இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்.. 984 ஆம் வருடம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அண்டை நாடான இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இனக் கலவரமும் அதற்கு எதிரான போராளிக் குழுக்களின் தீவிர எதிர் நடவடிக்கைகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது இலங்கையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த தமிழ் ஈழ ராணுவம் (Tamil Eelam Army) என்ற அமைப்பைச் சேர்ந்த 130 பேர், அங்கு நிலைமை மோசமானதால், தமிழகத்தில் தஞ்சமடைந்து இருந்தனர்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்..
இலங்கைக்கு வைத்த குறி…மீனம்பாக்கத்தை சிதைத்த சூட்கேஸ் பாம்!
1984 ஆம் வருடம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அண்டை நாடான இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இனக் கலவரமும் அதற்கு எதிரான போராளிக் குழுக்களின் தீவிர எதிர் நடவடிக்கைகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது இலங்கையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த தமிழ் ஈழ ராணுவம் (Tamil Eelam Army) என்ற அமைப்பைச் சேர்ந்த 130 பேர், அங்கு நிலைமை மோசமானதால், தமிழகத்தில் தஞ்சமடைந்து இருந்தனர்.
அவர்களில் கதிரேசன் என்பவர் சென்னையில் இருந்து செயல்பட்டு வந்தார். தம்பிராஜா, சரவண பவன், லோகநாதன், விஜயகுமார் போன்ற தமிழ் ஈழ ராணுவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இயங்கிய ஏர் லங்கா விமானசேவை நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.
இவர்கள் கூட்டாக சேர்ந்து, இலங்கை விமான நிலையத்தை தகர்ப்பதற்காக ஒரு திட்டம் வகுத்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குக் கிளம்பும் ஏர் லங்கா விமானம், இரவு 11 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தை அடையும்.
அதற்கு ஏற்றவாறு, நேரத்தை கணக்கிட்டு ஒரு டைம் பாம்மை செட் செய்து சூட்கே¬ஸில் வைத்து ஏர் லங்கா விமானத்தில் அனுப்பிவிட்டால், அது கொழும்பு விமானநிலையத்தை 11 மணிக்கு சென்றடைந்ததும் வெடிக்கும். அந்த நேரத்தில் கொழும்பு விமானநிலையத்தில் நிற்கும் ஆறு விமானங்களும் இந்த விபத்தில் வெடித்துவிடும். அப்படி நடந்தால், கொழும்பு நகரில் பாதி தீக்கிரையாகிவிடும் என்பது அவர்களின் திட்டம்.
அதன்படி கதிரேசன் ஏர் லங்கா விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டார். திட்டப்படி 11 மணிக்கு நேரம் குறிக்கப்பட்ட டைம்பாம் சூட்கேஸை தயார் செய்தார். தன்னுடைய நண்பர்கள் மூலம் சூட்கேஸை ஏர் லங்கா விமானத்திற்குள் அனுப்பினார்.
ஆனால், அந்த சூட்கேஸ் கிளியரன்ஸுக்காக போனபோது, மாறிப்போய் லங்கா விமானத்திற்கு திரும்பாமல், லண்டன் விமானத்திற்கு சென்றது. ஆனால், அந்த விமானத்தில் சூட்கேஸுக்கான பயணி இல்லை என்று சொல்லி அவர்கள் கஸ்டம்ஸ் வசம் ஒப்படைத்தனர்.
இந்த குளறுபடிகளுக்கு இடையே லங்கா விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டது. விமான நிலையத்திற்குள் இருந்து இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன், தன் திட்டப்படி டைம் பாம் சூட்கேஸ் ஏர் லங்கா விமானத்தில் செல்லவில்லையே, இப்போது சென்னை விமான நிலையத்திலேயே வெடிக்கப்போகிறதே என்று பதறியபடியே, விமான நிலையத்தைவிட்டு வெளியேறினார்.
அங்கிருந்து வேகமாக கிண்டி சென்றவர், தொலைபேசி மூலம் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சூட்கேஸ் விவகாரத்தைச் சொன்னார். சரியாக பதினோரு மணிக்கு அதில் இருக்கும் டைம் பாம் வெடித்துவிடும் என்ற தகவலையும் சொன்னார்.
