தலைமைத்துவ பாணிகள் தலைவரின் நடத்தைகளை குறிக்கின்றன. இது தலைவரின் சித்தாந்தம், ஆளுமை மற்றும் அனுபவத்தின் விளைவாக ஏற்படுவதாகும். இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் குறிப்பாக அரசியல், சிவில் தலைமைகள் எவ்விடத்தில் இருக்கின்றனர் என நோக்க வேண்டியிருக்கிறது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தை பொறுத்தமட்டில் சிவில் சமூகத் தலைமைகளை பார்க்கிலும் அரசியல் தலைமைகளே சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுப் பணிகள் அல்லது சமூக ஆர்வம் என்பதை பார்க்கிலும் அரசியல் நோக்கமும் வியாபார நோக்கமுமே மேலோங்கி நிற்கின்றன. இதனால் தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான அனைத்துமே வியாபார அரசியல் மயப்பட்டிருக்கிறது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசியவை பொறுத்தவரை அரசியல் தலைமை தெரிவை பெரும் வியாபாரிகளே தீர்மானிக்கின்றனர். அரசியல்வாதிகள் வணிகர்களின் பின்னால் நிற்பதனால் அவர்களை மேலெழச்செய்வதும் வீழ்த்துவதும் வியாபாரிகளின் கைகளிலேயே தங்கியிருக்கின்றன. இவ்வாறான அரசியல் தலைமைகளை தாண்டி ஆட்சியாளனொருவன் உருவாகவேண்டுமானால் அவன் வாரிசு அரசியல் அல்லது குடும்ப அரசியல் பின்னணியை கொண்டிருக்க வேண்டிய கட்டாயமொன்று காணப்படுகின்றது.
மறுபுறம் சிவில் தலைமைகளை எடுத்து நோக்கின் பெரும்பாலும் அவர்கள் வியாபாரிகளின் பின்னால் இயங்கும் தரப்பினராக அல்லது அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலை மக்கள் மயப்படுத்துவதற்கான அமைப்பினர்களாவே செயற்படுகின்றனர். இவ்வாறானதொரு தரப்பினராலேயே இலங்கை முஸ்லிம்கள் ஆளப்படுகின்றனர், வழிநடத்தப்படுகின்றனர்.
இலங்கையில் பல தசாப்தங்களாக இயங்கிவரும் அமைப்புகளாக இருந்தாலும் சரி, தற்கால பிரச்சினைகளை மையப்படுத்திய கோஷங்களுடன் இன்று நேற்று உருவாகிய அமைப்புகளாக இருப்பினும் அவர்களிடத்தில் நேரிய சிந்தனையோ நாட்டுப்பற்றையோ காண முடிவதில்லை. பெரும்பாலும் மத்திய கிழக்கு, ஐரோப்பா, மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் பணத்தில் இயங்குவதால் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றனர்.
அவ்வாறு வரும் பணத்தில் பெரும் பகுதியை நிர்வாக செலவின்பேரில் சூறையாடி அல்லது சிறியதொகையை மட்டுமே சமூக பணிக்காக செலவிட்டுவிட்டு நிதி வழங்குநரை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றமை வேதனைக்குரியதே. அதிலும் சிவில் அமைப்புகளுக்கிடையேயான போட்டித்தன்மை வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளன.இதற்கப்பால் இஸ்லாமிய சீர் திருத்த இயங்கங்கள் அல்லது சன்மார்க்க அமைப்புகளை நோக்குகையில் அவர்கள் தமது இயக்கம் அல்லது அமைப்பை முதன்மைப்படுத்தவும் விரிவு படுத்தவும் அடிதடிவரை செல்லும் நிலைமையே அண்மைக்கால பதிவுகள் எமக்கு எடுத்தியம்புகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு விதிவிலக்காக ஓரிரு அரசியல் தலைமைகளும் கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் இருக்கின்றன. நான் பொதுவான நிலைமையையே எடுத்துக்கூறினேன்.இந்த பின்னணியில் நாட்டில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திடம் சமய, சமூக மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். அது எமக்கு இன்றுவரை தோல்வியையே தந்திருக்கிறது.
சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கி அதற்கான அழகிய வழிகாட்டல்களை தந்த இஸ்லாமிய சமூகத்தில் இவ்வாறான நிலைமையில் இருப்பதையிட்டு மிகவும் வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி பேசத் தெரியாத அல்லது அப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர முடியாத அரசியல் தலைமைகளை நாம் ஜனநாயக போராட்ட களத்தில் இறக்கியிருக்கின்றமை எமது முதல் தோல்வியாகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா , சோனக இஸ்லாமிய கலாசார நிலையம், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், கிழக்கு மாகாண காணிச் செயலணி, ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவை என்பன முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்தன. இதன்போது அவர் குறிப்பிட்ட முக்கிய விடயம் எம் சமூகத்தை சிந்திக்க தூண்டியுள்ளது.
அதாவது, தமிழ் அரசியல் தலைமைகள் போன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூக பிரச்சினை விடயத்தில் செயற்படுவதில்லை எனும் கருத்தை அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் தமிழ் தலைமைகள் போன்று செயற்பட சிவில் அமைப்புகள் முஸ்லிம் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.பிரதமராக ஒரு தடவையும் ஜனாதிபதியாக இரு தடைவையும் நாட்டை நிர்வகித்த ஒரு சிங்கள பௌத்த தலைவி, தமிழ் தலைமைகளை முஸ்லிம்களாகிய எமக்கு உதாரணம் காட்டுகிறார் என்றால் நமது நிலைமை என்ன? நாம் எங்கு இருக்கிறோம்? எமது தலைமைகள் எங்கு இருக்கின்றன?சந்திரிக்கா அம்மையார் குறிப்பிட்டதை நாம் மேலும் கவனிப்போம், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உங்களைப் போன்ற ஒழுங்கமைப்புடன் இயங்கும் சிவில் அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். தமிழ்த் தலைவர்கள் போன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் செயற்பட அழுத்தம் கொடுங்கள் என சிவில் அமைப்புகளை வலியுறுத்தியிருக்கிறார்.
சிவில் அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதியின் கூற்றை கவனத்திற்கொண்டு அரசியல்வாதிகளுக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.இதேவேளை, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில், ‘நானும் என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்’ என குறிப்பிட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, விரைவில் இப்பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்களை அழைத்துப் பேசுவேன். கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை குறித்து அம்பாறை அரச அதிபரை அழைத்துப் பேசுவேன் என்றும் சிவில் அமைப்பினரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அஷ்ரபைத் தவிர முஸ்லிம் தலைவர்கள் எவரும், தமது சமூக உரிமைகளுக்காகப் போராடுவதில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது அரசாங்க காலத்தில் அஷ்ரபுக்கும் ஏ.எச்.எம். பௌசிக்கும் முக்கிய அமைச்சுக்கள், பதவிகளை வழங்கினேன். அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன என்றும் தெரிவித்த அவர், அமைச்சர் அஷ்ரப், துறைமுகத்தில் பெருந்தொகையான முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
