமிழ் தலைவர்கள் அந்த தீர்வை பெரும் காலத்தை கடந்து வந்துவிட்டார்கள். இன்று பேரம் பேசும் சக்தி எதுவும் தமிழர்களுக்கு இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தீர்மானிக்கும் அதிகார பகிர்வே சாத்தியமாக காணப்படுகிறது.

70 வருடத்திற்கு முன்னர் பழமை வாய்ந்த ஓர் தீர்வாக அப்போது தமிழர்களுக்கு இருந்திருக்கலாம் ஆனால் இன்று குடியியல் பரம்பல் ஏது நிலைகள் மாற்றம் கண்டு விட்டது. பூர்வீக தமிழர் நிலங்கள் பல்லின சமுகத்தின் வாழ்வியலை  இன்று பிரதிபலிக்கிறது. திட்டமிட்டு தமிழர்கள் கலைக்கப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டாலும் மற்ற சமூகங்களின் இருப்பை தகர்க்க முடியாது.

இன்றுவரை திரும்ப திரும்ப நாட்டின் ஆட்சியாளர்கள் குறிப்பிடுவது ஒற்றையாட்சியை அல்லது அதிகார பகிர்வு பற்றியே! அதை தவறென்றும் எடுத்தியம்ப முடியாது. ஏனெனில் அப்போதைய சிங்கள ஆட்சியாளர்கள் விட்ட தவறே தமிழ் மக்கள் ஒற்றையாட்சி பற்றிய தவறான நிலைப்பாட்டிற்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. இலங்கை என்பது எங்கள் நாடு என்ற சிந்தனை அற்று போவதற்கு காரணம். ஆனால் ஆரம்ப தலைவர்களாக இருந்த இராமநாதன்,அருணாசலம் போன்ற தமிழ் தலைவர்கள் இலங்கை என்ற தேச பக்தியை தமிழர்களுக்கு விதைத்தனர். ஆனால் அதற்கான முட்டுகட்டைகள் தீவிர போக்கு கொண்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை முன்னிறுத்திய பண்டாரநாயக்கா போன்ற தலைவர்கள் தமது அரசியல் வாழ்வை தக்க வைக்க, பெரும்பான்மை சமுகத்தை திருப்திபடுத்த, தேவையற்ற முறையில் வாக்குறுதிகளை வழங்கி, இரு சமூகங்களிடையே மோதலை தோற்றுவித்து தமிழர்களின் நல்லெண்ணங்களை  கலைத்தனர், திட்டமிட்டு தமிழர்களுக்கான அதிகாரங்களை பறித்தனர்.அத்தகைய அன்றைய ஆட்சி முதல் இன்றுவரை  இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான சம அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக முட்டுக்கட்டைகளை போடுவதற்கு மட்டுமே சிங்கள ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டுகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி ஆட்சியை கோருகிறது. இக்கோரிக்கையை பற்றி ஆய்வு செய்யாமல் தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவியில் வசிப்பவர்கள் அனைவரும் வெளிப்படையாக நிராகரித்து விட்டனர். அவர்கள் சமஸ்டி வழங்க முடியாது என்ற சமிக்கையை தெளிவாக சொல்லிவிட்டார்கள். எனவே தான் மீண்டும் தமிழர்களுக்குள் அதிகார போட்டி ஏற்படப்போகிறது. அது சமஸ்டி என்ற சொல்லின் மூலம் மீண்டும் ஏற்படுத்தப்பட போகின்றது. அதை எவ்வளவு காலம் சென்றாலும் ஆட்சியாளர்கள் ஏற்று கொள்ளவும் போவதில்லை.

அதை ஏற்று கொள்வதற்கான மூலோபாயங்கள் இந்த நாட்டுக்குள்ளும் காணப்படவில்லை. விழலுக்கு இறைத்த நீராய் மட்டுமே தந்தை செல்வாவின் சமஸ்டி என்ற பதம் தமிழர்களின் கையில் இனிவரும் காலங்களில் எல்லாம் இருக்க போகிறது! ஆட்சியின் அதிகாரத்தில் உள்ளவர்களின் நிராகரிப்பை இனவாதம் கொண்டு தமிழர்கள் இனிவரும் காலங்களில் நோக்குவது தவறானது. சமஸ்டி தீர்வை வழங்க இலங்கையின் பல்லின அமைப்பு முறை, இனபரம்பல் முறை இடம் கொடுக்குமா என்பது பற்றியே அழமான ஆய்வுகள் தேவை.

