இலங்கை அரசுக்குச் சார்பான ஜெனிவாத் தீர்மானமும் மஹிந்த தரப்பினரின் விஷமத்தனமான அர்த்தமற்ற ஆர்ப்பாட்டமும்

372

அண்மையில் ஜெனிவாவில் இலங்கை அரசுக்குச் சார்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே. இத்தீர்மானமானது உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிரானவொன்றே. தமிழ் மக்களின் பிரச்சினையை நீடிக்கச்செய்து அந்நீடிப்பில் இலங்கைத் தீவு முழுவதையுங் கபளீகரஞ் செய்யும் உலக வல்லாதிக்க சக்திகளின் கபட நோக்கத்தின் ஓர் அம்சமே இத் தீர்மானமாகும். இவ்வல்லாதிக்க சக்திகளில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை குறிப்பிடக்கூடிய தேசங்களாகும்.

எவ்வாறு இலத்தீன் அமெரிக்க நாடுகளிலொன்றான வியட்நாம் அமெரிக்காவின் அகோரமான பொருளா தாரச் சுரண்டலுக்கு ஆளானதோ அவ்வாறே தென்கிழக்காசிய நாடுகளிலொன்றான இலங்கையும் ஒரு வியட்நாமாக மாறும் அபாயத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கு இத்தீர்மானமானது வழிவகுக்குமென்பதே நிஜமாகும்.

ஆனால் தமது ஆட்சியதி காரத்தை ரணில் தரப்பினரிடம் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்ற இரு தேர்தல்களிலும் முறையே இவ்வாண்டின் தை மாதத்திலும், ஆவணித் திங்களிலும் பறிகொடுத்துவிட்ட மஹிந்த தரப்பினர் மிகக் குறுகிய அரசியல் இலாபத்தைப் பெறுவதை நோக்காகக் கொண்டு அண்மையில் மிகப்பெரியளவில் இலங்கை அரசுக்குச் சார்பான ஜெனிவாத் தீர்மானமானது தனித் தமிழ்நாடு அமைக்க விரும்பும் பிரிவினைவாதி களை ஊக்குவிக்கும் எனக் கருத்தற்ற ஓர் அபிப்பிராயத்தை முன்வைத்தமை மட்டுமல்ல இந்த அபிப்பிராயந் தொடர்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துமுள்ளார்கள். வேடிக் கையும், விநோதமும் யாதெனில் இவ்வார்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்த மஹிந்த சார்பு அரசியல் வாதிகளுக்கு ஜெனிவாத் தீர்மானமானது தனித்தமிழ்நாடு பிரிவினைக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனத் தம்மால் கூறப்பட்ட கருத்தானது முழுக்க முழுக்க அர்த்தமற்றதும், அபத்தமானதுமான ஒன்றாகும் என மிகத் தெளிவாகத் தெரிந்ததேயாகும்.

இவ்வாறாக அவர்களால் தெளிவாகத் தெரிந்த ஒரு விடயத்திற்கு முற்றிலும் மாறான ஓர் அபத்தமான கருத்தை வெளியிட்டு அதுதொடர்பில் மிக வலுவான நிலையில் ஓர் ஆர்ப்பாட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்து அரசி யல் இலாபம் பெறும் தைரியத்திற்கு இத்தேசத்தில் வாழும் கல்வியாளர்கள் உட்பட அனைத்து மக்களினதும் அரசியல் அக்கறையின்மையும், தெளிவின்மையும், தெளிவிருந்தும் வாளாவிருக்கும் சாபக்கேடுமே மூலக்காரணிகள் எனின் அவை மிகையன்று.

