இலங்கை பௌத்த பாசிசம்

551

 


சென்னை எழும்பூரில் இருக்கிற பௌத்த மகா போதி சங்கத்திற்குச் சென்றிருந்தேன். மடத்தில் நிலவிய ஒழுக்கமும், தூலமான பேரமைதியும் எங்கோ ஒரு சனாதனக் கோட்டைக்குள் நுழைந்து விட்ட அருவறுப்பைக் கொடுத்தது. மயிலாப்பூரில் இருக்கிற பார்ப்பன மடமான இராமகிருஷ்ணா மடத்திலும் மகா போதி மடத்திலும் உரையும் அமைதியில் எந்த வித்தியாசங்களும் இல்லை. புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், மகாபோதி சங்கம், மயிலாப்பூர் மடம் என்று அவர்களின் தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் வித்தியாசங்களில்லை. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிற அவர்களிடம் பூணூல் உண்டு. இவர்களிடம் பூணூல் இல்லை அவளவுதான். மற்றபடி மடத்தில் இருக்கும் பிக்குகள் மிகவும் இளைய வயதுள்ளவர்கள். இலங்கை அரசுக்கும் மகா போதி சங்கத்திற்கும் நேரடி உறவு உண்டு. இலங்கைத் தூதரகத்தின் ஒரு உளவு அமைப்பாக பௌத்த முகமூடியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆரிய சிங்கள அமைப்புதான் மகா போதி சங்கம்.

இடது வலது பக்கங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு மேலே நடு வாசலில் ஒரு மீசை மழித்த ஆசாமி படத்தில் இருக்கிறார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தால்……ஆஹா அது அனகாரிக தர்மபாலா ஆரிய இனமான சிங்கள இனத்தின் மேன்மைகளைப் பேசி சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும், மலையாளிகளுக்கு எதிராகவும் இலங்கையில் இயக்கம் கட்டியவர். உலகம் எதிர்கொண்ட கிரேட் டிப்பரஷன் பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் தேயிலை வீழ்ச்சியும் திண்டாடிய தொழிலாளிவர்க்கத்தின் பிரச்சனைகளுக்கும் காரணமாக சிறுபான்மை மக்களினங்களைக் கைசுட்டி சிங்கள மேனையை நிறுவியவர். இந்திய எதிர்ப்பு (இந்து எதிர்ப்பு) என்பது அனகாரிகாவின் அடிப்படையாக இருந்தாலும். அவருக்கு பார்ப்பனர்கள் மீது பாசம் அதிகம் இருந்திருக்க இயல்பான ஒன்றுமையும் இருந்திருக்க வேண்டும். இங்கிருந்து கடல் வழியாக வர்த்தகங்களுக்காக சென்று வரும் இந்திய தொழிலாளர்களை மிலேச்சர்களாகச் சித்தரித்த அனகாரிகா , பௌத்த மறுமலர்ச்சி என்னும் பெயரில் சிங்கள பேரினவாதத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றியவர். ஒரு நன்றிக்கடனுக்காக அந்த பாசிஸ்ட் கருத்தியலாளரின் படத்தை இங்குள்ள போதி சங்க பிக்குகள் வைத்திருக்கக் கூடும்.

பெரும்பான்மை வாதம்.
பாபர் மசூதி இந்து வெறியர்களால் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்டது. நாடு முழுக்க சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான அப்பாவி இந்துக்களும், முஸ்லீம்களும் அந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டார்கள்.இந்தியா மட்டுமல்லாது பாபர் மசூதி இடிப்பு ஆசிய நாடுகள் முழுக்க சிறுபான்மை பெரும்பான்மை கருத்தியலை கட்டவிழ்த்து விட்டது. வங்கதேசத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் சிறுபான்மையினர். அங்கே சிறுபான்மை இந்துக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்படி ஒரு சிறுபான்மை இந்துக் குடும்பத்தின் மன உணர்வை வெளிப்படுத்தி தனது சொந்த சமூகத்திற்குள் ஜனநாயகக் குரலாக ஒலித்தார் தஸ்லிமா நஸ் ரீன் தனது “லஜ்ஜா” நாவல் மூலம். இந்தியாவில் இந்துப்பாசிசம்….. ஏன் இந்து மதம் கூட உழைக்கும் மக்களுக்கு எதிரான மதம்தான். ஏனைய மதங்கள் ஏதோ உழைக்கும் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக நான் சொல்லவில்லை. மனிதனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மதம் இந்து மதம். அது பெரும்பான்மை மதமாக இங்கு இருப்பதால் இங்குள்ள சிறுபான்மை இனங்களை நசுக்கி அழிக்கிறது. கொலை செய்கிறது, தேசப்பற்றை இந்து மதப் பற்றாக்கி, இந்து மதப் பற்றை தேசப்பற்றாக்கி பர்தா அணிந்த பெண்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. பாவம் வங்கதேசத்தில் வாழும் இந்து அங்கே அவன் எதிர்கொள்கிற தேசிய வெறியும் மத வெறியும் வேறு. எது எப்படி என்றாலும் வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியா மாதிரி பெரும்பான்மை வெறி இல்லை என்று நிச்சயமாகக் கூறலாம். சொந்தச் சகோதரன் அவன் இன்னொரு மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் போல கொலை செய்வதில்லை இஸ்லாமிய மக்கள். ஆனால் இந்த கலாசாரப் பாசிசத்தை முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் கையெடுத்துக் கொள்கின்றன. தலிபான்கள், முஜாகிதீன்கள், அல்கொய்தா, லக்‌ஷர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ கலாசாரப் பாசிஸ்டுகளாக திகழ்கிறார்கள்.

