டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று கடைசி போட்டி ஹம்பன்தோடாவில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. குயின்டன் டி காக் 128 ரன்களும், டிவில்லியர்ஸ் 108 ரன்களும் விளாசினர். அம்லா 48 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 340 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு வலுவான தொடக்கம் அமையவில்லை. பெரேரா (37), தில்ஷான் (30), சங்ககாரா (36) ஆகியோர் விறுவிறுப்பாக ஆடியபோதும், பின்னர் வந்த வீரர்கள் பந்துகளை வீணாக்கியதால் ரன் ரேட் உயரவில்லை.
நிதானமாக ஆடிய கேப்டன் மேத்யூஸ் 58 ரன்களில் அவுட் ஆனார். திரிமன்னே 22 ரன்களிலும், பிரியஞ்சன் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 257 ரன்களில் சுருண்டது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. அதேசமயம் 3 போட்டி கொண்ட தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க அணி இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
கடைசி போட்டியில் 71 பந்துகளில் 108 ரன்கள் விளாசிய டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது ஆம்லாவுக்கு வழங்கப்பட்டது.