மேலும் ஜே.வி.பி அமைப்பில் முதனிலைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிப் பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதியதொரு அரசியல் கட்சியொன்றையும் ஆரம்பித்து மஹிந்த ஆட்சியின்போது அமைச்சர்ப் பதவி யையும் வகித்துத் தமிழர் விரோதத் தன்மையை மஹிந்த தரப்பினரை விட அதிகளவு வீச்சோடு பிரதிபலித்து வந்த விமல் வீரவன்ச என்பார் தற்போதைய ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, தமிழ் ஈழம் என தேச வரைபடம் கீறி அத்தீர்மானமானது ஆர்ப்பாட்டப் போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட மையக்கருவான தமிழ் ஈழக்கோரிக்கையை வலுப்படுத்தும் என்னும் முற்றிலும் அரசியல் அறிவுக்குப் பெருஞ் சவாலாக விளங்கும் அர்த்தமற்ற அபிப்பிராயத்தை மேலும் மெருகூட்டி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்றவை தமிழ் ஈழத்தைத் தமிழ் மக்களுக்குப் பிரித்துக்கொடுப்பதற்குத் தயாராகிவிட்டனவென பூச்சாண்டியும் காட்டியுள்ளார். மஹிந்த தரப்பினரின் அரசியல் இலாபம் பெற முனையும் குருட்டாம்போக்கில் அமைந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுசரணையாக மேலும் பல படிகள் மேற்சென்று வீரவன்ச அவர்கள் கருத்தற்ற தேசப்படம் வரைந்து தன்னைத்தானே முட்டாளாக்கிக்கொண்டுள்ளார். விமல் அவர்கள் நன்றாகத் தெரிந்தே தன்னை முட்டாளாக்கிக் கொண்டிருப்பது வெள்ளிடைமலையே. மஹிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சிபீடமேறவும் வேண்டும். அத்தரப்பினரின் ஆட்சியிலே மீண்டும் தான் அமைச்சுப் பதவி பெற்று சுகங்காணவும் வேண்டும் என்னும் ஆத்ம உந்துதலின் பாற்பட்டுத் தெளிவாகத் தெரிந்த நிலையில் விமல் வீரவன்ச அவர்கள் சிரிப்புக்கிடமான வரைபடமொன்றை வரைந்து மஹிந்த தரப்பினருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றாக இல்லாதபோதுங்கூட இலங்கையில் 1971ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் சமநெறி அரசைநாடி ஆயுதக் கிளர்ச்சியொன்றை முன்னெடுத்ததில் இருந்து ஆரம்பித்து இன்றுவரை முத னிலை வகித்துவரும் தீவிர இடதுசாரிக் கட்சியான ஜேவிபியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கிய ஒருவர் இவ்வாறான வரைபடமொன்றை வரைந்தமை இடது சாரி அரசியல் பாரம்பரியத்திற்கே பெரும் இழுக்காகும்.

இந்நாட்டு இடதுசாரி அரசியல் பாரம்பரியத்திற்கு தேச வரைபடம் மூலம் ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பொருளற்ற வியாக்கியானம் வழங்கி புத்தி பேதலித்து அவ்வரசியல் பாரம்பரியத்தை நகைப்படமாக்கின விமல் வீரவன்சவைப் போன்று முன்னரும் இடதுசாரி அரசியல் பாசறையில் வளர்ந்து காலப்போக்கில் அப்பாசறையைக் களங்கப்படுத்தியவர்கள் சிங்கள மக்களுக்குள் மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
முதலாளித்துவ ஸ்ரீமாவோ அரசுடன் சமரசம் பேசித் தொழிலாளர் நலன்பேண விழைந்து அவ்வம்மையாரின் அரசில் அமைச்சரவையிலும் பங்குபற்றிய இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சி (சோவியத் பிரிவு) திரிபுவாதக் கட்சியெனவும், முதலாளித்துவத்துடன் சமரசம் பேசும் அரசியல் திரிபுவாத அரசியல் எனவும், அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் கொழும்பு மத்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக நீண்டகாலமாக அங்கம் வகித்தவரும் 1970ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய ஸ்ரீமாவோ அரசில் வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டவருமான பீட்டர் கெனமன் அவர்களை ஒரு காலத்தில் திரிபு வாதத் தலைவர் என விமர்சனம் செய்து, ஸ்ரீமாவோவின் தொகுதியான அத்தனகலை அமைந்த மாவட்டமான கம்பஹாவில் இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சியின் (சீன சார்பு) முன்னணிப் பிர முகராகவும் விளங்கிய எஸ்.டி.பண்டா அவர்கள் திரிபுவாதத்திற்கும் ஒரு படிமேல் சென்று நீலக்கட்சியுடன் இரண்டறக் கலந்தமை தீவின் இடதுசாரி அரசி யல் பாரம்பரியத்தில் ஆழப்பதிந்த பெரும் வடுவாகும். இவ்வாறே சிங்கள மக்களுக்குள் இடதுசாரி அரசி யலைக் களங்கப்படுத்தியவர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை பலர் இருந்து வந்திருக்கின்றார்கள்: இருந்தும் வருகின்றார்கள்.