இலங்கை பௌத்த பாசிசம்

இந்தியாவின் இந்து மாத வெறிக்கு சற்றும் குறையாத அல்லது அதை விட அகோரமான ஒரு பாசிச வெறி கொண்ட அரசு மதமாக பௌத்தம் இலங்கையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நிறுவனமயப்பட்ட பௌத்த மதத்தையும், இலங்கை அரசையும், அதன் மேன்மை மிக்க பௌத்த தலதா மாளிகையும், ஏனைய பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கரிய பீடங்களையும் தனித் தனியானவை, அரசுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, என்றெல்லாம் வேறுபடுத்தியோ தனித் தனியாகவோ பிரித்துக் காண முடியாது. இந்த மத நிறுவனங்கள் தவிற ஜாதிக ஹெல உருமய வேறு. எப்படி இந்தியாவில் பஜ்ரங்தள், ஆர்.எஸ். எஸ். விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புகள் வன்முறை அமைப்புகளாக தீர்மானிக்கும் சக்திகளாக செயல்படும் போது பிஜெபி, சிவசேனா போன்றவை வாக்கு வங்கி அரசியல் தளத்தில் வெகு சன அமைப்பாக செயல்படுகிறதோ அப்படித்தான் ஹெல உறுமயவும். பொதுவாக மல்வத்தை, அஸ்கரிய பீடங்கள் ஏதோ ஒரு பிரதான அரசியல் கட்சியின் ஆதரவு அமைப்பாக செயல்பட்டாலும் . போரின் முடிவுக்குப் பின்னர் இவர்கள் அனைவருமே இணைந்து செயல்படுகிற போக்கு காணப்படுகிறது. 2009- ஜனவரியில் கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற இடங்கள் படையினரிடம் விழுந்த போது, ஜாதிக ஜெல உறுமய அமைப்பின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்…. மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரரையும் ,திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைசயும், அஸ்கரிய, பீட தேரரையும் சந்தித்து விட்டு உற்சாகப் பெருக்குடன் ஊடகவியளார்களுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனவரி 29- ல் வாழங்கிய நேர்காணல் // , ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழும் முப்படைத்தளபதிகளின் தலைமையிலும் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரதேசங்களையும் மீட்டு வருகின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் வடக்கின் அனைத்தும் பகுதிகளும் எமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்.பராம்பரிய கலாசார பௌத்த தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டியுள்ளது. மகாநாயக்க தேரருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்// தொடர்ந்தும் கிளிநொச்சி புரதான பௌத்த நகராக இருந்தது என்றார்.

