- வேறு எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாத தருணங்களில்
- வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால், வழுகிகியிருந்தால் அல்லது சரியான முறையில் அணியாதிருந்தால்.
- வழமையாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக உட்கொள்ளாதிருந்தால்.
- டீப்போ புறவிரோ எனப்படும் கருத்தடை ஊசி மருந்து ஏற்றப்படுவது நான்கு வாரங்களுக்கு மேல் தாமதித்திருந்தால்.
- பின்வாங்கல் முறையின் (Withdrawal method) போது ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து யோனியினுள் அல்லது பெண் உறுப்பின் வாயிலில் சிறிதேனும் சிந்தியிருக்கக் கூடிய நிலையில்.
- பாதுகாப்பான நாட்களில் மட்டும் உறவு வைக்கும் முறையில் (abstinence method) தினங்களைக் கணிப்பதில் தவறுகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால்.
- நீங்கள் பயன்படுத்தும் வேறு எந்தக் கருத்தடை முறையாயினும் (diaphragm or cervical cap, spermicide tablet etc) அது தவறியிருக்கும் என எண்ணினால்.
- லூப் எனப்படும் கருத்தடை வளையம் (intrauterine contraceptive device (IUD) வைத்திருந்து போது அது வழுகியிருந்தால்.
- ஒருவர் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோரால் மட்டுமின்றி, பாடசாலையில் பிள்ளையைச் சேரப்பதற்கும், பல்கலைக் கழகங்களில் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கும், அலுவலகங்களில் தவறான முறைகளிலும் நடைபெறுவதாக ஊடகங்கள் அடிக்கடி சொல்கின்றன. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவு இல்லாததாலும், கருக்கலைப்பு சட்ட விரோதமாக இருப்பதாலும் பல பெண்கள் சோகக் கண்ணீர் வடிப்பது மட்டுமின்றி சட்ட விரோத கருக்கலைப்புகளால் பல உயிர்கள் பலி கொள்ளப்படுவதும் இரகசியம் அல்ல.
அவசர காலக் கருத்தடை முறைகள் அதில் இரண்டு வகைகள் உண்டு.
- அவசர கருத்தடை மாத்திரைகள்.
- கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது. உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம் (உழிpநச ஐருனு) ஆகும்
அவசர கருத்தடை மாத்திரைகள் மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான். இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன levonorgestrel இருக்கிறது. இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது POSTINOR-2 என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும். ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும். மூன்று வழிகளில் இது செயற்படுகிறது என்கிறார்கள். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம். அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும். அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம். எவ்வாறு உபயோகிப்பது எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது. ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும் என்றோம். இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அல்லது ஒரு மாத்திரையை உடனடியாகவும் இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்திற்குள்;ளும் எடுக்க வேண்டும். ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது. ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும். அவ்வாறெனில் மீண்டும் மாத்திரையை எடுப்பது அவசியம். கருத்தடை வளையம் கருத்தடை வளையம். கொப்பரால் ஆன கருத்தடை வளையமானது (copper-bearing IUD) வழமையான கருத்தடை முறைகளில் ஒன்று. ஆனால் இதனை அவசரகாலத் கருத்தடையாகவும் பயன்படுத்தலாம். உடலுறவு கொண்ட 5 நாட்களுக்குள் இதை கருப்பையiனுள் வைத்தால் கரு தங்காது. இதை நீங்களாக வைக்க முடியாது. மருத்துவரே வைக்க வேண்டும். இறுதியாக ஒரு பெண் தனக்கு அடிக்கடி குருதிப் போக்கு ஏற்படுவதாக மருத்துவரிடம் சென்றாள். அதற்கான காரணத்தை அறிய பல கேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை. “கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா” என்று வினவிய போது அவசரகால கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள். “எப்படி உபயோகிப்பீர்கள்” எனக் கேட்டார். “வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் பாவிப்பேன்” என்றாள். அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும் ?. அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே ஆனது. வழமையான கருத்தடை முறை அல்ல. இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும். வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு. தவாறக உபயோகித்ததால் அத்தகைய பக்கவிளைவு ஏற்பட்டது. அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் தேசத் தலைவர்களால் ஆட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவது ஞாபகத்திற்கு வருகிறதா? முந்தியது காப்பாற்றும். பிந்தியது கொல்லும். டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (col) குடும்ப மருத்துவர் 0.0.0.0.0.0.0 Read Full Post »
உறவு கொள்ளப் பாதுகாப்பான நாட்களை அறிவது எப்படி?
