இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல்           விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்

351

 

“சரணடைந்து விடுங்கள். உங்கள் உயிரை காப்பதற்கும் தமிழ் மக்களின் வாழ்வை காப்பதற்கும் இதுவே கடைசி வழி” விடுதலைப்புலிகளுக்கு ராச பக்சேவின் கடைசி எச்சரிக்கை இது. விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்பதும் தமிழ் மக்களை கொன்று குவிப்பதும் இரண்டும் ஒன்றுதான் என்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இது தான். இதன் பொருள் விடுதலைப்புலிகள் சரணடையாவிட்டால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தான். எவ்வளவு வெளிப்படையான அறிவிப்பு. எந்த நாடும் இதை கண்டு கொள்ளவில்லை. ஐநா சபையில் மீண்டும் ஒருமுறை இலங்கைப்பிரச்சனையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். பேசிப்பேசி………….. நடவடிக்கை என்ன? ஈழத்தமிழரின் இறுதிச்சடங்கா?

கடந்த சில மாதங்களாகவே இலங்கைப்போரை இந்தியா நடத்திவருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. தொடக்கத்தில் ரேடார் கொடுத்ததாக தகவல்கள் வந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இந்திய ரேடார் நிபுணர்கள் மூவர் காயமடைந்ததாக செய்திகள் வந்தன. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது புகைப்பட ஆதாரங்களாக வெளிவந்தது. கல்மடுக்குளம் அணைக்கட்டு தகர்க்கப்பட்டபோது ஏராளமான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகவே தமிழகம் வழியாக கவசவாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனாலும் இந்திய அரசே போரை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய் என்று அத்தனை ஓட்டுக்கட்சிகளும் கூட்டணி கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்தன. எதற்காக? பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை தமிழினத்திற்கு உண்டு எனும் கோரிக்கையையெல்லம் ஏற்க்கப்படும் பக்குவம் இல்லையென்றாலும் இலங்கையில் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மை முகத்திலறைவதால் உணர்ச்சிமேலிட தமிழக மக்கள் தன்னெழுச்சியாக பல்வேறு வடிவங்களில் போராடிவருகிறார்கள், அது எல்லை மீறி போய்விடாமலிருக்கவும் தேர்தலுக்கு அவர்களின் முன்னால் தமிழுணர்வு உள்ளவர்களாக காட்டி ஓட்டுப்பொருக்கவும் தினம் ஒரு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர். மக்களோ தேர்தல் திருவிழாவை முன்னிட்டு தங்கள் இரக்க உணர்ச்சியை ஒத்திவைத்துவிட்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றனர்.

இந்த நிலையில் தான் பிரெஞ்சு செய்தி நிறுவனமொன்று இந்திய ராணுவம் நேரடியாகவே இலங்கை இனப்படுகொலைப் போரில் பங்கெடுத்து வருவதை (உறுதிப்படுத்தப்படாத தகவல்) அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் 58ஆவது ராணூவப்படைப்பிரிவு முழுவதும் இந்திய ராணுவ வீரர்களே நிறைந்திருந்து நேரடியாகவே இன அழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 59ஆவது படைப்பிரிவிலும் பெரும்பாலும் இந்திய வீரர்களே நிரம்பியிருக்கின்றனர். அதுமட்டுமன்றி இந்திய தேர்தலுக்குமுன் இலங்கையில் மயான அமைதியை ஏற்படுத்திவிடவேண்டுமென்று நச்சுப்புகை குண்டுகளையும் புதுக்குடியிருப்பு பகுதியில் இந்திய ராணுவம் பயன் படுத்தியது அம்பலமாகிய்டிருக்கிறது. இது பொய்ச்செய்தியென்று பொய்சொல்ல்வதற்குக்கூட இங்கே எந்த ஓட்டுக்கட்சிக்கும் துணிவில்லை. இந்திய தமிழருக்கு போரை நிறுத்த ஆவன செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி, இலங்கை தமிழர்களுக்கோ நச்சுப்புகை குண்டுவீச்சு.

