லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மெராயா ஊவாக்கலை தோட்டம் 3 ஆம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து இச் சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அப் பகுதி மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சுமார் 25 மற்றும் 30 வயதுக்கிடையில் உள்ள இளைஞனின் சடலம் என தெரியவந்துள்ளது.
சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், குறித்த இளைஞனை எவராவது கொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார்களா என்ற கோணத்தில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.