இலங்கையைச் சேர்ந்த 16 பேர் இணைந்துள்ளதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

344

 

பொதுபல சேனாவை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. தற்போது அதன் ‘ஆட்டம்’ குறைந்துவிட்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், அவ்வப்போது தங்களது குரலை எழுப்புவதன் மூலமாகத் தங்கள் இருப்பை வெளிப்படுத்துகின்றனர்.

அதை விட முஸ்லிம் மக்கள், கடந்த ஆட்சிக் காலத்தில், தங்களுக்கெதிராக அவ்வமைப்பு மேற்கொண்ட நச்சுப் பிரசாரங்களையும் மறந்திருக்க மாட்டார்கள். மனிதநேயமிக்க ஏனைய இனத்தவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

தற்போது அவ்வமைப்பு, புதியதொரு கதையுடன், தங்களை நிலைநிறுத்த முயற்சி எடுக்கிறது என்றதான எண்ணம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
29-1422538766-02-isis
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆதிக்கம் இலங்கையில் ஏற்படக்கூடும் என்பதைத் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, மாலைதீவுகளைச் சேர்ந்த 6 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைவதற்காக, இலங்கையூடாகச் செல்ல முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு, மாலைதீவுகளைச் சேர்ந்த 60,000 பேர் இலங்கையில் இருப்பதாகவும், அவர்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புடையவர்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்ததோடு,

தாங்கள் முஸ்லிம்களுக்கெதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்த, ‘எமது நாட்டில் உள்ள இஸ்லாமியச் சகோதரர்கள் மீது எமக்குச் சந்தேகமில்லை. இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் மீதே எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு விடயங்கள் உள்ளன.

ஒன்று: ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் இலங்கைக்கு ஆபத்து  – அதன் அளவு எவ்வளவு என்பது பற்றி விவாதம் இருந்தாலும் – இருக்கிறது.

இரண்டாவது: இதில், நாட்டின் பாதுகாப்புப் பற்றி அக்கறை கொண்ட அமைப்பாகத் தம்மை வெளிப்படுத்தி, நீலிக்கண்ணீர் வடிக்கும் பொதுபல சேனாவின் மறைக்கப்பட்ட இனவாதம்.

Pothubala_CIபொதுபல சேனாவின் இந்தப் போக்கை, ஹலால் விடயத்திலும் அவதானித்திருக்க முடியும். ஹலால் தொடர்பான விமர்சனங்கள் முன்னரே காணப்பட்டிருந்தன.

ஹலால் சான்றிதழைப் பெறுமாறு, ஒருவகையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

அத்தோடு, ‘இந்த உற்பத்திக்கு ஹலால் இல்லை, நீங்கள் உண்மையான முஸ்லிமாக இருந்தால், இதைப் புறக்கணியுங்கள்’ என்ற பிரசாரமும், அதிகரித்திருந்தது.

ஒரு வகையில், முஸ்லிம்கள் என்ற கணிசமான சனத்தொகையைப் பயன்படுத்தி, ஹலால் சான்றிதழை, குறித்த சில பிரிவினர், தவறான நோக்கங்களுக்கு வழிநடத்துகிறார்களோ என்ற சந்தேகம் காணப்பட்டது.

ஆனால், அந்தத் தவறை எதிர்ப்பதாக இருந்தால், ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை மீதும், அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், உண்மைகளைக் கொண்ட பிரசாரத்தை பொதுபல சேனா முன்னெடுத்திருக்க முடியும்.

ஆனால், பொதுபல சேனாவின் நோக்கமாக அது காணப்பட்டிருக்கவில்லை. மாறாக, உண்மையை அல்லது சந்தேகத்தைப் பயன்படுத்தி, தங்கள் நிகழ்ச்சி நிரலைப் புகுத்தும் எண்ணமே அவர்களிடம் காணப்பட்டது என்பது வெளிப்படை.

அதன் காரணமாகத் தான், ஹலாலைப் புறக்கணியுங்கள் என்பதற்குப் பதிலாக, ஹலாலைத் தடை செய்யுங்கள் என்பது, அதன் பிரசாரமாக இருந்தது.