புதிய அரசியல் தீர்வை பெறுவது தொடர்பாக திறந்த உரையாடல்கள் தமிழ் தலைமைகளினால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுடன் எதிர்கட்சியாய் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஸ்டி தீர்வு யோசனைகளை பற்றி  திறந்த மனதுடன் பேசவேண்டும். வெறுமனே தமிழ் மக்கள் மத்தியில் பேசி விட்டு இதுதான்  தீர்வு என இடித்துரைப்பது உசிதமானதன்று. கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் சிங்கள பெரும்பான்மை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்த்தி செல்லவேண்டும். தெற்கில், சமஸ்டி கேட்பவர்களை இனவாத தமிழர்களாய் நோக்கும் தென்னிலங்கை சமூகத்துக்கும், சமஸ்டி இலங்கைக்கு பொருத்தமில்லை என்ற சமுக விஞ்ஞான கோட்பாட்டுக்கும் பதிலளிக்கும் மனநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை. உண்மையாகவே இலங்கையில் சமஸ்டி தீர்வை வகுப்பதற்கான ஏது  நிலைகள் இல்லை. ஆனால் கடந்தகால காழ்ப்புணர்வுகள், ஏமாற்றங்கள், அழிவுகளை கருத்தில் கொண்டு தனித்து வாழ சமஸ்டி கேட்பது இன்னும் பல இனக்குழுமங்கள் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தையும் தூண்டும் அதன் பின் வடக்கு கிழக்கில் அல்லது கிழக்கில் தனி இன்னுமொரு சுயாட்சி பிரதேசத்தை அது ஊக்கிவிக்கும் அது மீண்டும் ஒரு  பிரிவினைக்கு வழிகாட்டும். எனவே தான் ஆட்சியாளர்கள் அச்சம் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.

இலங்கைக்குள் பார்வையை செலுத்தும் போது தமிழர் செறிந்து வாழும் பகுதி, சிங்களவர் செறிந்து வாழும் பகுதி ,இந்திய வம்சாவழி மக்கள் செறிந்து வாழும் பகுதி, தமிழர் பகுதிக்குள் செறிந்து வாழும் முஸ்லிம்கள், பெருன்பான்மை சிங்கள மக்கள்  வாழ்கின்ற பகுதிக்குள் செறிந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் என ஒரு சிக்கலான வாழ்வியலே காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் சிங்களவர்கள் என தீர்வை வழங்க முடியாத நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமஸ்டி ஆட்சி முறையானது பிரிவினை வாதத்தை நோக்கி செல்லும் அல்லது ஊக்கிவிக்கும்  முக்கிய காரணியாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழருக்கு என்றோ வடக்கு கிழக்குக்கு என்றோ சமஸ்டி தீர்வை முன்வைக்க ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக சொன்னால் நாம் இலங்கையர் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படுவதை சமஸ்டி தடுத்துவிடும். உதாரணமாக நாட்டை நாம் பிரதிநிதித்துவம் செய்யாமல் மாகாணங்களை முதன்மையாக கொண்டு தமிழர் ,சிங்களவர், முஸ்லீம் என்ற எண்ணத்தைத்தை விதைத்து விடும் என்ற ஆழமான பார்வை சிங்கள ஆட்சியாளர்களிடம் உண்டு. இதனடிப்படையில் சமஸ்டி என்பது இலங்கைக்கு எட்டாத தீர்வாக சொல்கிறார்கள்.

 

?

