“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும். இதுவே தமிழ் மக்களினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடாக உள்ளது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். இலங்கையில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நேற்றுமுன்தினம் ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இதனை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன்.
இந்த அறிக்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும், இலங்கை வெளிவிவகார அமைச்சரும் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ் மக்கள் சார்பில் எமது நிலைப்பாடு என்னவெனில், ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும். நடைபெற்ற அக்கிரமங்கள் மீண்டும் நடைபெறாமல் உறுதியளிக்கப்படவேண்டும்.
இதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இவை நடைபெறுவதாக இருந்தால் நியாயமான – நிரந்தரமான – நடைமுறைப்படுத்தக்கூடிய – நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தலாம். இந்தத் தீர்வு கட்டாயம் ஏற்படுத்தப்படவேண்டும். இவ்விதமான தீர்வின் ஊடாகவேதான் நாட்டில் நிரந்தர நல்லிணக்கம் ஏற்படும். இதனை அடைவதற்கு நாம் எல்லோரும் உழைக்கவேண்டும் .