ஹலாலைப் புறக்கணியுங்கள் என்பது, ஹலாலில்லாத பொருட்களைப் புறக்கணியுங்கள் என்ற முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் பிரசாரத்துக்கு எதிர்ப்பிரசாரமாக இருந்திருக்க முடியும். மாறாக, பொதுபல சேனா செய்தது, தனது நிகழ்ச்சி நிரலுக்கான பிரசாரங்கள்.

அதன் பிரசாரங்கள் காரணமாக, முஸ்லிம்கள் மீது, பெரும்பான்மை இனத்தவர்கள் சந்தேகம் கொள்ளவேண்டி ஏற்பட்டது.

பொதுபல சேனாவை, அதன் உச்சக்கட்ட விஷத்தைக் கக்குவதிலிருந்து பெரும்பாலான மக்கள் நிராகரித்ததாக மார்தட்டிக் கொள்ளலாம்,

ஆனால், அவ்வமைப்புக் காரணமாக முஸ்லிம்கள் தொடர்பாக பெரும்பான்மை மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட சந்தேக உணர்வு, இன்னமுமே இருக்கிறது என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

ஹலால் தொடர்பாகக் காணப்பட்ட சிக்கல்களில், காணப்பட்டதாக நம்பப்பட்ட பிரச்சினையொன்றை பொதுபல சேனா எவ்வாறு பயன்படுத்தியதோடு, அதேபோன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரத்திலும் அவ்வாறே செயற்பட விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழுவது ஆச்சரியமில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்தென்பது, எந்த நாட்டுக்கும் இல்லாததோர் ஆபத்துக் கிடையாது.

அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த, செல்வந்த நாடுகளில் கூட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் இணைவோரின் எண்ணிக்கை, அந்தந்த அரசாங்கங்களுக்கு பெரிய தலையிடியாக உள்ளது.

பிரான்ஸ் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அக்குழுவினால் எங்கெங்கு விரும்புகிறதோடு, அங்கெங்கு தாக்குதல் நடத்தப்பட முடியுமென்பதைக் காட்டுகிறது.

இலங்கையிலும் கூட, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்ட அடிப்படைவாதிகள் காணப்படலாம். அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் இணையலாம்.

ஏற்கெனவே, இலங்கையைச் சேர்ந்த குறைந்தது 16 பேராவது தங்கள் ஆயுதக் குழுவில் இணைந்துள்ளதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்தோடு, மாலைதீவுகளைச் சேர்ந்தோர், இலங்கையூடாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் இணைய முயன்றார்கள் என்ற பொதுபல சேனாவின் குற்றச்சாட்டு, கவனமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது.

ஏனெனில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் கூட, இலங்கையைச் சேர்ந்தோர், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் இணைந்துள்ளமை தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

ஆனால், பொதுபல சேனாவின் கருத்தில் முக்கியமானது, இலங்கையில் மாலைதீவு வாசிகள், 60,000க்கும் மேற்பட்டோர் காணப்படுவதாகவும், அவர்களில் எத்தனை பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது என்பது தான்.

பலரும் அறிந்தபடி, மாலைதீவுகளைச் சேர்ந்த பலர் இங்கு, கல்வித் தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் வசிக்கிறார்கள் என்பதோடு, ஏனையோரைப் போல அவர்களில் பெரும்பாலானோர், சட்டத்தை மதித்துச் செயற்படும் சாதாரணமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

மாறாக, அவர்களில் எத்தனை பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்களோ தெரியாது என்பது, அவர்கள் அனைவர் மீதும் சந்தேகப்படுங்கள் என்பதை மறைமுகமாகச் சொல்வது தான்.

உலகிலுள்ள அடிப்படைவாத, இனவாத அமைப்புகள் அனைத்தும் கொண்டிருந்த அடிப்படையான அம்சமென்பது, பல்வகையை எதிர்ப்பது தான்.