ஜனநாயக ரீதியில் தெரிவாகிய உலகின் முதல் பெண் ஜனாதிபதியான சந்திரிகா அம்மையாரின் கருத்துக்கள் காத்திரமானவை. இதில் நாம் பல பாடங்கள் கற்க வேண்டியிருக்கிறது. இதற்கு அப்பால் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது.தற்போதைய அரசியல் தலைமைகளால் சமூத்திற்கு எந்தப் பயனுமில்லை. வேறு தெரிவின்றி நாம் ஜனநாயக ரீதியில் நியமித்த அரசியல்வாதிகளை இப்போதைக்கு புறந்தள்ளிவிட முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போது நாம் மீண்டும் முதல் படியிலிருந்து ஏறவேண்டியதில்லை. இருக்கிற இடத்தில் சமூக மாற்றத்திற்கான ஏணிப்படியை வைத்து ஏறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளே இன்றைய தேவையாகும். ஆகவே, இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் www.manthri.lk என்ற இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை வைத்து ஆராய்வோம்.அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்குபற்றுவதன் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் முதலாம் இடத்தில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் இரண்டாம் இடத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரனவும் அடுத்து மூன்று இடங்களை மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் 6 ஆம் இடத்தில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் (28), ரிஷாத் பதியுதீன் (38), முஜிபுர் ரஹ்மான் (39), எஸ்.எம்.மரிக்கார் (42), கபீர் ஹாஸிம் (51), எம்.எச்.எம்.நவவி (57), அப்துல்லாஹ் மஹ்ரூப் (72), பைஸர் முஸ்தபா (93), அலிசாஹிர் மௌலானா (100), எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (103), ஏ.ஆர்.இஷாக் (115), இம்ரான் மஹ்ரூப் (133), ஏ.எச்.எம்.பௌஸி (136), எம்.எச்.எம்.சல்மான் (144), எம்.ஐ.எம்.மன்சூர் (153), அமீர் அலி (155), காதர் மஸ்தான் (162), எம்.எச்.அப்துல் ஹலீம் (163), பைஸல் காஸிம் (166), எம்.எம்.ஹரீஸ் (193), பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்த டாக்டர் ஏ.ஆர்.ஹபீஸ் (211), எம்.எஸ்.தௌபீக் (217) என்ற அடிப்படையில் தரப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதனை மேலும் தெ ளிவாக விளக்கப்படம் மூலம் காட்டியிருக்கிறோம்.
இதேவேளை, ஒவ்வொரு பாராளுமன்ற பிரதிநிதியும் எந்தெந்த துறை விவாதங்களில் கலந்துகொண்டு பேசினார்கள் அல்லது கேள்வி எழுப்பினார்கள் எனும் அடிப்படையிலும் மேலும் தரப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவற்றில் முன்னிலை வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களையும் அவர்கள் பெற்றிருக்கும் நிலையை அடைப்புக்குள் குறித்து விளக்கப்படத்துடன் காட்டியிருக்கிறோம்.
இதில் கவனத்திற்கொள்ளவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அமைச்சர் ஹக்கீம் 7 விடயங்களில் மாத்திரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே முதல் மூன்று இடத்திற்குள் இருக்கிறார். அடுத்தபடியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் 6 தலைப்புகளின் கீழும் கொழும்பு மக்கள் மற்றும் முஸ்லிம்களுடன் தொடர்புடை விவகாரங்களில் அதிகமாக பங்குகொண்டிருக்கிறார். அத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவருடைய அமைச்சுடன் தொடர்புடைய தலைப்புக்கமையவே அதிகமாக செயற்பட்டிருக்கிறார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாஸிம் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை உள்ளிட்ட விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
முஸ்லிம் இளம் பாராளுமன்ற உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப்தான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கல்வி, சமூக சேவைகள் மற்றும் நலனோம்பல் விடயத்தில் அதிகமாக பாராளுமன்றில் பேசியிருக்கிறார் , கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமின்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இவர்தான் அதிக தலைப்புகளின் கீழ் அமர்வுகளில் பங்குபற்றி உரையாற்றியிருக்கிறார்.
கட்சிகளுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அவர்களது அமைச்சுக்களுக்கு கீழுள்ள துறைகளில் மாத்திரம் அதிகம் கவனம் செலுத்துவதை manthri.lk இணையத்தில் கண்காணிப்பின் அடிப்படையில் தெரியவருகிறது.
இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை குறித்து அதிக கவனம் செலுத்துவதாக கூறிவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 37 ஆவது இடத்திலும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் 39 ஆவது இடத்திலேயே இருக்கிறார்கள். இவர்களை விட இம்ரான் மஹ்ரூப், அலிசாஹிர் மௌலானா, அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நாம் தந்திருக்கும் அட்டவணைக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற விவகாரத்தில் முன்னிலையில் இருக்கின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை குறித்து அதிக கவனம் செலுத்துவதாக கூறிவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 37 ஆவது இடத்திலும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் 39 ஆவது இடத்திலேயே இருக்கிறார்கள். இவர்களை விட இம்ரான் மஹ்ரூப், அலிசாஹிர் மௌலானா, அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நாம் தந்திருக்கும் அட்டவணைக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற விவகாரத்தில் முன்னிலையில் இருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் பின்தங்கியிருப்பது முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் மாவட்ட பிரதிநிதிகளின் நிலைமையை காட்டுகிறது. அதுவும் அங்குள்ள இரு பிரதியமைச்சர்களினது நிலை மோசமாகவே இருக்கிறது. இன்னொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். அதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் சர்ச்சை இன்னும் தீராத நிலையில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கும் எம்.எஸ்.தௌபீக் இரு தலைப்புகளுக்கு கீழேயே உரையாற்றியிருக்கிறார். இவர் கடந்த வருடம் ஜனவரியிலிருந்து ஒரு வருடகாலமாக பாராளுமன்றுக்கு சென்றிருந்தும் இவ்வாறிருப்பது பல கேள்விகளை தோற்றுவிக்கிறது. மற்றைய தேசிய பட்டியல் உறுப்பினரான சட்டத்தரணி எம்.எஸ்.எம்.சல்மானும் குறிப்பிட்ட சில தலைப்புகளின் கீழ்தான் பாராளுமன்ற விவாதங்களில் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்.
எனவே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது முஸ்லிம் சமூகத்திலுள்ள ஆளுமைமிக்கவர்களால் நிரப்பப்பட வேண்டும். பிரதியமைச்சர் ஹரீஸ் விளையாட்டு துறையில் முன்னிலை பெறவில்லை. அத்துடன், பிரதியமைச்சர் அமீர் அலி அவரது அமைச்சுக்கு கீழான தலைப்பு எவற்றிலும் முன்னிலை பெறாமையையும் சுட்டிக்காட்டலாம்.முஸ்லிம் சிவில் அமைப்புகள் வெறுமனே நாம் அரசியல்வாதிகளின் பலவீனங்களை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டிராது இனிவரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து சமூக கட்டமைப்பில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
சந்திரிக்க அம்மையார் குறிப்பிட்டதுபோல் இதற்கு சிவில் அமைப்புகளின் திட்டமிடல் ஒன்று அவசியப்படுகின்றது. கடந்த வருடம் மே மாதம் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களின்போது முஸ்லிம் சிவில் அமைப்புகளும் மார்க்க இயக்கங்களும் ஒன்றிணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன. நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம் (ஆர்.சி.சி.) எனும் பெயரில் இயங்கிது போன்று முஸ்லிம்களின் பிரச்சினைகள் விடயத்தில் கைகோர்க்க வேண்டும்.
வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வடக்கு – கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகள், உள்ளூராட்சி எல்லை நிர்ணய முறைகேடுகளும் புறக்கணிப்பும், முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு, மௌலவி ஆசிரியர் நியமனம், இனவாத பிரச்சினைகள், பள்ளிவாசல்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களின் பிரச்சினைகள், பொருளாதர வர்த்தக விவகாரம், வீட்டுத்திட்டங்கள், உட்கட்டமைப்பு, மீனவர் பிரச்சினைகள், காட்டுயானை தொல்லை, குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் இவ்வாறான பல விடயங்கள் குறித்து ஆராயப்படவேண்டியிருக்கிறது.
இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த இரு வருடங்களுக்குள் எவ்வாறு செயற்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து மந்திரி இணையத்தளத்தின் கண்காணிப்பில் தெளிவாகிறது. இவர்களை சிவில் அமைப்புகள் மேல்நோக்கிச்செல்ல உந்த வேண்டும். அப்போதுதான் எம் சமூகத்தின் இன்றைய நிலையை கொஞ்சமாவது உயர்த்தமுடியும்.