ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார்.
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எனினும், அவருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் க்குமான முரண்பாடுகள், கட்சியின் முடிவை மீறி, அவர் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டிருந்த தருணத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது.
ஆனாலும், அவர் இதுவரை வேறுகட்சிகள் எதிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஐங்கரநேசனை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டாலும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், அவர் ‘பசுமை இயக்கம்’ என்கிற அமைப்பினூடு தனித்துப் பயணிப்பதிலேயே கவனமாக இருக்கின்றார்.
தேர்தல் அரசியல் அதிக தருணங்களில் வெற்றியைக் குறிவைத்தே நிகழ்ந்து வந்திருக்கின்றது. அங்கு கொள்கை சார் அரசியல் இரண்டாம் கட்டம்தான். அந்தவகையில், தேர்தல் காலங்களில் நிகழும் கட்சி தாவல்களும் புதிய கூட்டணிக்கான முனைப்புகளும் வெற்றிகளையே பிரதானமாகக் கொண்டவை.
அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் க்கும், ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து வெளியேறிவதற்கு அதன் முக்கியஸ்தர்களுக்கும் ‘தேர்தல் வெற்றி’ என்கிற காரணமும் அதுசார் காரியங்களும் இருக்கின்றன.
இந்த நிலையை, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ், எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்? அதனூடு அவரது புதிய தேர்தல் கூட்டணியை எவ்வாறு வெற்றிப்பாதையில் நகர்த்தப் போகின்றார் என்கிற கேள்விகள் எழுகின்றன.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்ப்பு, புளொட்டை இணைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகளின் தோல்வி உள்ளிட்ட காரணங்களினால், பேரவை அமைக்க நினைத்த, புதிய தேர்தல் கூட்டணி ஆரம்பித்த இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரம் கீழ்நோக்கி விழுந்திருக்கின்றது.
இந்த நிலையில், கட்சிக்குள் இருக்கும் முக்கியஸ்தர்களும் கட்சியை விட்டு வெளியேறும் நிலை என்பது, தொடர் பின்னடைவுகளோடு இருக்கும் தரப்புகளுக்கும் இன்னுமின்னும் பாதிப்பையே தரும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதில், (குறிப்பாக 2009க்கும் பின்னர்) அதிக அக்கறை காட்டியவர்களில் சுரேஷ் பிரேமசந்திரன் முதன்மையானவர்.
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பின் அழைப்பின் பேரில், கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சந்திப்புகளின் போதும், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.
அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம், சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்த இரா.சம்பந்தனையும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களையும் வெளிப்படையாக விமர்சித்து வந்தவர்களிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் முக்கியமானவர்.
கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வதனூடாகப் பங்காளிக் கட்சிகளுக்கான அங்கிகாரத்தைத் தக்க வைக்க முடியும் என்று சுரேஷ் பிரேமசந்திரன் அதிகமாக நம்பினார்.
ஆனால், அவர் அளவுக்கு செல்வம் அடைக்கலநாதனோ, பின்னர் இணைந்து கொண்ட தர்மலிங்கம் சித்தார்தனோ அழுத்தங்களை வழங்கவில்லை.
அந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கூட்டமைப்பு என்பது கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சி என்கிற ஏகநிலையை அடைந்தது. அப்படியான தருணத்தில், கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு எந்த நன்மையும் இல்லை.
அதுபோல, தம்முடைய ஏக நிலைக்குத் தடைக்கல்லாக இருக்கும் சுரேஷ் பிரேமசந்திரனை அரவணைத்துச் செல்வதிலும் தமிழரசுக் கட்சிக்கு எந்த நன்மையும் இல்லை. ஆக, அவரவர் நலன்களைக் கருத்தில் கொண்டு தங்களுக்கிடையிலான முரண்பாட்டின் அளவுகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அதன்போக்கில், ஈ.பி.ஆர்.எல்.எப் புதிய தேர்தல் கூட்டணியின் பக்கத்திலும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் க்குள் உள்ள முக்கியஸ்தர்களைப் பிரித்தெடுத்துத் தங்களோடு இணைப்பதிலும் குறியாக இருக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிறுத்தி, கட்சிகளையும் கூட்டணிகளையும் பலப்படுத்துவது என்பது எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல் வெற்றிகளுக்கு முக்கியமானவை.
ஏனெனில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இம்முறை ‘வட்டாரம்’ என்கிற விடயத்தை முன்னிறுத்திய தேர்தலாகக் கட்டமைக்கப்படும் போது, அங்கு கட்சி மாத்திரமின்றி குறித்த பிரதேசத்தின் ‘நன்மதிப்பைப் பெற்றவர்’ என்கிற விடயமும் பிரதான பங்கு வகிக்கும்.