Donald-drump-720x420டொனால்ட் ட்ரம்ப்

பெரும்பான்மையான தங்கள் இனத்தைத் தவிர, வேறு இனங்கள் மீதான எதிர்ப்பென்பது, வெளிநாட்டவர் மீது அதிகமாகப் பாய்வது தான்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் செய்துகொண்டிருப்பதும், இதே விடயம் தான். பெரும்பான்மை மக்களுக்கான அச்சவுணர்வைத் தோற்றுவிப்பதென்பது, குறுகிய அரசியல் கொள்கைகளுக்கு முக்கியமானதொரு விடயம்.

அதேபோல், இலங்கையிலுள்ள இஸ்லாமியச் ‘சகோதரர்கள்’ மீது சந்தேகமில்லை எனச் சொல்வதன் மூலமாக, முஸ்லிம்கள் மீது தாங்கள் எதிர்ப்பானவர்கள் அல்லர் என்பதைக் காட்ட முயன்றிருக்கிறது.

ஆனால், பொதுபல சேனாவைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவமாக, அவ்வமைப்புத் தொடர்பாகப் பெரும்பாலான இலங்கையர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

நாட்டுப்பற்று என்பதற்குப் பின்னாலும் பௌத்த தர்மம் என்பதற்குப் பின்னாலும் மறைந்திருந்து, அவ்வமைப்புத் தெரிவிக்கும் இனவாதக் கூச்சல்களுக்கு, இலங்கையின் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பானவர்கள் என்பது தான் உண்மையானது.

ஆகவே, பொதுபல சேனா எழுப்ப நினைக்கும் அபாயக் கூச்சலை நிராகரிக்க வேண்டிய தேவை, இலங்கையர்களுக்கு இருக்கிறது.

அருகிலிருக்கும் வெளிநாட்டவரோ, மாற்றினத்தவரையோ சந்தேகிக்குமளவுக்கு, இலங்கையில் ஆபத்து நிலை இன்னமும் ஏற்படவில்லை.

எந்த ஆபத்தும் ஏற்படுவதற்கு முன்னர் தயாராக இருப்பது சிறப்பானது தானே, பிரச்சினை ஏற்படும் வரையில் காத்திருப்பது, எவ்வளவு அறிவுபூர்வமானது என்ற சந்தேகம் ஏற்படலாம். நிச்சயமாக, ஆபத்து இன்னமும் உச்ச அளவில் காணப்படவில்லை என்பதற்காக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்து என்ற உண்மையான விடயத்தை, இலங்கை புறக்கணிக்க முடியாது.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடும் போது, ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஒத்துழைப்பைக் கோர முடியும்.

வெளிநாடுகளின் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம், சந்தேகத்துக்குரிய நபர்களை இனங்கண்டு, அவர்களைப் பின்தொடர முடியும்.

அதேபோல், இலங்கையிலும் சந்தேகத்துக்குரிய நபர்களை இனங்கண்டு, அவர்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, இலங்கையர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பையும் இலகுவாகப் பெற முடியும்.

இவற்றைச் செய்வதன் மூலம், இலங்கையில் இருப்பதாக பொதுபல சேனா காட்ட முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்து, இலங்கையில் ஏற்படுவதற்கு முன்னரே தடுக்க முடியும்.

இவற்றின் மூலம், பெறுமதியற்ற சில்லறைகளாக மாறிக்கொண்டிருக்கும் பொதுபல சேனாவின் கூச்சலைக் குறைக்க முடியும்.

ஆனால், பணத்தாள்களை விட சில்லறைகளின் ஒலி அதிகமானது என்பதால், சில்லறைகளின் அதிகரித்த ஒலி கேட்பதற்கு அனுமதிக்காமல், பணத்தாள்களும் தங்கள் பெறுமதியை வெளிப்படுத்த ஆரம்பிக்க வேண்டிய தருணமிது.

இது, அடிப்படைவாதிகளுக்கான நேரமல்ல, மிதவாதிகளுக்கான நேரம். பொதுபல சேனாவின் கூச்சல்களைத் தடுத்து நிறுத்த, இனம், மதம், சாதி, மொழி பார்க்காமல், அனைவரும் ஒன்று சேர்ந்தால், இலங்கை எனும் எமது தாய்நாடு, எம்மனைவரதும் மகிழ்ச்சியானதான, ஒற்றுமையானதான நாடாகத் தொடர்ந்தும் இருக்க முடியும்.

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

SHARE