தமிழருக்கான சுயநிர்ணய உரிமையை வழங்குதல், பிரதேச சுயாட்சி வழங்குதல் என்பன பெரும்பான்மை சிங்கள மக்களை பொறுத்தவரை கசப்பான விடயமாகும். இங்கு ஒரு நகைப்புக்கான விடயம் என்னவெனில் தற்போதைய அரசியல் யாப்பின்  13வது  திருத்த சட்டத்தால் வழங்கப்பட்ட காணி, மற்றும் போலீஸ் அதிகாரத்தையேனும் இதுவரை வழங்க மறுத்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு இனிப்பான சமஸ்டியை வழங்குவார்களா? என்பதை மறந்து, சமஸ்டியை முன்கொண்டு செல்வது பொறுத்தபாடுகள் அற்றதே!

 

தற்போது சமஸ்டியை நடைமுறைபடுத்தும் நாடுகளை ஆய்வு செய்தால் அங்கு தீவிரவாதம் மிக்க அல்லது இனவாதம் மிக்க பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஒரே வகையானது என்று கூற முடியாது. எங்கெல்லாம் பிராந்திய மேலாதிக்கம் வலுப்பெருகிறதோ அங்கெல்லாம் மத்திய அரசுடன் மோதல் தீவிரம் பெறுகிறது. இன்றைய யதார்த்தத்தில் கிழக்கு மாகாண ஆட்சிக்கும் வடக்கு மாகாண ஆட்சிக்கு இடையே ஒப்பீட்டை மேற்கொள்ளலாம். கடந்தகாலங்களில் மத்திய அரசுடன் தீவிரமாக போரிட்ட வடக்கு ஜனநாயகமும் மத்திய அரசுடன் இணங்கி ஒரு அலகாக செயற்பட்ட கிழக்கு மாகாண ஆட்சியையும் நினைவில் கொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூன்று சமூகங்களின் பரம்பல் சமஸ்டிக்கு வளைந்து கொடுக்க கூடிய  சத்திய கூறுகள் அற்ற நிலையிலையே உள்ளது. இங்கு சமஸ்டியை  வழங்கினால் கிழக்கு மாகாணம் எதிர்காலத்தில் மூன்று சமூகங்களின் உச்சமான தீவிர மோதலை எதிர்கொள்ள வேண்டிவரும்.

இன்று உலகில் அனைத்து நாடுகளும் காலனித்துவ அல்லது குடியேற்ற வாத நாடுகளாகவே இருந்துள்ளன. பல நாடுகளில் மக்கள் தாமாக புலம் பெயர்ந்து குடியேறியவர்களே. அல்லது நாடுகள் தமது மக்களை காலனித்துவ ஆட்சியில் குடியேற்றின. அதேபோல அடிமைகளாகவும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த மக்களே பல சமூகங்களாக இன்று உலகில் இருக்கின்றனர். இன்று பல்வேறு நெருக்கடிகள் இனங்களிடையே நாடுகளுக்குள் நடைபெறுகின்றன, அது ஆசியா என்றோ ஐரோப்பா ஆபிரிக்கா என்றோ ஒற்றைச் சொல்லில் அடக்கி விடமுடியாது. எனவே அந்த நெருக்கடிகளுக்கு எல்லாம் பொதுவாக தீர்வை வழங்க வேண்டும். ஆனால் அந்த தீர்வு நீருபூத்த நெருப்பாய் வளர்வதற்கு இடமளிக்க கூடாது அவை மீண்டும் இனங்களுக்குள் பிரிவினையை விதைக்க ஆயுதமாக இருக்க கூடாது. சமஸ்டி என்பதை பெற்றால் அடங்கி போகும் சமுகத்துக்கு இசைவான நிலையை கடைப்பிடிக்க வேண்டிவரும். அதன் மூலம் சமஸ்டி நிலைக்க கூடிய நிலையான உறுதியை பெற்று விடும் அதைவிடுத்து கடும் தீவீரவாத போக்கு கொண்ட சமூகங்களுக்கு இத்தீர்வு எட்டாத பொருத்தமே!

