ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தமிழ்த் தரப்புக்களின் தலைமைகள் பலரும் சர்வதேசமும், ஐ.நா சபையும் தீர்வினைப் பெற்றுத்தரும் என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு விடயத்தை விளங்கிக்கொண்டு ஏமாற்று அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளிலிருந்து தமிழ் மக்கள் விலகிச் செல்லவேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
ஈழப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தினை 03 பகுதிகளாகப் பிரிக்கலாம். அதாவது,
1990 காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்குப் பொறுப்புக்கூறவேண்டியது ஆயுதக்கட்சிகளும், இந்திய இராணுவமும், இலங்கை இராணுவமும் தான்.
1990 – 2000 வரையும் இலங்கை இராணுவத்தினரும் இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களும் இதற்குக் காரணமாகவிருக்கின்றார்கள்.
2000-2009 வரையும் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களான ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் உள்ளடக்கப்படுகின்றனர்.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு இலட்சத்திற்கு நாற்பதாயிரத்திற்ம் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயரின் கருத்து. இப்போரில் 05 இலட்சம் வரையான மக்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குள் ஒடுக்கப்பட்டதாக ஒரு சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆகக்குறைந்தது 03 இலட்சம் மக்களாவது அங்கு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது நிரூபணமாகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்குச் சம்மதித்த விவகாரம் ஒருபுறமிருக்க, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றால் இவர்கள் தொடர்பான விபரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரிடமாவது இருக்கின்றதா? குறிப்பாக இவ்வளவு தொகையான மக்களுக்குள் வெறுமனே 2000-3000 மக்களது விபரங்களைக் காண்பிப்பது மற்றும் டடசஉ அறிக்கையினை சமர்ப்பிப்பது என்பதும் இவர்கள் மக்கள் மீது எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.
தினப்புயல் ஊடக நிறுவனமானது தமிழ் அரசியல் தலைமைகளிடம் அல்லது பிரதிநிதிகளிடம் நேரடியாகச் சவால் விடுகின்றது. சனல் 4 தொலைக்காட்சியானது காண்பித்த ஆதார ஒளிநாடாக்களை விடவும் பல ஆதாரங்களை சர்வதேசத்திற்குக் காண்பிக்க நாம் தயாராக இருக்கின்றோம். எமக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை ஒரு தீர்ப்பாயத்தின் ஊடாக இவ்வரசியல்வாதிகள் தருவார்களாகவிருந்தால் நிச்சயம் ஆதாரங்களைச் சமர்ப்பிப்போம். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரினது புகைப்படங்களுடன் எம்மிடம் தரவுகள் இருக்கின்றன. வெறுமனே மக்கள் மத்தியிலும், பாராளுமன்றிலும் பூச்சாண்டி காட்டிப் பேசுகின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்கவேண்டும்.
ஒரு பொது மகன் ஆவணங்களைச் சமர்ப்பிக்க போதிய பாதுகாப்புக்களை திரட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை சொகுசு வாழ்க்கையினை வாழும் நீங்கள் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சனல் 4 வெளியிட்ட ஆவணங்களைத் தவிர வேறு ஏதாவது புதிய ஆவணங்கள் அல்லது வலிந்து கடத்தப்பட்டுக் காணாமல் போனோரது முழுமையான விபரங்களை ஏன் நீங்கள் வெளியிடவில்லை.
வெறுமனே அறிக்கைகள் மாத்திரம் ஒரு நாட்டில் இனப்படுகொலை நடந்தது என்பதனை தீர்மானிக்க முடியாது. அதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதன் ஊடாக, அச்சர்வதேச நாடுகள் அதன் உறுப்புரிமை கொண்ட நாடுகள் பெரும்பான்மையாக வாக்களிப்பதன் ஊடாகவே இது இனப்படுகொலை என்பதனை நிரூபித்து பலஸ்தீன் நாட்டிற்கு விடுதலை கிடைத்தது போன்று எமது இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வெறுமனே வாக்குப்பொறுக்கும் அரசியலையே தொன்றுதொட்டு இந்த அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். இந்த நிலைமைகள் ஏன் இன்னமும் மாற்றப்படவில்லை.
கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன? என்பது பற்றி அரசு வெளிப்படையாக கூறுவதற்கும் இவர்களே தடையாக இருக்கிறார்கள்.
இனப்படுகொலையின் வரைவிலக்கணம் என்றால் என்ன? ஐ.நா என்ன கூறுகின்றது என்றால்,
ஒரு இனமாகவோ, குழுவாகவே அழிக்கப்பட்டால் அது இனப்படுகொலை.
விஷ வாயு, கட்டாயக் கருத்தடை, மதமாற்றம் செய்தல் இதில் பல்வேறு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றின் சூழ்நிலை எவ்வாறு அமைகின்றது என்பதற்கு ஏற்ப இனப்படுகொலை தான் நடந்தது என்பது வரையறுக்கப்படும். இதன் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
பலஸ்தீன விடுதலைப் போராளிகள் அவர்களுடைய ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் எவ்வாறு தமக்கான ஒரு நாட்டை சுவீகரித்துக்கொண்டார்கள் என்பது பற்றி குறித்த அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழினத்தை ஏமாற்றி அரசியல் செய்வது தொடர்ந்தும் அரசாங்கத்தை காப்பாற்றும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. தமிழினத்தின் பாதுகாப்பு தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படாத நிலை இந்நாட்டில் தொடர்கின்றது. அரசியல்வாதிகளின் குறித்த செயற்பாடுகளானது தமிழினத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதில் கேள்விக்குறியைத் தான் உருவாக்கியுள்ளது. கண்ணீரோடு கதறி அழுகின்ற எம் தமிழின மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இதைத் தவிர யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்தும் இந்நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. வடகிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. தேசியம், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் வழங்கப்படவில்லை. இச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் கால தாமதம் நீடித்தால் எவ்வித பயனும் இல்லை. தமிழ் அரசியல் தலைமைகளே! இலங்கையில் தற்போது சட்டம் பேணப்படுகிறது. பாதுகாக்கப்படுகிறது என்று கூறுகின்ற நீங்கள் கடத்தப்பட்டு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியையும் பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள். ஏமாற்று அரசியல் இனியும் வேண்டாம்.
இரணியன்