இதையடுத்து, விமானநிலையத்திற்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்கள், உடனடியாக அங்கு கிளம்பிப் போகவும் செய்தனர். கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் நேரில் பார்த்து தகவலைச் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்ததுடன் தங்க பிஸ்கெட் கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
இந்த சூட்கேஸில் இருப்பது தங்க பிஸ்கட்டாகக்கூட இருக்கலாம். அதனால், எங்களுடைய சோதனைகளை முடித்துவிட்டு உங்களுக்குச் சொல்கிறோம். அதன்பிறகு வந்து சூட்கேஸை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்த போது, கடிகார முட்கள் 11-ஐ சுட்டிக்காட்ட, டைம் பாம் வெடித்துச் சிதறியது. இதில், 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சூளைமேட்டை சூறையாடிய டக்ளஸ் தேவானந்தா
1986-ம் வருடம், இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சென்னை சூளைமேட்டில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற தமிழ் போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள். டக்ளஸ் தேவானந்தா என்பவர்தான் அந்த இளைஞர்களுக்குத் தலைவன்.
இவர்கள் தங்கியிருந்த, சூளைமேடு இருளர் காலனியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தவர் திருநாவுக்கரசு. அந்தப் பகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், திருநாவுக்கரசுதான் ஓடிவந்து முன்னால் நிற்பார். மக்களும் அவரைத்தான் முதலில் நாடிப்போவார்கள்.
அந்த வருடம் நவம்பர் 1-ம் தேதி தீபாவளி. காலையில் இருந்து தீபாவளிக் கொண்டாட்டங்கள் பட்டாசு சத்தங்கள் என அமர்க்களப்பட்ட ஏரியா, மதியத்திற்கு மேல் வெறிச்சோடியது. அந்த நேரத்தில், நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க இளைஞர்கள், பெட்டிக் கடையில் வாழைப்பழம் வாங்கிவிட்டு காசு தராமல் போனார்கள். இதை கடைக்காரர் தட்டிக் கேட்டதும் தகராறு மூண்டது.
கடைக்காரருக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் இருந்த சிலர் திரள, நிலைமை களேபரம் ஆனாது. காலனியினருக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்களுக்கும் தகராறு பெரிதானது. சத்தம் கேட்டு காலனி மக்களில் பெரும்பகுதியினர், வீட்டை விட்டு வெளியில் வந்து அந்த இளைஞர்களைத் தாக்க முற்பட, பயந்துபோன அவர்கள் தங்கள் அறைக்குச் சென்று ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை கையில் எடுத்து வந்து மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் பட்டாசுச் சத்தம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தவர்கள்கூட பொதுமக்களின் அலறல் கேட்டு வீதிக்கு வந்தனர். அவர்களில் திருநாவுக்கரசு மட்டும், அந்த இளைஞர்களை நோக்கி சுடாதீர்கள்… சுடாதீர்கள்… என்று சொல்லிக் கொண்டே முன்னேறிப்போனார்.
ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத டக்ளஸ் தேவனாந்தாவின் ஏ.கே.47-ல் இருந்து சீறிய தோட்டாக்கள், திருநாவுக்கரசின் உயிரைப் பறித்தன. அருகில் இருந்த சுவரில் பாய்ந்த ஒரு தோட்டா, அதில் அரையடிக்கு பள்ளத்தை ஏற்படுத்தியது என்றால், அதன் வீரியத்தை உணரலாம். அதன் பிறகு அவர்கள் மொட்டை மாடியில் ஏறி, பொதுமக்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர்.
இந்தத் தகவல் பரவி, அந்தப் பகுதி முழுவதும் கூட்டம் கூடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஒரு வேன் நிறைய போலீஸ்காரர்கள் வந்தனர். அந்த வேனையும் ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர்கள் குறிவைத்து சுட ஆரம்பித்ததும், போலீஸ் வேன் அங்கிருந்து மாயமானது. அதன்பிறகு நூற்றுக்கணக்கில் வந்து குவிந்த போலீஸ்காரர்கள் ஏரியா மக்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு மொத்தமாக அந்த ஏரியாவை தங்களின் கண்ட்ரோலுக்கு கொண்டுவந்தனர்.
துப்பாக்கிகளுடன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை சரண் அடையச் சொன்னது போலீஸ். ஆனால், அவர்கள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் முன்னிலையில்தான் சரணடைவோம் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வால்டர் தேவாரம் வந்தார். அவர் முன்னிலையில் பத்து பேரும் சரணடைந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர்கள், இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்கள். திருநாவுக்கரசை சுட்டுக்கொன்ற டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது இலங்கையில் அமைச்சராகி, அரசு விருந்தினராக இந்தியா வந்தபோது கூட டக்ளஸ் தேவானந்தா தலைமறைவுக் குற்றவாளிதான்.