பல்லின சமுக ஒழுங்கமைப்பை கொண்டுள்ள இலங்கையில் மலையாக தமிழ் மக்கள் தமக்கு சமஸ்டி முறையான அரசியலமைப்பை கோருவதற்கு முடியாத நிலையிலையே உள்ளனர். காரணம் அவர்கள் பெரும்பான்மை சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம் என ஒரு சேர மலையகத்தில் வாழ்கின்றனர்.

அவர்கள் இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்களுக்கு இடையிலான மோதல்களால் இயல்பு நிலையை இழந்தவர்களே தவிர பாதிக்கப்பட்ட தரப்பல்ல. அத்துடன் அம்மக்கள் வேறு ஒரு நாட்டில் இருந்து சேவகம் செய்வதற்காக இங்கு குடியேற்றப்பட்டவர்கள் அவர்களது சமுக கட்டமைப்பு, அவர்களது தேவைகள் அனைத்தும் தனித்துவமானவை எனவே அவர்களால் சமஸ்டியை கோரமுடியாது. தனித்து ஒரு அலகை பெற வாய்ப்பில்லை. மக்களோடு மக்களாக கொஞ்சம் பிரத்தியோகமான தமது அபிவிருத்திக்குரிய அரசியல் உரிமைகள் சிலவற்றையே கோர முடியும். போட்டி தன்மை உள்ள பிரதேசவாதம் சமஸ்டியின் உறுதியற்ற தன்மையை அதிகரிக்க செய்யும். சமஸ்டி பிரிந்து போதலை ஊக்கிவிக்கிறதா ? என்ற கேள்வியை தொடுக்கும் போது இருவிதமான பதில்களை பெறமுடியும் ஆனால் சமஸ்டி பிரிந்து போதலையே அதிகமாக ஊக்கிவிக்கின்றது என்பதே பெரும்பான்மை சமுக விஞ்ஞானத்தின் முடிவாகும்.

எனவே நீண்டகால இனமுறுகளால் பதிக்கப்பட்ட சமுகத்துக்கு சமஸ்டி முறையிலான தீர்வை வழங்க ஒடுக்குமுறையாளர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். அது மீண்டும் ஒரு தனி நாட்டுக் கோரிக்கைகளை வலுபெற செய்யும் என்பதே ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாகும். சமஸ்டி ஆட்சி நீடித்து நிலைபெறும் என சொல்ல  முடியாது. இனகுழுமங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நாட்டில் பேராபத்தை கொண்டு வந்து விடும் என ஆட்சியாளர்களின் எச்சரிக்கையாகும்.

இலங்கை அரசு தமிழருக்கு என்று சில விசேட அதிகாரங்களை பகிர்வதோடு தனது புதிய அரசியல் யாப்பை நிறுத்திகொள்ளும். குறிப்பாக இன்றைய 13ம் திருத்தம் போல இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் இதனை விடுத்து சமஸ்டியை பெற்று விடலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் மக்களோ நினைத்தால் அது எதிர்காலத்தில் ஏமாற்றமாகவே இருக்கும். இன்று தமிழர்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். பேரம் பேசும் வாய்ப்புகள் எவையும் இல்லை. அந்த எதிர்கால ஏமாற்றங்களை இன்று தவிர்க்க பழகி கொண்டால் எதிர்கால வாழ்வு இலங்கையில் உள்ள இனங்களை ஐக்கியப்படுத்தும். தமிழீழமும் சமஸ்டியும் ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஒன்றுதான் என்பதே அவர்களின் நிலைப்பாடு மாறாக தமிழர்களுக்கு தீர்வு சமஸ்டி தான் எனும் மாயையை தமிழ் தலைமைகள் தோற்றுவித்தால் ஏனைய சமூகங்களும் தமிழர்களை ஒதுக்க வேண்டிய நிலையே ஏற்படும். அது மீண்டும் இலங்கையில் பல்லின சமுகங்களுக்கு இடையே அச்சத்தையும் எதிர்கால இருப்பையும் கேள்விக்குறியாக்கி விடும் என்பதே உண்மை.

இலங்கையில் சமஸ்டி இல்லையெல் தமிழ் இனம்ஆயுதம் ஏந்திப்போராடுவதை விட வேறு வழியில்லை

 

SHARE