இலங்கை மீது பொருளாதார தடையா? பதில் கூற இன்னும் கால முதிர்ச்சி ஏற்படவில்லை: டேவிட் டெலி

810
இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்

அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்

இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டமை மற்றும் அதற்கு எதிராக இலங்கை அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் தற்போது தீவிரமான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளமையை மறுக்க முடியாது.

எனினும் இதற்காக இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத்தடையை விதிக்குமா? என்பதை கூறுவதற்கு இது முதிர்ச்சியற்ற காலம் என்று டெலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமைப்புக்கள் சிலவற்றை தடை செய்துள்ளமை தொடர்பில் அண்மையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.

எனினும் இந்த விளக்கமளிப்புக்கு அப்பால் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சட்டரீதியாக செயற்படும் தமிழ் அமைப்புக்களுக்கான தடைக் குறித்து இலங்கை தக்க சான்றுகளை வழங்க வேண்டும் என்று டெலி கேட்டுக்கொண்டார்.

 

SHARE