Posted in கருத்தடை, பாதுகாப்பான நாட்கள், tagged மருத்துவம் on 28/03/2014 | 3 Comments »
சரியான நாட்களைத் தேர்ந் தெடுப்பதற்கு மாதவிடாய்ச் சக்கரம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் சக்கரத்த்தில் பெண்ணின் சூலகத்திலிருந்து (ovary) முட்டை (egg) வெளியாகி பலோப்பியன் குழாய் (fallopian tube) வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடையும். சூலகம் என்று கூறிய Ovary யை கருவகம் எனவும் சொல்வதுண்டு. இம் முட்டையானது 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழக் கூடியது. எனவே கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் அந்த 24 மணிநேர கால அவகாசத்திற்குள் ஆணிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சந்தித்தாக வேண்டும். இதன் அர்த்தம் அந்த 24 மணிநேர காலத்திற்குள் உறவு கொண்டால் மட்டுமே கரு தங்கும் என்பதல்ல. ஆணின் விந்தணுவனாது உறவின் போது வெளியேறி பெண்ணின் கர்ப்பப் பையூடாக பலோப்பியன் குழாயைச் சென்றடைந்த பின்னர் பல நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடியதாகும். அது அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள் முட்டை வெளியேறினால் கருக்கூட்டல் நடைபெறும்.
பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி? எனவே பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி? ஏனெனில் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் சரியான தினத்தை முற் கூட்டியே அறிவது சிரமம். இருந்தபோதும் பெரும்பாலான பெண்களில் இது அடுத்த மாதவிடாய் வருவதற்கு 14 முதல 16 வரை முன்னராகும். பொதுவான மாதவிடாய் சக்கரம் என்பது 28 நாட்களாகும். இதுவே பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தும். ஆனால் பலருக்கு இதற்குக் குறைவான அல்லது கூடிய நாள் இடைவெளிகளில் மாதவிடாய் வருவதுண்டு. உங்களது மாதவிடாய் சக்கரம் 35 நாட்கள் நீண்ட என்றால் உங்கள் சுழற்சியின் 14ம் நாளன்று கருத்தரிக்க வாய்ப்பில்லை நீங்கள் 15 நாட்கள் சுமார் 28 முதல் வரை அவதானமாக இருக்க வேண்டும். மாறாக உங்களது மாதவிடாய் சக்கரம் 23 நாட்கள் என்றால் முட்டையானது 7- 9 வது தினத்தில் வெளியேறும். எனவே அத்தகையவர்களுக்கு 15 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பான நாட்களாக இருக்கலாம்.
உங்களுக்கு மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற நாளை சக்கரத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் மாதவிடாய் வந்த நாளுக்கு முந்திய நாள் சக்கரத்தின் கடைசி நாளாகும். பொதுவாக இச்சக்கரம் 28 நாட்களாக இருக்க வேண்டும். சில பெண்கள் மாதவிடாய் படுவது நின்ற தினத்தைச் சக்கரத்தின் முதல் நாள் என நினைப்பதை நான் கண்டிருக்கிறேன். அதாவது நான்கு நாட்களுக்கு இரத்தப் போக்கு இருந்தால் அது நின்ற ஜந்தாவது நாளையே முதல் நாள் என எண்ணுகிறார்கள். இது தவறானது. மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற ஆரம்ப நாள்தான் சக்கரத்தின் முதல் நாளாகும். ஆனால் எல்லாப் பெண்களதும் மாதவிடாயச் சக்கரம் ஒழுங்காக இருப்பதில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் அது ஒழுங்காக 28 நாள் சக்கரமாக இருந்திருந்தால் இம் முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.
- முக்கியமாக கடந்த ஒரு வருட காலத்தில் இச் சக்கரமானது 26 முதல் 32 நாட்கள் என்ற வரையறைக்குள் இருந்தால் இம் முறையைப் பயன்படுத்தலாம். இவர்களுக்கு தமது மாதவிடாயச் சக்கரத்தின் 8 முதல் 19 ம் நாள் வரையான நாட்கள் கருத்தங்கக் கூடிய நாட்களாகும்.
- இவர்கள் தமது சக்கரத்தின் முதல் 7 நாட்களிலும், பின்னர் 23ம் நாளுக்குப் பின்னரும் பயமின்றி உறவு கொள்ளலாம்.
- 8 முதல் 23 வரையான நாட்களில் உடலுறவு கொள்வதாயின் ஆணுறையை அணிந்து கொண்டு உறவு கொள்ளலாம்.
