உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் தொடர்ந்து போராடுவோம்-

786
ரவிகரன்-ltte_forign-001
 தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் இன்னொரு சாட்சியாகும் என தெரிவித்துள்ளார்.

 என்று உறுதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தீவிலே காலம் காலமாக தமிழர்கள் கடும் இன அடக்குமுறைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில், இலங்கை அரசானது தமிழர்கள் மீது தமது அரசியல் கட்டமைப்புக்கள் மூலம் மேற்கொண்ட இன ஒடுக்குமுறை வடிவங்கள் எண்ணிலடங்கா.

தெற்கில் எத்தகைய அரசு அமைந்த போதிலும் தமிழர் மீதான இன அழிப்பில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை. தனித்துவமான தேசிய இன அடையாளக் கட்டமைப்புக்களை தமிழர்கள் கொண்டிருந்தமையே இவ் அனைத்து அடக்குமுறைகளுக்குமான காரணமாகும்.

அனைத்து வழிகளும் அடைக்கபட்டு அடக்குமுறை திணிக்கப்பட்ட போதே, இயற்கையின் தன்னியல்பான விதியாக தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தை தேர்ந்தெடுத்தனர். எனினும் இக்காலத்தையும் தனது இன அழிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்ளவே இலங்கை அரசு பயன்படுத்தியது . பல நாடுகளும் இதற்குத் துணை நின்றது உலக நாகரீகத்தின் அவமானமான அடையாளமாகும்.

இந்நிலையில் போருக்குப்பிந்தைய காலகட்டத்தில் ஜனநாயக வழியில் போராடும் தமிழர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. வன்முறைப் பாதையை மௌனித்து ஜனநாயக வழியில் தமது உரிமைகளைக் கேட்கும் மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகள் உலக நீதி முறைமையை கேள்விக்குள்ளாக்குகிறது. தாயகத்தில் பெண்கள், மீதான அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன. இளைஞர்கள் மீது தொடரும் கைது அச்சுறுத்தல்களால், அவர்கள் மீது இடப்பெயர்வு நிர்ப்பந்தம் திணிக்கப்படுகிறது.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் தொடரும் உச்சக்கட்ட அடக்குமுறையாக, புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை விளங்குகிறது. ஜனநாயக அமைப்புக்கள் மீதான இத்தடைகளைக் கண்டிக்கவும், தாயகத்தில் தலைவிரித்தாடும் இன அடக்குமுறையை தடுத்து தமிழர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சர்வதேசம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். எமது உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் எத்தனை தடைகள், இடையூறுகள் வரினும் தொடர்ந்து போராடுவோம் .

 

SHARE