இவ்வாறே தமிழ் மக்களுக் குள்ளும் இடதுசாரி அரசியலை அசிங்கப்படுத்தியவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எடுத்துக்காட்டாக ஏழை விவசாயிகளை அதிகளவில் தன்னகத்தேகொண்ட கிளிநொச்சித் தேர்தல் தொகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியின் பிரமுகராகத் தன்னை அறிமுகப்படுத்தித் தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் போட்டியிட்டு இங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்ட வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் தீவுப்பகுதி நவரத்தினம் அவர்களின் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் கிளிநொச்சித் தொகு தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும் தீவுப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவருமான பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் ஊர்காவற்றுறைத் தொகுதிக்கு மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஆலாலசுந்தரம் என்பார் கிளிநொச்சித் தொகுதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்ட போது நீண்டகாலமாக லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒரு வராக விளங்கிய யாழ்ப்பாணத்து இடதுசாரி அரசியல் பாரம்பரியத்தின் குறிப்பிடக்கூடிய ஒரு தூணாக விளங்கிய சங்கரி அவர்கள் தன்னை அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு அக்கட்சியின் சார்பில் கிளிநொச்சித் தேர்தல் தொகு தியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆலாலசுந்தரம் அவர்களைத் தோற்கடித்து முதற்றடவையாக நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
ஆனந்தசங்கரி அவர்கள் தான் நீண்டகாலமாக மொழிந்து வந்த இடதுசாரி அரசியலைக் கைவிட்டதும் நாடாளுமன்றத்துக்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்னும் அவருடைய அபாரமான தன்முனைப்பின் பாற்பட்ட வொன்றே என்பது யாவராலும் புரிந்து கொள்ளக்கூடியவொன்றே. எனினும் அன்னாரின் அன்றைய நாடாளுமன்றப் பிரவேசம் தொடர்பில் இடதுசாரி அரசி யலை அவர் களங்கப்படுத்தியிருந்தார் எனப்பெரிதாக விமர்சனம் செய்வது பொருத்தமற்றவொன்று. ஆனால் தற்போது அவர்; சம்பந்தன் அவர்களோடு முரண்பட்டு நிற்பதன் காரணத்தால் கடந்த 17.08.2015இல் இடம்பெற்ற இலங்கையின் 08ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் கொழும்பிலும் வடக்கு-கிழக்கிலும் வேட்பாளர்களை நிறுத்திப்போட்டியில் ஈடுபடுத்தினார். கொழும்பில் தன்னை முதனிலை வேட்பாளராகக்கொண்டு போட்டியிட்டும் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட ஒரு வலதுசாரி-முதலாளித்துவ மலையக அரசியல்வாதிக்கு யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகக்கொண்ட தமிழர்களில் பெருவாரியானோர்கூட வாக்களித்து அமைச்சர் அளவுக்கு அந்நபரை உயர்த்திவிட்டமைக்குச் சங்கரி அவர்களின் இடதுசாரி அரசியலைக் கைவிட்டுச் சென்றமை தான் காரணியாக அமைந்திருந்தது என்பது தான் அவருடைய இடதுசாரி அரசி யலைக் களங்கப்படுத்தியமையின் பரிதாபமான பெறுபேறு கொழும்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது யாழ்ப்பாண மக்களுடைய வாக்களிப்பில் புலப்படுகிறது.