எவ்வாறாயினும் இது பூரண பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது. மேலும் அறிய கிளிக் பண்ணுங்கள்….. ஒழுங்காக மாதவிடாய் வருகின்ற பெண்களில் கூட சிலருக்கு சில அசாதாரண சூழல்களின் போது காலம் முந்தியோ அல்லது பிந்தியோ ஏற்படலாம். எனவே நிச்சமாக கருத் தங்கக் கூடாது எனக் கருதுபவர்கள் வேறு ஒரு முறையை கடைப்பிடிப்பதே பாதுகாப்பானதாகும். கருத்தடை பற்றிய ஏயை பதிவுகள்
அவசர கருத்தடை, கருக்கலைப்பு மற்றும் மரணங்கள்
Posted in அவசரகாலம், கருத்தடை, மருத்துவம், tagged மருத்துவம் on 18/02/2013 |Leave a Comment »
டபுள் அக்ஷன் கருத்தடைச் சாதனம்
Posted in ஆணுறை, கருத்தடை, மருத்துவம் on 01/05/2010 | Leave a Comment »
‘கருத்தடை முறைகள் எதையும் உபயோகிக்கவில்லையா?’ என்று கேட்ட போது ‘உறை பாவித்தேன்’ என்று சொன்னார். ‘பாவித்தும் எப்படித் தங்கியது எனத் தெரியவில்லை’ என ஆச்சரியப்பட்டார்.
தீர விசாரித்த போது ‘இவருக்கு போடுவதில் விருப்பமில்லை. கடைசி நேரத்தில்தான் அவசர அவசரமாகப் போடுவார்’ என்பதை மனைவி மிகுந்த சங்கோசத்துடன் தெளிவுபடுத்தினார். ஆச்சரியப்படுவதுடனும் எரிச்சலுறுவதுடனும் அவருக்குப் பிரச்சனை முடிந்துவிடும். சுமக்கவும், பெறவும், வளர்க்கவும் சிரமப்படப் போவது அவள்தானே! ஆணுறை என்பது மிகவும் உபயோகமான ஒரு கருத்தடை முறையாகும். மிகவும் சரியான முறையில் உபயோகித்தால் 98% சதவிகிதம் வரை நிச்சயமானது. அதற்கு மேலாக ‘தெரு மேயப் போவபவர்களுக்கு’ எயிட்ஸ், கொனரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றாமலும் பாது காக்கிறது. ஆணுறை என்பது விறைத்திருக்கும் உறுப்பை மூடும்படி போடப்படும் ஒரு மென்மையான உறையாகும். விந்து வெளியேறியதும் பெண் உறுப்பினுள் சென்று கருத்தரித்தலை அது தடுக்கும். அத்துடன் பாலியல் நோய் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றாமலும் பாதுகாக்கிறது. ஆயினும் பூரண பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின் அதனைச் சரியான முறையில் அணிந்து கொள்வது முக்கியமாகும். அணியும்போது அவதானிக்க வேண்டியவை
- உறையிலிருந்து ஆணுறையை கவனமாக வெளியே எடுங்கள். நகம், பிளேட், கத்தரிக்கோல் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். அதில் சிறுசேதம் கூட ஏற்பட்டால் கூட வரப்போகும் துன்பம் உங்களுக்கும் மனைவிக்கும்தான்.
- சுன்னத்து செய்யப்படாதவராயின் உறையை அணிவதற்கு முன்னர் உறுப்பின் முற்புறத் தோலை பின்னுக்கு இழுத்துவிடுங்கள்.
- உறையின் மூடிய பகுதி முற்புறம் இருக்குமாறு, வளையப் பகுதியை விறைத்த உறுப்பின் மீது உருட்டி விரித்து அணியுங்கள்.
- அவ்வாறு அணியும்போது உறையின் நுனிப் பகுதியில் உள்ள குமிழ்ப் பகுதியில் காற்று இருந்தால் அதனை அழுத்தி வெளியேற்றி விடுங்கள். இல்லையேல் விந்து வெளியேறியதும் காற்றின் அழுத்தம் அதிகமாகி அது வெடித்து விந்து சிந்திவிடும் அபாயம் உள்ளது.
- உறவின் ஆரம்ப நிலையிலேயே அணிந்து கொள்வது புத்திசாலித்தனமானது. ஆணுறையை உறுப்பு விறைப்பு அடைந்தவுடன் அணிந்து கொள்ள வேண்டுமெயன்றி, இறுதியாக விந்து வெளியேறும் தருணத்தில் அல்ல. கடைசி நேரத்தில் அணிந்து கொள்ளலாம் என நினைத்திருந்து, தற்செயலாக ஒரு சிறு துளி விந்து உள்ளே போவதினாலேயே பெரும்பாலான கர்ப்பங்கள் தங்கிவிடுகின்றன.