அப்படியான சூழலில், கட்சிக்குள்ளிருக்கும் முக்கியஸ்தர்களோ மக்களின் நம்பிக்கை பெற்றவர்களோ கட்சியைவிட்டு வெளியேறுவது என்பது பெரும் பின்னடைவாகும்.
ஆனால் இம்முறை, வடக்கு – கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்திக் கொண்டு, அனைத்துக் கட்சிகளும் தமது பாதையைச் செப்பனிடத் தயாராக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஏனெனில், கட்சிகளுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது முதல், ஒவ்வோர் ஊரிலும் கட்சியின் பிரதானியை அடையாளப்படுத்துவது வரையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த ஆண்டு முதல், தமிழரசுக் கட்சி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால், ஏனைய கட்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சுதாகரித்துக் கொண்டு, அந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியொன்றுக்கு வேட்பாளர்களை தேடுவது என்பதுவும் குதிரைக் கொம்பான விடயம். அதுவும், தமிழ்த் தேசிய அரசியலில் தேர்தல் வெற்றிகள் என்பது கூட்டமைப்பு என்கிற ஏக நிலையொன்றுக்குள் சென்றுள்ள நிலையில், கூட்டமைப்பைத் தாண்டி, வேட்பாளர்களைத் தேடுவது என்பது பெரும் சிரமமானது.
அதுவும், பெண்கள் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், காலம் தாழ்த்திக் கொண்டிருந்த கட்சிகளின் நிலை பெரும் திண்டாட்டமானது.
“…தமிழ்த் தேசிய அரசியல் என்பது, புதிய அரசமைப்பு இறுதி செய்யப்பட்டதும் பெரும்பாலும் வடக்கு – கிழக்குக்குள் வந்துவிடும். வடக்கு – கிழக்கைத் தாண்டிய அரசியல் என்பது அவ்வளவு தாக்கம் செலுத்தாது. ஆக, கொள்கைசார் அரசியல் மாத்திரமல்ல, தேர்தல் வெற்றிகளைப் பிரதானப்படுத்திய அரசியலும் கோலுலோச்சப் போகும் சூழலில், கட்சிகளைப் பலப்படுத்துவது மிக முக்கியமானது.
அதைத் தமிழரசுக் கட்சி மிக திட்டமிட்ட ரீதியில் செய்து கொண்டிருக்கின்றது…” என்று கடந்த ஆண்டு இந்தப் பத்தியாளரிடம் தமிழரசுக் கட்சியின் இளம் அபிமானியொருவர் குறிப்பிட்டார்.
அவர், இந்த ஆண்டு ஏப்பிரல் அளவில் புதிய அரசமைப்பு மீது, பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நம்பியிருந்தார். அதை அடிப்படையாக வைத்து, மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.
“…கூட்டமைப்பின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உண்டு. அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். ஆனால், கூட்டமைப்பில் நின்றால்தான் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்றும் மக்கள் நம்புகின்றார்கள். அப்படியான மனநிலையிலுள்ள மக்களோடு பேசி, கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியின் வேட்பாளர்களாக மாற்றுவது பெரும் சிரமமானது…” என்று தமிழ்த் தேசிய முன்னணியின் ஆதரவாளர் ஒருவர், கடந்த வாரம் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.
மேற்கண்ட இரண்டு கூற்றுகளின் வழி வருகின்ற உண்மைகளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தலாம். ஆனால், இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பயணிக்கும் திறனும் நம்பிக்கையும் கூட்டிணைவுமே புதிய கூட்டணிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
மாறாக, கூட்டமைப்பு மீதான அதிருப்தியை அறுவடை செய்ய முடியும் என்கிற தேர்தல் கால சிந்தனையோ, குறுகிய காலக் கூட்டோ எதிர்காலத்துக்கான அரசியலை ஆட்டம் காணச் செய்யும். ஏனெனில், தமிழரசுக் கட்சியின் ஏக நிலை என்பது பலமான கட்டத்தை நாளுக்கு நாள் அடைந்து வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றிக் கொண்டு, புதிய கூட்டணிக்குள் தனக்கான இடத்தைத் தெளிவாக உறுதி செய்து கொண்டு, மக்களை நோக்கிப் பயணிப்பது என்பது சுரேஷ் பிரேமசந்திரனின் முன்னாலுள்ள பெரும் தடைக்கற்கள்.
அவற்றையெல்லாம், கடந்து அவர் பயணித்தால், தொலைதூரத்திலுள்ள தேர்தல் வெற்றியென்கிற இலக்கை எப்போதாவது அடையலாம்.