இவர் தான் ரியல் ரித்திகா சிங், மறைக்கப்பட்ட இறுதிச்சுற்று கதை- ஸ்பெஷல் பகிர்வு

372

இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியாது. ஹாக்கி, ஃபுட் பால், வாலி பால் என பல விளையாட்டுக்கள் இந்தியாவில் பல நகரங்களில் தூங்கிக்கொண்டே தான் இருக்கின்றது.

அதிலும் பாக்ஸிங் என்ற ஒரு விளையாட்டே விஜய், ஜெயம் ரவிசினிமாவில் காட்டிய பிறகு தான் நமக்கே தெரிந்திருக்கும், ஆனால், உண்மையான பாக்ஸிங் என்பது அது இல்லை, சினிமாவை தாண்டி ஓரளவிற்கு நேர்மையாக எடுத்த பாக்ஸிங் படம் தான் இறுதிச்சுற்று.

இப்படத்திற்காக இயக்குனர் சுதா இந்தியாவில் உள்ள பல பெண் பாக்ஸர்களை சந்தித்ததாக தெரிவித்தனர். ஆனால், உண்மையாகவே இது முழுக்க முழுக்க தமிழகத்தை சார்ந்த துளசி ஹெலன் என்பவரின் கதை தானாம், இதை அவரே நம்மிடம் தெரிவித்தார்.

துளசியின் அக்கா சரஸ்வதி ( எ ) சரஸிற்கு சிறுவயதிலிருந்தே பாக்ஸிங்கில் பெரிய ஈடுபாடு. இவரின் பாக்ஸிங்கை கண்டு வளர்ந்த காரணத்தால் துளசிக்கும் பாக்ஸிங் மீது அதிக ஆர்வம்.

ஆனால், சரஸிற்கு போலீஸ் ஆகவேண்டும் என்பதே லட்சியம், பாக்ஸிங் என்ன தான் கனவாக இருந்தாலும், குடும்ப வறுமை அவரை இந்த முடிவிற்கு இழுத்து சென்றது. ஆனால், யார் என்ன சொன்னால் என்ன? நானே ராஜா நானே மந்திரி என்று தோரணையில் துளசி 12 வயதில் தன் க்ளௌவ்ஸை(Gloves) அணிய இன்றும் நாக் அவுட் கேர்ளாக வலம் வருகிறார்.

என்னடா இதெல்லாம் சமீபத்தில் பார்த்த ஏதோ படம் போல் தெரிகிறதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆம், இறுதிச்சுற்று படமே தான், இப்படத்தை சுதா இயக்குவதற்கு முன் முதன் முதலாக துளசியை தான் சந்தித்தாராம். அவரிடம் பல விஷயங்களை கேட்டு அறிந்துக்கொண்டு அதை ஒரு கதையாக வடிவமைத்தாராம்.

துளசிக்கு எதற்கு கேட்கிறார் என்று கூட ஆரம்பத்தில் தெரியவில்லை, ஏதோ படம் எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்துள்ளது. பின் திரையரங்கில் தன் நண்பர்களுடன் படம் பார்க்கையில் அனைவருக்கும் அதிர்ச்சி. துளசி மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே தான் இருந்தார்களாம் திரையரங்கில்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தன் தங்கை வளர்ச்சி பிடிக்காமல் லக்ஸ் கையை உடைப்பார் அல்லவா? அதேபோல் சரஸ், துளசியின் மூக்கை பதம் பார்த்துள்ளார். ஆனால், அப்படியும் அந்த போட்டியில் துளசி வென்றுள்ளார்.

இதை விட அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா, துளசியின் தந்தை சமீபத்தில் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியுள்ளார். படம் வெளிவந்த பிறகு இதுப்பற்றி இயக்குனர் சுதாவிடம் துளசி முறையிட்டபோது, நான் உன்னை போல் 100 பேரை சந்தித்தேன். அவர்களும் இதையே தான் கூறினார்கள் என்று சிம்பிளாக கூறிவிட்டாராம்.

அவர் 100 பேரை பார்த்துயிருக்கலாம், பேசியிருக்கலாம், சரஸ்வதியை சரஸ் என்று அழைப்பது போல், லட்சுமியை படத்தில் லக்ஸ் என்று தான் அழைப்பார்கள். இத்தனை ஒற்றுமை துளசியின் வாழ்வியலுடன் இறுதிச்சுற்று ஒற்றுப்போகையில் இதை சம்மதிக்க ஏன் சுதாவிற்கு மனம் வரவில்லை? மேலும், முதன் முறையாக பாக்ஸிங்கில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்காக புகார் கொடுத்து, பலரின் சூழ்ச்சியால் இவரால் தன் பாக்ஸிங் க்ளௌவ்ஸை இன்றும் அணிய முடியவில்லை.(பல முன்னணி போட்டிகளில் துளசியை பங்கேற்க தடை விதித்துவிட்டனர்).

துளசியின் வாழ்க்கையை வைத்து கோடி கோடியாக சம்பாதித்து விட்டார்கள், மேடி இஸ் பேக், தமிழ் சினிமாவிற்கு ஒரு சென்சேஷ்னல் ஹீரோயின் கிடைத்து விட்டார். ஆனால், 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பெண்ணாக போராடி இந்திய அளவில் நடந்த பாக்ஸிங் போட்டிகளில் 3முறை வெண்கலம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த துளசி தற்போதும் ரூ 10 ஆயிரம், ரூ 15 ஆயிரம் சம்பளத்திற்கு நாள் முழுவதும் ஃபிட்நஸ் ட்ரைனராக ஒரு ஜிம்மில் கஷ்டப்படுகிறார்.

இத்தனையும் கூறி கடைசியாக அவர் கூறிய வார்த்தை ’என்ன இருக்கட்டும், பாக்ஸிங்கில் இத்தனை கொடுமை பெண்களுக்கு இருக்கின்றது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சுதா மேடம் அவர்களுக்கு சல்யூட்’ என்றார். ரித்திகா சிங்கை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழக இளைஞர்கள், படக்குழுவினர்கள், திரைப்பிரபலங்கள் இந்த ரியல் ரித்திகா சிங்கையும் கொஞ்சம் கவனிப்பார்களா? நாம் இந்த துளசி ஹெலனுக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.

  1. -மணிகண்டன்
SHARE