- விந்து வெளியேறியதும் உடனடியாக குறியை வெளியே எடுத்துவிடுங்கள். ஆணுறை வழுகிவிடாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதன் வளையப் பகுதியை கைவிரல்களால் பற்றியபடி வெளியே எடுப்பது நல்லது. ஏனெனில் விந்து வெளியேறியதும் குறி சோர்வடைந்தவுடன் ஆணுறை கழன்றுவிடும்.
- ஆணுறை வாங்கும்போதே அதன் பயன்பாடு காலாவதியாகும் திகதியைப் பார்த்து வாங்குங்கள்.
- அதனை உபயோகிக்கும் முன்னர் அது மொரமெரப்பாக வெடிக்கும் தன்மையில் இருந்தால், அல்லது அதில் சிறு துவாரங்களோ வெடிப்புகளோ இருந்தால் அதனை ஒரு போதும் உபயோகிக்க வேண்டாம்.
- ஒருபோதும் அவற்றை மீள உபயோக்கிக்க வேண்டாம். இவை ஒரு முறை பாவித்து கழித்துவிட வேண்டியதற்கு ஏற்பவே தயாரிக்கப்பட்டுள்ளன.
- பாலியல் நோய்கள் தொற்றாதிருக்க வேண்டுமாயின் வழமையான பாலுறவு முறையின் போது மட்டுமின்றி, வாய்ப் புணர்ச்சி, குதப்புணர்ச்சி ஆகியவற்றின் போதும் அணிவது அவசியமாகும்.
ஓவ்வொரு பாலுறவின் போதும் ஆணுறைiயை சரியான முறையில் உபயோகித்தால் 98% கர்ப்பம் தங்குவதைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல HIV நோய் தொற்றுவதை 80%-95% தடுக்கும் எனவும் தெரிகிறது. உறவின்போது சராசரியாக 2% ஆணுறைகள் வழுகிவிட அல்லது வெடித்துவிடக் கூடும். ஆயினும் இது அதனை சரியான முறையால் அணியாததால்தான் நிகழ்வதாகத் தெரிகிறது. எனவே அதனை சரியான முறையில் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறான கருத்துக்கள்
- ஆணுறையானது உறுப்பை இறுகப் பற்றி விந்து முந்தி வெளியேறுவதற்குக் காரணமாகிறது எனச் சிலர் தவறாகக் கருதுவதுண்டு. உண்மையில் ஆணுறையை ஆரம்ப கட்டத்திலேயே (Foreplay) அணிந்து கொண்டால் உறுப்பு வழமையை விட அதிக நேரம் விறைப்புற்று இருப்பதுடன் விந்து முந்துவதையும் தடுக்கும்.
- சிலர் தமது ஆணுறுப்பு பெரிதாக அல்லது சிறியதாக இருப்பதால் தமக்கு அவை பொருந்தாது என எண்ணுவதுண்டு.
இதுவும் தவறான கருத்து. பெரும்பாலும் அவை ஒரே சைசில் கிடைத்தாலும் Latex என்ற பொருளால் செய்யப்பட்டிருப்பதால் உறுப்பின் அளவிற்கு ஏற்ப விரிந்து அல்லது சுருங்கிக் கொடுக்கும். ஆரம்பித்தில் குறிப்பிட்ட தம்பதிகளுக்கு ஏன் கர்ப்பம் தங்கியது என்பது கட்டுரையை அவதானமாக வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு உறவின் போதும் ஆரம்பத்திலேயே சரியான முறையில் அணிந்தால் கர்ப்பம் தங்குவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அத்துடன் புற மேச்சலுக்குப் போனாலும் எயிட்ஸ் வராமல் தப்புவதற்கான சாத்தியமும் உண்டு. அதனால்தான் டபுள் அக்சன் எனச் சொல்லப்படுகிறது. முன்பு தமிழ் நாட்டில் புள்ளிராஜா விளம்பரங்கள் வெளிவந்தன. கிளிக் பண்ணவும் இப்பொழுது தில்லிதுர கலக்குகின்றனவாம். இது சென்னை ஒன்லைன் செய்தி. ஆனால் கொண்டோமுக்கு வேறு பல பயன்களும் உண்டு.அதிலொன்று இது. உங்களுக்கும் அவ்வாறு பயன்படலாமே! இருந்தபோதும் இப்படிப் பாவிப்பதைவிட உண்மையான தேவைக்கு பயனபடுத்துவது முக்கியமாகும்.
