தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி மகாநாடு நாளை(06.09.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள அதேநேரம், இம்மாநாட்டின் நோக்கம் என்னவென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் பத்திரிகை வினவியபொழுது, தேர்தல் சட்டங்களின் அடிப்படையிலும் ஓராண்டு இரண்டாண்டு என்ற ரீதியிலும் புதிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும்இது ஒரு காரணம்.
அடுத்து இதனோடு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினையும் அதற்கப்பால் முஸ்லீம் மக்களையும் இணைத்து அது மட்டுமல்லாது தென்னிலங்கையில் இருக்கக்கூடிய முற்போக்கு ஆதரவாளர்கள் மற்றும் எமது கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றவர்கள் அவர்களுடன் இணைந்து இந்த கட்டமைப்பினை உருவாக்கவேண்டும் என்கின்ற அவசியம் கருதியுமே இம்மகாநாட்டினை நடத்துகின்றோம். அது மட்டுமல்லாது பல விடயங்கள் ஆராயப்படவுள்ளது. குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் அவர்களுடைய நிலங்கள் அரச தரப்பினரால் அபகரிக்கப்படுகின்றது. அந்த இடங்களில் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களை தடுத்துநிறுத்தும் நோக்கிலும், தமிழ்பேசும் முஸ்லீம் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை காட்டவேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் இப்பகுதியிலே பரவலாக அமைக்கப்படுமாகவிருந்தால் ஒரு இன அடையாளங்களை அழிப்பதற்கானதொரு முயற்சியாகவே இது அமையப்பெறும். இராணுவத்தின் மூலமாக இப்பிரதேசங்களை அபகரிக்கின்றார்கள். தென்னிலங்கையிலிருந்து மீனவர்களை அழைத்து வந்து எமது பிரதேசங்களில் மீன்பிடிப்பதற்காக அமர்த்துகின்றார்கள்.
இதனால் எமது மீனவ சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கான விவசாய நிலங்கள் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகின்றன. மணலாறு போன்ற இடங்களில் மகாவலி திட்டத்தினூடாக 87ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களை இணைத்து புதிய நிர்வாகமொன்றினை உருவாக்கும் நிலைமையேற்பட்டுள்ளது. இவையெல்லாம் எங்களை பலவீனப்படுத்தி, எமது சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும். அதாவது தனித்துவமான தமிழ்மக்களின் கட்டமைப்பை சீர்குலைப்பது. எங்களது தன்னாட்சி கோட்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசு செயற்பட்டுவருகின்றது. 2011ம் ஆண்டு தை மாதம் 10ம் திகதி அரசும் நாங்களும் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
அந்தப் பேச்சுவார்த்தையில் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கவே மார்ச் மாதம் 11ம் திகதி ஒரு பிரேரணையினை முன்வைத்தோம். ஓற்றையாட்சி என்பதேயாகும். இந்த ஒற்றையாட்சியின் மூலம் தீர்வினை கொண்டுவரமுடியாது. அது ஒரு சமஸ்டியாகவே இருக்கமுடியும். அந்தத் திட்டத்தினை நாம் முன்வைத்தபோது 08 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டது. பின்னர் ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நீங்கள் வந்தால்தான் அதனைச் செயற்படுத்த முடியும் என்று கூறினார்கள். அதன் பின்னர் ஜனவரி மாதம் வரை 18 முறை சந்தித்ததன் பின்னர் உடனே அந்தப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிப்போய்விட்டனர் என்பது சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.
இதனடிப்படையின் கீழ் அன்றாட பிரச்சினைகள் பற்றித் தீர்வு காண்பதோடு பெண்களுக்கு பாதுகாப்பின்மை, பாலியல் துன்புறுத்தல்களைக் தடுத்துநிறுத்துவது, நிலங்களை அபகரித்து இராணுவ முகாம்களை அமைத்துள்ள நிலங்களை விடுவித்தல். இதனால் எமது பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றது. ஓட்டுமொத்தமாக அரசினால் எமது இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே இந்த மகாநாட்டின் மூலம் நாம் அரசாங்கத்திற்கு எமது பலத்தினை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாது சாத்வீக வழியில் எமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த மகாநாடு ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று மாவை சேனாதிராஜா அவர்கள் இம்மகாநாடு தொடர்பான தனது கருத்தினை தெரிவித்தார்.
– தினப்புயல் –