இந்த திக்ரித் நகரில் இந்திய நேஸ்கள் 46 பேர் (இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்) உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை அங்குள்ள இந்திய தூதரகம் நாடியது.
அப்போது, இந்திய நர்சுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது. அதன்படி சர்வதேச செம்பிறை சங்கத்தினர் திக்ரித் நகரில் உள்ள 46 இந்திய நர்சுகளையும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நர்சுகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அவர்கள் பணியாற்றிய மருத்துவமனைக்குள் தங்கி உள்ளனர். தாங்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு உதவுமாறு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான ‘எஸ்.ஓ.எஸ்.’ வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(எஸ்.ஓ.எஸ். என்பது இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றும்படி விடுக்கிற ‘சேவ் அவர் சோல்’ என்னும் வேண்டுகோள் ஆகும்.)
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் ஜென்சி ஜேம்ஸ் என்ற நேஸ் , இந்திய நாளேடு ஒன்றிடம் தொலைபேசி வழியாகப் பேசினார்.
அப்போது அவர், “இங்கு நிலைமை மிகவும் பயங்கரமாக இருக்கிறது. நாங்கள் பல நாட்களாக ஆஸ்பத்திரிக்குள் முடங்கிக் கிடக்கிறோம். கடுமையான குண்டு வீச்சு காரணமாக இணைய தளம் துண்டிக்கப்பட்டு விட்டது. தொலைபேசி மற்றும் செல்போன் இணைப்புகள் எப்போது துண்டிக்கப்படுமோ என்று தெரியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும். அதைப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்ய வேண்டும்” என உருக்கமுடன் கூறினார்.
இதற்கிடையே நர்சுகள் பாதுகாப்பு பற்றி தூதரக அதிகாரிகள் கூறுகையில், “நர்சுகள் தவித்துக் கொண்டிருந்தாலும், பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு கொண்டு உதவிகள் கேட்கின்றனர். ஆனால் விமான நிலையத்துக்கு செல்லுகிற சாலைகளை தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டு விட்டதால், ஆஸ்பத்திரியை விட்டு வெளியே நகர முடியாத சூழ்நிலை உள்ளது” என்றனர்.