>அவசரகால கருத்தடை Emergency Contraception
Posted in அவசரகாலம், கருத்தடை, மருத்துவம் on 21/02/2010 | 5 Comments »
இருவருக்குமே பேச முடியவில்லை. ஊமைகள் அல்ல. சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் கூடவில்லை. எங்கே ஆரம்பிப்பது? எப்படிச் சொல்வது. டொக்டர் என்ன நினைப்பாரோ, ஏசுவாரோ? அவர்கள் காதலர்கள். திருமணம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் உடனடியாக அல்ல. தமது கல்வியை முடித்த பின்னர். ஆனால் திடீரென எதிர்பாராத சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. பெற்றோர்களுக்குச் சொல்ல முடியாது. நண்பர்களுடனும் ஆலோசனை பெற முடியாது. அவர்கள் கேடு கெட்டவர்கள் அல்ல. மிகவும் கண்ணியமான காதல். ஆனாலும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு தனிமையான நேரத்தில் அது எதிர்பாராத விதமாக நடந்து விட்டது. அவளுக்கு வழமையாக வர வேண்டிய பீரியட் பிந்தி விடவில்லை. அந்தளவுக்கு அவர்கள் காலம் தாழ்த்தவில்லை. சம்பவம் நடந்த மறு நாள் காலையே என்னிடம் வந்துவிட்டார்கள். என்ன சொல்ல வருகிறேன் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல சற்றுப் பொது அறிவுள்ளவர்களுக்கும் புரிந்திருக்கும். ஆம்! அவசர கருத்தடை பற்றியே சொல்கிறேன். அவசர கருத்தடை என்றால் என்ன? கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகிக்காத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கான முறையாகும். இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் இரண்டு வகைகள் உண்டு. 1. அவசர கருத்தடை மாத்திரைகள்ஆகும். மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான். இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன progesterone இருக்கிறது. இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது POSTINOR-2 என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும். ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும். 2. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது. உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம் (copper IUD) ஆகும் இக் கட்டுரையில் நாம் அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றியே பேசுகிறோம். எவ்வாறு செயற்படுகிறது மூன்று வழிகளில் இது நடைபெறலாம்.
- சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம்.
- அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும்.
- அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம்.
எவ்வாறு உபயோகிப்பது எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது. இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது. ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும். அவ்வாறெனில் முதல் மாத்திரையை மீண்டும் எடுப்பது அவசியம். அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே. வழமையான கருத்தடை முறை அல்ல. இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும். வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு. யாருக்கு உதவும் எதிர்பாராத உடல் உறவு கொண்டால் என ஏற்கனவே சொன்னோம். எத்தகைய தருணங்களில் கை கொடுக்கும்.
- வேறு கருத்தடை முறைகள் எதனையும் உபயோகிக்காதிருந்தால்
- நீங்கள் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோராலும் ஏனையோராலும் பல பெண்கள் இவ்வாறான வன் புணர்வுகளுக்கு ஆளாகியிருப்பது தெரிந்ததே. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவும். அது சுலபமாகப் கிடைகக் கூடிய வசதியும் இருந்திருந்தால் பல பெண்களின் சோகக் கண்ணீரை துடைத்திருக்கலாம்.
- வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால்
- ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து உள்ளே சென்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டால்
- நீங்கள் கருத்தடை மாத்திரை பாவிப்பவராயின் மூன்று தினங்கள் அடுத்தடுத்து அதை எடுக்க மறந்திருந்தால்.
- கருத்தடை ஊசி போடுபவராயின் அதனை சரியான திகதியில் போடத் தவறியிருந்தால்.
- நீங்கள் பயன்படுத்தும் எந்தக் கருத்தடை முறையாயினும் அது தவறியிருக்கும் என எண்ணினால்
மேலும் தகவல்கள் பெற இங்கே கிளிக் பண்ணுங்கள் மற்றொரு கதை இன்னொரு பெண் தனக்கு அடிக்கடி தீட்டு வருவதாக சொல்லி அதை நிறுத்தும்படி கேட்டு மருத்துவத்திற்கு வந்திருந்தாள். அதற்கான காரணம் புரியவில்லை. பலகேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை. கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா என்று வினவிய போது அவசர கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள். ‘எத்தனை நாளுக்கு ஒரு முறை உபயோகிக்க நேரிடும் என நாகரீகமாகக் கேட்கப்பட்டது. ‘வாரத்திற்கு இரண்டு மூன்று தடைவவைகள் பாவிப்பேன் என்றாள்.’ அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும்?
அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் ஒவ்வொரு ஜனதிபதிகளினதும் அரசாட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவதால் நாடு படும் பாடு உங்களுக்கு ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. டொக்டர்.எம்.கே.முருகானந்தன்