இவ்விடத்தில் நாம் ஒன்றை அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தவேண்டும். அதாவது வடக்குக்-கிழக்கு உள்ளடங்கலான தமிழ் ஈழம் என்னும் வரையறுக்கப்பட்ட பிரதேசமானது ஆயுதப் போராட்டமும் தோல்வியுற்றதால் பிரதேசந் தழுவி யளவில் அம்மாகாண மக்கள் சுயமரி யாதையை இழந்துள்ளது மட்டுமல்லாமல் தலைநகரிலும் தமது தனித்துவத்தைக் கைவிட்டு வாழவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுமுள்ளார்கள். இதனால் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு கொழும்பில் வாக்குரிமையுள்ள தமிழ் வாக்காளர்கள் பெருமளவில் மலையக முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் பின்தொடர வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். மலையக அரசியல்வாதிகளைத் தலைவர்களாகக் கொண்டு கொழும்பில் செல் வாக்குப்பெற்றுள்ள அரசியல் கட்சிகளில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட அரசி யல்வாதிகள் பலர் பின்வரிசையில் நின்று நகர்ந்து வருவதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொருளாதாரத்தில் மலையக மக்கள் திரட்சியை விட மிக வும் வலுவான நிலையிலுள்ள யாழ்ப்பாண மக்கள் திரட்சியானது ஆயுதப் போராட்டமும் தோல்வியுற்ற நிலையில் தலைநகர் கொழும்பில் அம்மக்கள் குறிப்பாக இளையோர் புலிகள் என்னும் உள்ளீர்ப்பின்பாற்பட்டு நோக்கப்படுவதாலும், சிங்களத்தில் உரையாடும் ஆற்றல் மலையக இளைஞர், யுவதிகளைவிடக் குறை வாக உள்ளதாலும் யாழப்பாணத்து யுவதிகளும் அப்பகுதி அரசியல்வாதிகள் கொழும்பில் சுயபிழைப்பு நடத்துவதற்காக மலையகத்தின் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்குப் பின்னால் நிற்பதுபோல மலையக வாலிபர்களைத் தமது திருமண வாய்ப்புக்காக நாடவேண்டிய நிலைமையும் அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்துப் பெண்வழிச் சொத்துடமை, மலையத்தின் பெண் வழிச் சொத்துடமையைவிடச் சராசரியாகப் பார்ப்பின் மிக மிக அதிகமா கும். இதனால் கொழும்பின் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளின் மலையக முதலாளித்துவ அரசியல் தலைவர்களின் கீழான அரசியல் பணி யாழ்ப்பாணத்து வாலிபர்கள் யாழ்ப்பாணத்துப் பெண் வழிச் சொத்துடமையை நுகரும் வாய்ப்பைப் பெருமளவில் குறைக்கும் என்பது தெளிவாகின்றது. நாம் இவ்வாறாக எழுதுவது துவேஷம் மிக்கவொன்றெனவும், பிற்போக்கான தெனவும் பலரும் அபிப்பிராயம் தெரிவிப்பதோடு நம்மீது மிக அதிகளவில் சீற்றம் அடையவும் செய்வார்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம். எனினும் எமது பூர்வீகப் பிரதேசத்தில் வதியும் வாலிபச் செல்வங்களின் எதிர்கால ஒளி மிகுந்த வாழ்க்கை தொடர்பில் அப்பிரதேசத்தின் அனுபவ முதிர்ச்சி மிகுந்த நேர்வழி அரசியல் நோக்கர்களாகிய எம்மைத் தவிர வேறு எவர்தான் அக்கறையெடுக்க முடியும்.

சோசலிஷ அரசியல் நெறி யின் பாற்பட்டு ஆயுதப்போராட்டத்தில் தோல்வியுற்ற வடக்கின் தமிழ் மக்களும், வாலிபர்களும், மாணவர்களும் மலை யக அரசியல்வாதிகளோடும், இஸ்லா மிய அரசியல்வாதிகளோடும் இணைந்து செயற்படலாமேயொழிய மலையக முதலாளித்துவ அரசியல் தலைவர்களோடும், இஸ்லாமிய முதலாளித்துவ அரசியல் தலைவர்களோடும் சேர்ந்து பணியாற்று வார்களாகவிருந்தால் வடக்கின் வருங்காலத் தலைமுறையினருக்கு வடக்கும் இல்லை.

தலைநகர் கொழும்பும் இல்லை என்னும் மிகவும் பரிதாப கரமான நிலையே உருவாகும். இந்த அவலநிலையை வடக்குக் கிழக்கில் மட்டும் வாக்குரிமையுள்ள தமிழரை விடக் கொழும்பில் வாக்குரிமையுள்ள வடக்கு-கிழக்குத் தமிழரே குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழரே கால தாமதம் செய்யாமல் தமது உறைந்துபோயுள்ள சிந்திக்கும் திறனுக்குக் குளுக்கோசு ஊட்டி உயிர்ப்பித்து உடன் சீர்தூக்கிப் பார்த்துத் திருந்தவும் வேண்டும்.