ஏற்கனவே இந்தப்படுகொலைகளை செய்வதற்கு இலங்கை அரசு 1.9 பில்லியன் செலவழித்து விட்டதாம். கடைசிக்கட்ட போருக்காக 5000 கோடி ரூபாய்யை இந்திய அரசு கடனாக கொடுக்கவிருக்கிறது. இப்படி தமிழர்கள் மேல் விஷக்குண்டுகளை வீசுவதற்கும் அதற்கு செலவு செய்ய பணம் கடனாக கொடுப்பதற்கும் எந்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது? இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப எந்த மக்கள் பிரதிநிதி ஒப்புதல் அளித்தது? நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் எந்த மக்கள் பிரதிநிதியாவது இதைப்பற்றி கேள்வி கேட்க முடியுமா? அதற்கான அதிகாரம் இருக்கிறதா அவர்களுக்கு? பின் எதற்கு இந்த நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும்? கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் எல்லாத்தட்டு மக்களும் பலவிதத்திலும் போராடியபின்னும் ராஜபக்சேவின் ஒற்றை மயிரைக்கூட அசைக்க முடியாது என்றால் ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?

ஆனாலும் பேரணி நடத்திக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள், இலங்கை தமிழரை காக்கப்போவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டு. என்னசெய்வதாய் உத்தேசம்?

ஈராக்கில் மாவீரன் ஜெய்தி தொடங்கிவைத்தான், அதை இந்தியாவில் மறுபதிப்பு செய்தான் ஜார்னைல் சிங். நீங்கள்…..?

 தேர்தல் நடப்பது ஒன்றே ஜனநாயகம் என்பதற்கு போதுமானது என்னும் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, கூடவே சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட அதன் வாசகங்களை உள்ளூர் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து அனுமதிபெறவேண்டும் என்பன போன்ற மக்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய கட்டுப்பாட்டு விதிகளையும் சேர்த்து. தேர்தல் என்பது என்ன மாதிரியான ஜனநாயகம் என்பது திருமங்கலம் இடைத்தேர்தல் நிரூபித்துக்காட்டிவிட்டது. கையூட்டு வாங்குவது குற்றம் என்றிருந்த நிலை மாறி தெரியாமல் வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் வெளிப்படையாக அதுவும் ஒரு தொகுதி மக்கள் அனைவரையும் கூச்சமில்லாமல் பணத்துக்கு விலைபோகும் நிலைக்கு தள்ளிச்சென்றுவிட்டன ஓட்டுக்கட்சிகள். நல்ல பழக்கங்களை எல்லாம் பட்டினி போட்டுக்கொன்றுவிட்டு கறி விருந்து போட்டுக்கொண்டாட பொதுத்தேர்தல் வருகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உட்பட வாழும் உரிமையை பரித்துக்கொண்ட கும்பல் மக்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை வழங்க நாள் குறித்து விட்டன. இதுவரை வார்த்தைகளில் கொள்கை பேசிக்கொண்டிருந்த ஓட்டுக்கட்சிகள் இப்போது செயல்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.

நேற்றுவரை ராஜபக்சேவின் சகோதரியாய் இருந்து போர் என்றால் நான்குபேர் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று இலங்கை பிரச்சனையில் அருள் பாலித்த அம்மா இன்று இலங்கையில் தமிழர்கள் காக்கப்படவேண்டும் என்று உண்ணாவிரதமிருந்து தன் நடிப்புத்திறமையை காட்டியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் அம்மாவின் இந்த கருணை வெளிப்பட்டிருக்குமா?

 சட்டசபை தீர்மானம், மனிதச்சங்கிலி, பதவிவிலகல் என்று உலகத்தமிழர்களின் தலைவன் போல் காட்டிவரும் கலைஞர், இலங்கையில் போரை நடத்துவது இந்தியாதான் என்று வெளிப்படையாக தெரிந்த பின்னரும் கடைசிவரை காங்கிரஸ் அரசை முட்டுக்கொடுத்து தாங்கி நிற்பதை விடமுடியாது என்று ஒட்டிக்கொண்டிருக்கிறார் நாற்காலியில். தமிழர்களைவிட பதவி முக்கியம் என்று அவருக்கு தெரிகிறது மக்களுக்கு….?

