ஈராக் பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் ஜான் கெர்ரி

474
ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் இனக்கலவரங்களில் போராளிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிகி அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று ஈராக்கிற்கு 300 ராணுவ ஆலோசகர்களை அனுப்புவதான தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்டார்.மேலும் ஈராக்கின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் ஒரு ராஜதந்திர பயணத்தில் ஈடுபடுவார் என்றும் ஒபாமா தெரிவித்தார். அதன்படி நாளை முதல் 27-ம் தேதி வரை ஜான் கெர்ரி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுகின்றார். முதலில் ஜோர்டானின் தலைநகர் அம்மானுக்கு செல்லும் கெர்ரி அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் நாசெர் ஜூடேவைச் சந்திக்கின்றார்.

அதன்பின் பிரஸ்ஸல்ஸ் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களுக்கும் செல்லும் இவர் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளடக்கிய ஒரு அரசை ஈராக்கில் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சகி நேற்று தெரிவித்துள்ளார்.

சிரியாவின் நிலை குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும் ஈராக்கின் நிலை குறித்து விவாதிக்கும் கெர்ரி அதன்பின் நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றார்.

இவர் ஈராக்கிற்கும் விரைவில் செல்லக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளபோதிலும் அதற்கான தேதியையோ, அதிகாரபூர்வ அறிவிப்பையோ அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.

SHARE