இலங்கையில் முஸ்லிம்களை தவறானவர்கள் என்ற கோதாவில் பல்வேறுபட்ட பொய்ப் பிரச்சாரங்கள் அதிதீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருவதானது முஸ்லிம் சமுகத்தை மிகவும் வேதனைக்கு உட்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பெரும்பான்மை சமுகமான பௌத்த மக்களிடையே ஒரு சில இனவாதிகள் தேவையற்ற வகையில் முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்துக்களை அப்பாவி பௌத்த மக்களிடத்தில் விதைப்பதால் இலங்கையின் இறைமையும், சமய மற்றும் ஒழுக்க விழுமியங்களும் சீர்குலைந்து வருவதால் எதிர்காலத்தில் சமகங்களிடையே அமைதியற்ற நிலைமைகள் தோற்றம் பெறலாம். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை பௌத்த மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புகின்றனர் மாறாக அவர்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் அல்லர் கடந்த காலங்களில் அரசியல் பொருளாதார விடயங்களில் மட்டுமல்லாது சமய விழுமியங்களிலும் கூட ஒற்றுமையாகவே வாழ்ந்துள்ளனர். இந்நத வகையில் பார்க்கும்போது இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் பௌத்த மக்களுக்கோ அல்லது ஏனைய சமய மக்களுக்கோ எதிரானவர்கள் அல்லர் ஆனால் இன்று ஒரு சில பௌத்த கடும்போக்கைக் கொண்ட இனவாதிகள் அமைதியாக வாழும் சமுகங்களைக் குழப்பி குலம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல் தமது சுய மற்றும் அரசியல் இலாபங்களுக்காக அப்பாவி மக்களை குழப்பும் நிலைமைகளே இன்று சமயங்களுக்கிடையிலான பிரச்சினைகளில் ஒன்றாகும். மேற்படி நிலைமைகளின் காரண கர்த்தாக்களாக பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமைய, இராவணபலய உள்ளிட்ட சில தீய செயற்பாட்டாளர்களே விளங்குகின்றனர். இவர்கள் இலங்கையில் கடந்த மூன்று தஸாப்த காலமாக நிலவிய யுத்த சூழ் நிலையின்போது ஒளிந்திருந்து விட்டு தற்போது பிற்போக்கான முறையில் தாம்தான் கெட்டிக் காரர்கள் என்று மார்தட்டுவது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளாகவே நோக்கப்பட்டுள்ளதாக சமாதான விரும்பிகள் தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர். எந்தச் சமயமும் சொல்லவில்லை மற்றய சமயத்தை தாக்குவதற்கோ அல்லது கொச்சைப்படுத்துவதற்கோ மாறாக அவை ஒவ்வொன்றும் அமைதியையும் சமதர்மத்தையும் போதிக்கின்றனவாகவே காணப்படுகின்றன. மனிதனை புனிதனாக ஆக்கும் வகையிலான நற் போதனைகளையே எல்லாச் சமயங்களும் தமது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மக்களை வழி நடாத்திச் செல்கின்றன. ஆனால் தற்போது ஒரு சில இனவாதிகள் புதிதாக சமயங்களைக் கண்டவர்கள்போல் ஏதோ சமயத்தில் முழுப்பேறும் பெற்றவர்கள்போல் சிறுபான்மைச் சமுகங்கள் இங்கு வாழ முடியாது அவர்கள் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் இது பௌத்த நாடு என்ற வாறெல்லாம் கூத்தாடுகின்றனர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்குவதற்கோ அல்லது அவர்களின் வாழ்வியல் விடயங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இதனையே இலங்கையின் அரசியலமைப்புச் சட்டங்களும் அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாற்றமாக கருத்துக்களைத் தெரிவித்தல் அல்லது ஒரு இனத்தை இழிவு படுத்துதல் என்பன பாரிய மனித உரிமை மீறல்களுக்குள் உள்ளடங்கும் விடயங்களாகும். ஆனால் இவ்வாறு சட்டதிட்டங்களை முற்றிலும் முடக்கும் மற்றும் அவற்றிற்கு எதிரா செயற்படும் நிலைமைகளில் ஒரு சில சட்ட விரோ குழுக்கள் செயற்படும் நிலைமைகள் காணப்படுவதற்கு வழி வகுத்துள்ளமைக்கு ஒரு சில அரசியல் தலைமைகளே காரண கர்த்தாக்களாகும். இவர்களின் சகல ஆசீர் வாதங்களுடன் சட்ட ரீதியற்ற வகையில் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு ஆடும் ஆட்டங்கள் எல்லாம் இலங்கையில் நடக்காது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் காரணம் இலங்கைக்கு அருகில் இருக்கும் நாடுகளில் அதிகமானவை முஸ்லிம் நாடுகள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த முஸ்லிம் நாடுகள் தான் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பெரும் பங்கு வகிப்பது மட்டுமல்லாது தற்போது இலங்கை சர்வதேச ரீதியாக போர்க் குற்றவாளியாக வர்ணித்து இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பொருளாதார தடைகளை மேற் கொள்வதற்கும் முயற்சித்து வரும் இத்தருணத்தில் அதிகமாக கைகொடுக்கும் நாடுகளாக இனவாதிகளால் மரகல என கேவலமாக வர்ணிக்கும் முஸ்லிம்களின் முஸ்லிம் நாடுகள்தான் என்பதனை முட்டாள்தனமானவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கையில் வளர்ச்சிப் போக்கிற்கு கைகொடுக்கும் நாடுகளாக முஸ்லிம் நாடுகள் இருக்கும்போது இலங்கையில் முஸ்லிம்கள் அதற்கு பரிகாரமாக சகிக்க முடியாத கொடுமைகளே அதிகம் அனுபவிக்கின்றனர். அரசாங்கமும் இனவாதிகளும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் காக்காமார் செய்யும் உதவிகளையும், ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதையும் இவ்வாறு இன வேறுபாடு பார்க்காது 90 வீதமான மாற்றுச் சமுகங்கள் இருக்கும் நாட்டிற்கு உதவி செய்யும்போது அதற்கு பரிகாரமாகவாவது இங்கு வாழும் சொற்ப முஸ்லிம்களை உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உவத்திரிக்கமாவது செய்யாமல் இருக்கலாமல்லவா?. ஆனால் இன்று இனவாத கடும்போக்கு வாதிகளால் முஸ்லிம்கள் பல வழிகளிலும் தீண்டப்பட்ட வன்னமேயுள்ளனர். மேற்படி நிலைமைகளை அவதானித்த சமாதான விரும்பிகளும் சமய நம்பிக்கையாளர்களும் அடிக்கடி மேற்படி இனவாதிகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என விடுக்கப்பட்ட பல கோரிக்கைகள் ஜனாதிபதியாலும், அரசாங்கத்தாலும் ஏன் பாதுகாப்புத் தரப்பினராலும்கூட உதாசீனப்படுத்தப்பட்ட வரலாறுகளே அதிகம் காணப்படுகின்றன. இலங்கை வாழ் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் ஏன் எதிர்காலத்திலும் கூட பெரும்பான்மை மக்களுக்கு விசுவாசமானவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும் இருந்தும் இருக்கவும் விரும்பும்போது தேவையற்ற விசமப் பிரச்சாரங்கள் மூலம் தேவையற்ற குழப்ப நிலைமைகளை மக்கள் மத்தியில் பொதுபல சேனாவும் ஜாதிக ஹெல உறுமையவும் செய்து வருவதானது பாரியதொரு மனித உரிமை மீறலாகும். முஸ்லிம் சமுகம் பெரும்பான்மை சமுகங்களுடன் ஒற்றுமையாக இருப்பதற்கும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதன் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே ஜனாதிபதிக்கு பஹ்ரயின் அரசாங்கம் அந்நாட்டின் உயர் விருதான கலீபா விருதினை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கிக் கௌரவித்துள்ளமை முஸ்லிம்கள் மற்றய சமுகங்களுடன் எவ்வாறு ஒற்றுமையாகவுள்ளனர் என்பதனைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறு ஒற்றமைக்கும் சகோதரத்துவத்திற்கும் வழி வகுக்கும் புனித இஸ்லாம் மதத்தை அவமதித்து அதனை ஒடுக்கவும் முஸ்லிம்களை துன்புறுத்தி வஞ்சிப்பதற்கும் இலங்கையின் இனவாதக் குழுக்கள் மூஞ்சை நீட்டிக் கொண்டிருப்பதை ஜனாதிபதி இனியாவது தடை செய்ய வேண்டும் என்பதே முழு முஸ்லிம் சமுகத்தினதும் கோரிக்கைகளாகும். ஒரு முஸ்லிம் நாடு தமது நாட்டின் அதி உயர் விருதான கலீபா விருதினை வழங்கவது சாதாரண விடயமல்ல அந்த நாட்டிலேயே சமய மற்றும் அரசியல் ரீதியாக பல விடயங்களில் முதல் நிலையில் நிற்கும் பல்லாயிரக் கணக்கானோரின் மத்தியில் இந்த விருதினை இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கியமையையிட்ட முஸ்லிம் சமுகம் சந்தோசம் அடைந்தாலும் மேற்படி நிலைகைளுக்குள்ளும் இந்த நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்கள் மீதும் இனவாதிகளால் மேற் கொள்ளப்பட்டு வரும் விரும்பத்தகாத அருவருக்கத்தக்க இனவாதச் செயற்பாடுகள் கவலை கொள்ள வைத்துள்ளதை ஜனாதிபதிக்கு முஸ்லிம் சமுகம் மீண்டும் ஒரு முறை ஞாபகமூட்ட விரும்புகின்றது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மேற்படி விருதானது சாதாரண விருதல்ல பஹ்ரயின் நாட்டின் காலஞ் சென்ற மன்னர் சேக் இஸாபின் சல்மான் அல் கலீபா அவர்கள் மனிதாபிமானத்திற்கு வழங்கிய உன்னத சேவையின் காரணமாகவே பஹ்ரயின் அரசால் மேற்படி விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இம்முறை இலங்கை ஜனாதிபதியை அந்த அரசு தெரிவு செய்து வழங்கியமை மனதாபிமானத்திற்கான செயற்பாட்டுக்கேயாகும். இந்த வகையில் மேற்படிச் செயற்பாட்டின் பெறுபேற்றை ஜனாதிபதி அந்த நாட்டிற்கு காட்டும் வகையில் எதிர்காலத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வழிவகுக்கும் செயற்பாடுகளை அவசரமாக முன்னெடுத்து தற்போது பெரும்பான்மை சமுகத்தில் தோற்றம் பெற்றுள்ள இனவாத குழுக்களால் சிறுபான்மை மக்களின் சமய மற்றும் மத விடயங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடித் தனங்களை உடன் நிறுத்தி இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி தற்போது பெற்றுள்ள பஹ்ரயின் விருதின் பிரதி பலிப்பாக இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளுக்கும், சட்டத்திற்கும் சவால் விடுக்கும் தீய செயற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசரமும் அவசியமும் தற்காலச் சமுகத்தினால் நன்கு உணரப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களின் எதிர் கால ஒற்றுமை சமாதானம் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமுகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படிக் கோரிக்கைகளின்பால் ஜனாதிபதி அதீத கவனஞ் செலுத்துவார் என்ற நம்பிக்கையில் முஸ்லிம் மக்கள் உள்ளனர். இலங்கைக்கு பல வழிகளிலும் உதவும் நாடுகளாக பல முஸ்லிம் நாடுகள் இருக்கின்றதுடன் குறிப்பாக இந்த ஜனாதிபதிக்கு அந்நாடுகள் உதவிக் கரம் நீட்டும்போது அவற்றை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களை அரவனைக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் ஜனாதிபதிக்கு இருக்கும்போது அதனை மீறி முஸ்லிம் சமுகத்தின் மீது பாயும் இனவாத தீவிரவாதம் பஹ்ரயின் விருதிற்குப் பிறகாவது வெற்றியளிக்க வேண்டும் இதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஜனாதிபதிக்கே உள்ளது. இன்று ஜனாதிபதியின் பல முயற்சிகளுக்கு அரசுக்க உள்ளேயும், அரசுக்கு வெளியேயும் இருக்கும் குள்ளநரிக் கூட்டம் ஜனாதிபதியின் சகல உதவிகளையும் பெற்றுக் கொண்டு அவருக்க எதிராக செயற்பட்டு வரும் நிலைமைகளை மக்கள் கண்டுள்ளனர். எனவே ஜனாதிபதி அவர்களை புறந்தள்ளி சமய ஒற்றுமையை மேம்படுத்துவாரானால் அவர் ஆசியவின் அதிசய மனிதர் என்ற விருதைக் கூடப் பெறலாம். ஆனால் இதற்கு அவர் அரவனைத்து வைத்திருக்கும் கைப்பொம்மைகள் இடங் கொடுப்பார்களா? என்பதிலும் கூட சந்தேகங்கள் காணப்படத்தான் செய்கின்றன. எனவே ஒரு மனிதருக்கு உயர் விருதுகள் வழங்கப்படுவது அவர்களின் மனிதாபிமான மற்றும் ஒற்றுமை, சமாதானம் என்பனவற்றை அடிப்படையாக வைத்தே அதன் அடிப்படையில்தான் இலங்கை ஜனாதிபதிக்கும் பஹ்ரயின் அரசு அந்த நாட்டின் உயர் விருதினை வழங்கியுள்ளது அந்த வகையில் அதன் மகிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இனவாதக் காய்ச்சலை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.