இவ்விடயந் தொடர்பில் மலையக முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பின்னால் நின்று தலைநகர் கொழும்பில் அரசியல் பிழைப்பு நடத்தும் யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பேரன், வேலணை வேணி யன் (அகில இலங்கைக் கண்ணதாசன் மன்றத் தலைவர்) தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் யாழ்ப்பாணத்துச் சோற்றுப் பிண்டங்கள் ஆகியோரும் தம் சுயநலனை மறந்து தலைமுறை தலை முறையாக வாழப்போகின்ற தமது பிர தேசஞ் சார்ந்தவர்களின் எதிர்காலம் பற்றி உடன் தமது சிந்தனைச் குதிரை களைத் தட்டிவிடவேண்டுமென மிகவும் அவாவுறுகின்றோம். அகில இலங்கைக் கண்ணதாசன் மன்றத்தின் தலைவர் எனப்படும் வேலணை வேணியன் அவர்களுக்கும், கவியரசு கண்ணதாசன் அவர்களின் எண்ணோட்டத்துக்கும் மன விழுமியங்களுக்கும் எந்தவிதமான ஒத்திசைவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. (வேலணை வேணி யன் – சடாமுடி தரித்த சிவபெருமான்) என்னும் பெயருக்கு இயைபாக வேலணை வேணியன் அவர்கள் தமது பிரதேசத்தின் வருங்காலத் தலைமுறையினரின் நல்வாழ்வு தொடர்பில் பிட்டுக்கு மண் சுமக்க முன்வராவிட்டாலுங்கூடத் தனது கேவலப்பட்ட வெட்கங்கெட்ட தலை நகர் அரசியல் பிழைப்பை உடன் எவ்வித தயக்கமுமின்றி நிறுத்திக்கொள்ளவும் முன்வரவேண்டும்.

மேலும் நீண்டகாலமாக இடது சாரி யாக இருந்து பின்னர் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சி சார்பில் கிளிநொச்சித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக நாடாளுமன்றமும் சென்றிருந்த வீரசிங்கம் ஆனந்த சங்கரி அவர்கள் தற்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரளவுக்கு முன்னேறி முரண்பாடுகளின் மொத்த வடிவமாகவும் விளங்கிக் கடந்த 17.08.2015இல் நடைபெற்ற ஸ்ரீலங்காவின் நடாளுமன்றத்துக்கான தேர்தலில் தலை நகர் கொழும்பில் போட்டியிட்டுப் பழைய சமசமாஜவாதி என்னும் நிலையில் இருந்தாலுஞ் சரி, புதிய தமிழ் உணர்வாளன் என்னும் நிலையில் இருந்தாலுஞ் சரி அங்கு வதியும் யாழ்ப்பாணத்து வாக்காளர்களின் வாக்குகளையே பெறமுடியாமல் போனமை மிகவும் துரதிட்டவசமானவொன்று மட்டுமல்ல. நல்லெண்ணங்கொண்ட நடு நிலை அரசியல் நோக்கர்களையும் வெகு வாகத் துன்புற வைத்துள்ளது.

எனவே இலங்கை அரசுக்குச் சார்பான ஜெனிவாத் தீர்மானம் தொடர்பிலான மஹிந்த தரப்பினரின் ஆர்ப்பாட்டமானது அரசியலின்பாற்பட்டு பூச்சியமானவொன்றேயெனவும், இப் பூச்சியம் தலைநகர் தமிழ் முதலாளித்துவ, இஸ்லாமிய முதலாளித்துவ அழுத்தத்தின் பாற்பட்டு (சிங்கள முதலாளித்துவ அழுத்தத்தின் பாற்பட்டதைவிட) முடிவிலி வரை நீடித்துச் செல்லக்கூடிய அபாயமும் உள்ளதால் கொழும்பில் அண்டி நின்று அரசியல் பிழைப்பு நடத்தும் யாழ்ப்பாணத்துச் சோற்றுப் பிண்டங்கள் தம்முடைய ஈனத்தனமான அரசியல் நிலையைப் பரிசீலணை செய்து சுயமரி யாதை காத்து ஜெனிவாத் தீர்மானத்தின் உண்மையான உள்ளடக்கத்தைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தவும் முன்வர வேண்டும்.

வீரப்பதி விநோதன்

SHARE