மகனின் அமைச்சர் பதவி போய்விடக்கூடாது என்று இத்தாலி அம்மாவிடம் பம்மிக்கொண்டிருந்த மருத்துவர் போயஸ் அம்மாவிடம் அடைக்கலம் தேடப்போகிறார். இலங்கைப்பிரச்சனையில் கருணாநிதி நாடகமாடுகிறார் என்று கூறிக்கொண்டு, ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற ஒரு நாடகம் போட்டதும் அங்கு ஓடிப்போகப்போகிறார். இதுவரை இலங்கை தமிழர்களைச் சொல்லிக் குதித்ததெல்லாம் அவரின் சொந்த நாடகம் என்பதை தேர்தல் நாடகம் வெளிச்சம் போட்டு விட்டது.

அணுசக்தி உடன்பாடு கருவாகி உருவாகி பிறப்பதுவரை உறவு கொண்டிருந்துவிட்டு பிறக்கக்கூடாது பிறந்தால் உறவை முறிப்போம் என்று வெளியில் வந்து பாஜக காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சவடால் அடித்தனர் போலிகள். தேர்தல் முடிந்தவுடன் கிடைத்த எம்பிக்களை வைத்துக்கொண்டு தான் பிரதமராக முடியுமா என்று பார்ப்பார், முடியாவிட்டால் பாஜக வுடன் எம்பிவிடுவார் என்று பாமரனுக்கும் தெரிந்திருந்தாலும் தலா இரண்டு இடத்துக்காக அம்மாவுடன் நின்று தொகுதி பேசுகிறார்கள்.

 முதலில் தனித்தே போட்டி என்றார், தேர்தலை புறக்கணியுங்கள் என்றார், பிறகு நான் கை காண்பிக்கும் ஆட்களுக்கு ஓட்டுப்போடுவீர்களா என்று உருகினார், இப்போது மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்று எடுத்துவிடுகிறார் கேப்டன். இவர் கேட்ட பத்துத்தொகுதிகளையும் அம்மாவோ, கலைஞரோ த‌ரச்சம்மதித்திருந்தால் கடவுளும் மக்களும் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும்.

இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்று சுற்றிச்சுற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு எங்கள் கூட்டணை ஆட்சிக்குவந்தால் இலங்கைப்பிரச்சனைக்கு உடனடித்தீர்வு என்று பாயாசம் விற்கிறார் நாட்டாமை.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தருபவர்களுக்குத்தான் முஸ்லீம் சமுதாயம் ஓட்டளிக்கும் என்று கூறிக்கொண்டிருந்துவிட்டு, ஆறு சீட்டு தந்தால் தான் ஓட்டு என்று கட்சி கட்டிக்கொண்டு வந்து கேட்கும் மதக்கட்சிகள்.

கடவுளை நம்பினால் நல்லது நடக்கும் என்று குறைந்த பட்ச நம்பிக்கையாவது கடவுள் மீது பக்தனுக்கு இருக்கிறது இதைப்போன்ற எந்த நம்பிக்கையாவது தேர்தல் மீது மக்களுக்கு இருக்கிறதா? (மருதையன் பேட்டி ஆனந்த விகடன்) ஆனாலும் இங்கு தேர்தல் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. உரிய விலையில்லாமல் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை, விளை நிலங்களை பறித்துவிட்டு கிராமங்களை நகரங்களை நோக்கி விரட்டிவிடும் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், அனைத்துத்தரப்பு மக்களையும் வாழவிடாமல் சாகடிக்கும் உலகவங்கிக்கட்டளைகள், இவை எல்லாவற்றிற்கும் மக்கள் வரிபணத்தையே செலவு செய்யும் பொருளாதாரக்கொள்கை இவை எதாவது மாறுமா இந்தத்தேர்தலால்? மாறப்போவதுமில்லை மாற்றவும் மாட்டர்கள். ஆனாலும் மக்களுக்காகவே வாழ்கிறோம், மக்களுக்காகவே உழைக்கிறோம், மக்களுக்காகவே இறக்கவும் தயார் என்று புளித்துப்போன வசனங்களை பேசிக்கொண்டு கோரைப்பற்களை மறைப்பதற்க்கு ஒரு இளிப்பை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள். என்ன செய்வதாய் உத்தேசம்?

தேய்ந்து போன துடைப்பங்களையும், பிய்ந்து போன செருப்புகளையும் உபயோகம் இல்லாதவை என்று வீசிவிடாதீர்கள். அருமையான மிகப்பொருத்தமான பயன்பாடு ஒன்று உண்டு அவைகளுக்கு.

இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல்

          விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துவரும் இலங்கை அரசு, தன்னுடைய சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா மூலம் ஓர் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய மருத்துவர் குழு இலங்கை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு விளக்கம் கூறுமுகமாக அமைச்சர் அதை அறிவித்திருக்கிறார். “இந்தியாவை குறை கூறாதீர்கள். அவர்களுடைய உதவி இல்லையென்றால் விடுதலைப்புலிகளை இந்த அளவிற்கு வெற்றி கொண்டிருக்க முடியாது”

051201indiangeneral1தமிழகத்திலுள்ள ஓட்டுக்கட்சிகளுக்கு, குறிப்பாக ஆளும் கூட்டணிக்கு இலங்கை இனப்படுகொலையை எத்யிர்த்து குரல் கொடுத்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, பதவி விலகல் என்று நாடகமாடினார்கள். கொட்டும் மழையில் மக்களை நிற்கவைத்து மனிதச்சங்கிலி என்ற பெயரில் மழை நீரில் இன உணர்வு கரைந்து போய்விடாதா என்று எதிர்பார்த்தார்கள். அப்போது சொல்லப்பட்டதென்ன? இலங்கையின் இயலாமையில் நாம் தலையிட இயலாது. இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய ஆளும் கும்பல் பதில் கூற முன்வருமா? அன்றைய இலங்கை போராளிகளைக்கொண்டு மாலத்தீவு ஆட்சியை கவிழ்க்க சதிக்கலகம் செய்துவிட்டு குட்டு வெளிப்படவிருந்த நேரத்தில் படையை அனுப்பி வெளிவராமல் தடுத்தவர்களல்லவா? ஆனாலும் தேர்தல் வந்துவிட்டதல்லவா? எனவே மொன்னைத்தனமான ஒரு பதிலை தயாரித்துக்கொண்டிருக்கலாம்.

 தமிழர்களை கொல்வதற்கு தமிழகம் வழியாகவே கவசவாகனங்கள் சென்றன. தமிழக கோமாளிகள் பிரணாப்பை இலங்கை அனுப்பினாலே இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்து கொண்டிருந்த போது நேரமில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வெளியுற‌வு அமைச்சருக்கு, இலங்கை அழைத்தவுடன் நன்றாக கொல்கிறீர்கள் என்று இலங்கை சென்று பாராட்டுப்பத்திரம் வாசித்து பரிசும் கொடுத்துத்திரும்பிவர போதுமான நேரம் கிடைத்தது. அப்போது சட்டமன்றத்தில் மேசையைத்தட்டி ஆரவாரம் செய்த கைகளுக்கு இப்போது கும்பிடும் வேலை. தேர்தல் வந்துவிட்டதல்லவா?

முத்துக்குமார் உள்ளிட்ட சிலர் இலங்கை சொந்தங்களுக்காக தங்களையே தீப்பந்தமாக ஆக்கிக்கொண்டபோது, மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆட்சியை கவிழ்க்க சதி என்று ஆரோகணம் பாடிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கேப்டன்களிடமும், டாக்டர்களிடமும் அவரோகணம் இசைத்துக்கொண்டிருக்கிறார்கள் கூட்டணிக்காக.

போர் என்று வந்துவிட்டால் மக்கள் மடிவது இயல்பு தான் என்று பாடம் நடத்தியவர்களுக்கு இன்று கிளிசரின் இல்லாமலேயே உண்ணாவிரதக்கண்ணீர் வருகிறது.

இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு உணர்வு ரீதியாக தொடர்ச்சியாக போராடியவர்கள் மாணவர்களும் வழக்குறைஞர்களும். அதற்க்காகத்தான் மாணவர்களை பிணையில் வரமுடியாமல் தளைப்படுத்தியிருக்கிறது அரசு. எழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்ததால்தான் வழக்குறைஞர்களை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே மண்டையை உடைத்து குருதியில் குளிப்பாட்டியிருக்கிறது போலீசு.

இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் இது மக்களாட்சி என்று……….? இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் இது ஜனநாயகம் என்று………?

SHARE