முற்றிலும் முடியாத கதை மனித வெடிகுண்டு-பெல்ட் பாம்-ராஜிவ் காந்தி
பனைமரங்கள் அடர்ந்த, வளர்ச்சியடையாத தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தை நோக்கியே அன்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இருந்தது. உலக அரசியலில் சில அதிர்வுகளை, தெற்காசிய பிராந்தியத்தில் பல முக்கிய முடிவுகளை, இந்திய அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்த காரணமாக இருந்த இந்தச் சம்பவம், தமிழக அரசியலால் என்றென்றும் தவிர்க்க முடியாத விவகாரமாகி நிற்கிறது. சம்பவம் நடந்து முடிந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டபின்பும் கூட இன்னும் இதில் வெளிவராத நிஜங்கள் நிறைய இருக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, அப்போது நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தார். ராஜிவைக் கொல்வதற்காகவே இலங்கையில் இருந்து தமிழகம் வந்திருந்த ஒற்றைக்கண் சிவராஜன், மனிதவெடிகுண்டு தானு, சுபா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரக் கூட்டத்தை தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான களமாகத் தேர்ந்தெடுத்தனர்.
உலகில் அதுவரை வழக்கத்தில் இல்லாத புதிய கொலைக்கருவி உருவாக்கப்பட்டது. நீச்சல் மற்றும் பாராசூட் வீரர்கள் அணிவதைப் போன்ற ஜாக்கெட் டெனிம் துணியில் தயாரிக்கப்பட்டு, அதற்குள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டன. முதுகுவலிக்காரர்கள் இடுப்பில் கட்டிக்கொள்ளும் பெல்ட் வடிவத்தில் டெனிம் துணி பெல்ட் ஒன்றும் தயாரிக்கப்பட்டு அது ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்டது. பெல்டில் பேட்டரி ஸவிட்ச் சர்க்கியூட் வகையறாக்கள் அமைக்கப்பட்டன.
அதை தன் உடலோடு அணிந்து கொண்ட தானு, அதற்கு மேல் சுடிதார் அணிந்து கையில் சந்தன மாலையுடன் ராஜிவ் காந்தியை நெருங்கினார். சந்தன மாலை அணிவிப்பதுபோல் ராஜிவை நெருங்கிய தானு, தன் உடலோடு ஒட்டியிருந்த பெல்ட்பாம்மை வெடிக்க வைத்தார்.
அதில் சிக்கிய ஒரு அகண்ட தேசத்தின் முன்னாள் பிரதமர் ரத்த சகதியானார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர்கள், நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள்,பொதுமக்கள், மனித வெடிகுண்டு தானு உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை நடத்தியது இலங்கையில் இருந்து செயல்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்று சொல்லி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுத்துறை தளபதி பொட்டு அம்மானில் தொடங்கி, தமிழகத்தில் கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக்கூறி நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் என பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்தக் கதையின் தொடர்ச்சி தான், இப்போது மூன்று பேர் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதும், ஏழுபேரின் விடுதலை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உள்ளதும்
பத்மநாபாவும் அவரது தோழர்களும்
இலங்கையில் செயல்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் பத்மநாபா. எதிரிகளை களையெடுப்பதற்காக இவர்கள் மண்டையன் குழு என்ற குழு ஒன்றை அமைத்து இருந்தனர். அந்தக்குழுவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்மநாபாவை பழிவாங்கத் துடித்தனர்.
அப்படிப்பட்ட நேரத்தில், பத்மநாபா, சென்னை கோடம்பாக்கம் ஜாக்காரியா தெருவில் அலுவலகம் அமைத்து, தங்களின் அமைப்புக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, 1991-ஆம் வருடம் ஜுன் மாதம், 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு, ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் அவர் அலுவலகத்திற்க வந்தது.
அதில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள். அவர்கள் டி56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்தனர் என்று சொல்லப்பட்டது(பிறகு அது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் என்று தெரியவந்தது). வந்தவர்களில் இரண்டுபேர் வீட்டிற்கு கீழே காவலுக்கு நிற்க, மற்ற இருவரும் துப்பாக்கிகளுடன் மாடிக்குச் சென்று அறையின் கதவை தட்டினார்கள். கதவு திறக்கப்பட்ட நொடியில், அந்த அறையை நோக்கி சுடத்
தொடங்கினார்கள்.
சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் அறையில் இருந்த பத்மநாபா உள்பட 7 பேரை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தன. மரண ஓலங்கள் அந்தப்பகுதியை அலறடித்தது. அந்த ஓலம் கேட்டு, பக்கத்து அறையில் தங்கியிருந்த பத்மாநாபாவின் மற்ற தோழர்கள் ஒடி வந்தனர்.
அவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அறைக்குள் ஏழு உடல்களும் ரோட்டில் மற்றவர்களின் சடலங்களும் சிதறி சின்னாபின்னமாகிக் கிடந்தன. சம்பவம் நடந்த இடத்தில் சில வெடிகுண்டுகளும், 400 துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நடந்த அன்று, தஞ்சாவூரில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நிற்பதும், 7 பேர் கடல் கையில் துப்பாக்கிகளுடன் இலங்கைக்கு தப்பிச் சென்றனர் என்றும் செய்திகள் வெளியானது. அப்படித் தப்பிச் சென்றவர்களில் ஒருவர் ராஜிவ் கொலை வழக்கை தமிழகத்தில் அரங்கேற்றிய ஒற்றைக் கண் சிவராசன் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில், தமிழகத்தில் அப்போது தஞ்சம் புகுந்திருந்த 180 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த பத்மநாபா மற்றும் அவருடைய தோழர்களின் உடல்கள், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
உருக்குலைந்த தமிழக மான்செஸ்டர்
எங்கு வெடிக்கும்…? எப்போது வெடிக்கும் என்று தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் மரண அவஸ்தையோடு கோவை வாசிகளை உழல வைத்த சம்பவம். பூங்கா, தியேட்டர், ஷாப்பிங்மால், கடைகள், குழந்தைகள் விளையாடும் ரப்பர் பந்துகள் என எல்லாவற்றிலும் குண்டுகள் வெடித்தன. அதற்கு பின்னணியாக அமைந்த சம்பவங்கள்.
1997-ம் ஆண்டு, மோட்டர் சைக்கிளில் மூன்று பேராக அமர்ந்து சென்ற அல் உம்மா இளைஞர்களை, போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை சற்று கடுமையானது. இந்த நேரத்தில், நவம்பர் 29-ம் தேதி போக்குவரத்துறை காவலர் செல்வராஜை சிலர் வெட்டிக் கொன்றனர்.
இந்தப் படுகொலைக்கு காரணம் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்து, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களை பின்னணியாக வைத்து கோவையில், இந்து- முஸ்லீம் கலவரம் வெடித்தது.
இரண்டு தரப்பிலும் ரத்தப்பலிகள், பெண்கள் அவமானப்படுத்தப்படுதல் என்று சம்பவங்கள் தொடர்ந்தன. பிறகு சற்று அடங்கியதுபோல் வெளியில் தெரிந்தாலும், உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. அந்த சூழ்நிலையில், பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவைக்கு ரதயாத்திரை வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவையில் வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் 17ம் தேதி வரை மூலைமுடுக்கில் எல்லாம் வெடித்தன. 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமடைந்தன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் போனது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை சிறப்பு நீதிமன்றம், 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதுபோல், 83 பேருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு
1993- ஆம் ஆண்டு, சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆகஸ்டு 6-ம் தேதி வெடித்த குண்டில் 11 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடலில் இருந்து தெறித்த சதைகள், எதிர்வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது விழுந்தது. இந்த வழக்கில் இமாம் அலி, அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா, பழனி பாபா, நஜிமுதின் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது இமாம் அலியும் பழனி பாபா இறந்துவிட்டனர். அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவானர்.
எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு
1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, காலையில் தூக்கம் கலைந்து செய்திகளைப் பார்த்தவர்களுக்கு பெரும் துக்கம் காத்திருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர்-6ம் நாளை கருப்பு நாளாக அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட சதியால், சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 4.55 மணிக்கு குண்டு வெடித்தது. அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் நின்றபோது இது நடந்தது. நான்கு பேர் பலியானார்கள்.
அடுத்த 15 நிமிடத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. 2 பேர் பலியானார்கள். இரண்டு மணிநேரம் கழித்து சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திரிச்சூர் ரயில் நிலையத்தில் அது நிகழ்ந்தது.
4 பேர் பலியானார்கள். 57 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜுகாத் கமிட்டித் தலைவர் குணங்குடி ஹனீபா, ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பத்தாண்டுகளுக்குப் பின் திரும்பிய ரத்த சரித்திரம் – மேலே நாம் குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் பத்தாண்டுகளுக்கும் இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய சம்பவங்கள். அதன்பிறகு, சில சிறிய அசாம்பாவிதங்கள் தவிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகளோ துப்பாக்கித் தாக்குதல்களோ இல்லை. இப்படி ஓய்ந்திருந்த ரத்த சரித்திரம் மே-1 ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்ற கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன் மூலம் திரும்பி உள்ளது
இரண்டு மாதங்களில் ஸ்வாதியை திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டிய பெற்றோர், அவளை பிணக்கோலத்தில்தான் பார்த்தனர். இந்த சம்பவத்தில், 6 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.