இஸ்ரேலோ அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் பலமாக தாக்குவோம் ; ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

110

 

இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.

இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் அமைதியை இழந்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இது குறித்து, “ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள எங்கள் படைகள் இடைமறித்தன.

ஈரானுடனான மோதலை எனது நாடு விரும்பவில்லை, ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவாக செயல்படத் தயங்காது.

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் கூடுதல் ஆதரவை வழங்கும். ஈரானின் இந்த பொறுப்பற்ற தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தப் போர் பதற்றங்களை தணிக்கவும் ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் அமெரிக்கா ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “இந்த பிரச்சாரம் இன்னும் முடியவில்லை. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக வேண்டும்.

அதே நேரத்தில், நாங்கள் தாக்குதலை தடுத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார். அதோடு, இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர், ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “ஈரானின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானது.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் இஸ்ரேல், ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். தனது எக்ஸ் தளத்தில், “நாங்கள் இடைமறித்தோம், முறியடித்தோம், ஒன்றாக வெல்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான், டென்மார்க், பிரான்ஸ், மெக்சிகோ, நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE