இலங்கையை ஒரு பௌத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம்

454

முன்னாள் சட்ட விரிவுரையாளர் தம்பு கனகசபையால் எழுதப்பட்ட “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 19ம் திகதி கனடாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியம் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியம்,

“முன்னாள் சட்ட விரிவுரையாளரான திரு.தம்பு கந்தையா எழுதியுள்ள மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலை வாசித்த பின்னர் மகாவம்சம் பற்றிய பல செய்திகளையும் உண்மைகளையும் நான் அறிந்து கொண்டேன்.

இலங்கையை ஒரு பௌத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம். ஏக பௌத்தம் என்ற பொய்யான கருத்துடன் இது எழுதப்பட்டுள்ளது.

மகாவம்சத்தின் கதை ஒரு அருவருக்கத் தக்க கதை. சிங்கத்துக்கும் ஒரு வங்க நாட்டு அரசிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன. அண்ணன் தங்கச்சி முறையுள்ள அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து 16 இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.

அந்தப் பிள்ளைகளில் மூத்தவன்தான் விஜயன். துட்டனான விஜயனும் அவனது 700 தோழர்களும் மொட்டையடிக்கப்பட்டு அவனது தந்தை சிங்கபாகுவால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இலங்கையில் தம்பதெனியாவில் வந்து இறங்குகிறார்கள்.

பின்னர் விஜயன் இயக்க அரசியான குவேனியை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். விரைவில் குவேனியைக் கைவிட்டு பாண்டிய நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்கிறான். அவனது தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள். மகாவம்சத்தை ஒரு புராணம் என்றுதான் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு பௌத்தர்களின் மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக எழுதப்பட்டது என மகாநாம தேரர் குறிப்பிடுகிறார்.

இந்தப் பாடநூலில் சோழ நாட்டுத் தமிழ் மன்னனான எல்லாளன் நீதி நெறிப்படி ஆண்ட மன்னன் எனவும் அவனிடம் நீதி வேண்டிப் போகிறவர்கள் அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் நீதி கிடைக்கும் என மகாவம்சமே கூறுகின்றது.

இந்தக் கதை மனுநீதி கண்ட சோழன் கதை போன்றது. தமிழ் மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் “புன்னெறி” (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது என தெரிவித்துள்ளார்.

நூலின் முதல் படியை ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி லிபரல் கட்சி வேட்பாளர் சட்டத்தரணி கரி ஆனந்தசங்கரி பெற்றுக் கொண்டார்.

 

SHARE