பூம்புகாரும், கொற்கையும், மாமல்லபுரமும், தொண்டியும், மதுரை உள்ளிட்ட தமிழகமே ஒரு காலத்தில் சமணக்காடாக இருந்ததாக வரலாறு சொல்கிறது. சைவமும், வைணவும் சமணர்களைக் கொன்று மாபெரும் இனக்கொலை புரிந்த வரலாறுகள் உண்டு. இங்குள்ளதைப் போல கிளிநொச்சியும் ஒரு சமணக்காடாக இருந்திருக்கலாம். இங்குள்ள பண்டைத் தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கும் போது ஈழத் தமிழர்களிலும் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருக்கும் நியாயங்களை கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் கிடைக்கும் பௌத்த எச்சங்கள் நமக்கு நிரூபிக்கும். வரலாற்றை மீள கட்டு எழுப்புவதும், தூய்மைப்படுத்தி அதை மேன்மையாக்க நினைப்பதும்தான் பாசிசத்தின் முதல் செயல்பாடு. அது இந்தியாவின் இந்துப்பாசிசத்திற்கும் பொறுந்தும், இலங்கையின் பௌத்த பாசிசத்திற்கும் பொறுந்தும். முஸ்லீம் மன்னர்களால் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களை மீண்டும் கட்டு எழுப்பவதினூடாக இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த இங்குள்ள இந்துப் பாசிஸ்டுகள் விரும்புபது போல, ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள இந்து, முஸ்லீம் ஆலயங்களையும் தொழுகைத் தலங்களையும் அகற்றி விட்டு அங்கு சந்திக்கு சந்தி விஹாரைகளை நிறுவுவதினூடாக பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த நினைக்கிறது பௌத்த பாசிசம். அய்யா அறிவுஜீவிகளே இந்து மதம் பாசிச மதம்தான். ஆனால் அதை பின் பற்றும் மக்கள்? அவர்களின் மரபில் சிறு தெய்வவழிபாடும் தமிழ் மரபுதானே? இந்துக்கள் என்பதாலேயே அவர்கள் கொல்லப்படுவதையும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுவதையும் ஆதரிப்பீர்களா?

கடவுள் மறுப்பு என்கிற தத்துவத்தின் கட்டப்பட்ட திராவிட இயக்கம் என்னும் சீர்திருத்த இயக்கம் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அது வழிபாட்டு உரிமையை ஆதரித்தே வந்திருக்கிறது. சீர்திருத்த வாதியான ஈ.வே.ரா பெரியாரின் தீண்டாமைக் கெதிரான போராட்டம் என்பதே வழிபாட்டு வாழ்வுரிமையின் ஒரு பகுதிதான். அதே வாழ்வுரிமை இந்துக்களான பார்ப்பரல்லாத ஈழத் தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? ஆனால் இன்று தமிழகத்தின் திராவிட இயக்க அறிவு ஜீவித் தளத்தில் ஒரு விதமான பௌத்த மேன்மை நினைவுறுத்தப்படுகிறது. அதாவது மாபெரும் இனக்கொலை ஒன்று பௌத்த மேலாதிக்க சிங்கள அரசுப் பாசிசத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக சிங்கள அரசையோ அதன் ஒடுக்குமுறையையோ ஆதரிக்க முடியாமல் மிக வசதியாக பௌத்த மரபிற்குள் இவர்கள் ஒழிந்து கொள்கிறார்கள். சரி பௌத்த மரபே இலங்கையின் அரசு பயங்கரவாதத்தின் ஒரு அங்கம்தான் என்றால் அதை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் அமைதி காக்கிறார்கள். பெரியார், திராவிட இயக்கம் போன்றவைகளின் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்து மத எதிர்ப்பையும் தங்களின் சுயலாப பௌத்த முகமூடிக்காக ஒரு பிராண்டாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் மகா போதி சங்கத்தையும் தாக்கியவர்களும் பெரியார் இயக்கத் தோழர்கள்தான் என்பதை அறியும் போது இன்னமும் மக்களுக்கான அறம் செத்துப் போகவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு இடத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் இன்னொரு இடத்தில் சிறுபான்மையாக வாழும் போது நமது ஆதரவு எப்போதும் சிறுபான்மை மக்களுக்கே அவர்கள் பௌத்தர்களா? தமிழர்களா? இந்துக்களா? என்பதல்ல பிரச்சனை. வரலாறுகளை தகர்த்தெறிந்தவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தவுடன் அதை நிறுத்திக் கொண்டதுடன் தோதான ஒன்றையும் போர்த்திக் கொள்கிறார்கள். ஈழப் படுகொலைகளுக்கு பின்னர் எல்லா விதமான வரலாறுகளையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மை மக்கள் ஆதரவு என்பது மனித நேயத்தின்பால் இருக்க வேண்டும். நமக்கு வேண்டாத மதம் என்பதால் அவர்கள் சாகட்டும் என்பதை ஆதரித்து மௌனமாக இருப்பது போல மனித குலத்திற்கு எதிரானது வேறொன்றும் இல்லை. இலங்கையில் பௌத்த பாசிசம். இந்தியாவில் இந்துப் பாசிசம். மதங்கள் மனிதனுக்கு விடிவைத் தராது என்பதற்கு இது இன்னுமொரு சான்று. தந்திரங்களால் இனி அடுத்த தலைமுறையை ஏமாற்ற முடியாது.

SHARE