இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாறும் நம்பிக்கை வெளியிட்ட பிரசன்ன

119

 

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக மாற்றவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகள் இருந்த முழு நிலப்பரப்பிலிருந்து 1,340.87 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் மேலும் சுமார் 23 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வட மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை தெளிவாகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டுக்குள் இயங்கி வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ‘தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்’ ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் இயங்குகிறது.

கண்ணிவெடி அகற்றல்
இது கண்ணிவெடி அகற்றும் முகவர் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி மற்றும் மேற்பார்வை செய்கிறது.

இலங்கையின் இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது. இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவின் ஊடாக செய்யப்படுகிறது.

மேலும், HaloTrust மற்றும் Mag ஆகிய இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் Dash மற்றும் SHAF ஆகிய இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இராணுவத்தின் உதவி
நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான தரைத்தள அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது.

கைமீறிபோயுள்ள தமிழரசுக் கட்சியின் வழக்கு: கடும் சீற்றத்தில் சிறீதரன்
கைமீறிபோயுள்ள தமிழரசுக் கட்சியின் வழக்கு: கடும் சீற்றத்தில் சிறீதரன்
ஏனைய 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம். அதனை சீர்குலைக்க முயற்சிக்கும் வடக்கு அல்லது தெற்கில் உள்ள இனவாத மதவாத அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ ஏமாற வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

SHARE