உடனடியாக ஒரு இலட்சம் வென்ரிலேற்றர்களைத் தயாரிக்கும் அமெரிக்கா- தவிக்கும் நாடுகளுக்கு உதவி!

461

அடுத்த 10 நாட்களில் ஒரு இலட்சம் வென்ரிலேற்றர்களைத் (Ventilators) தயாரித்து, தேவைப்படும் நட்பு நாடுகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமரிடம் தான் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் தனது நாட்டிற்குற் கேட்ட முதல் உதவி வென்ரிலேற்றர்கள் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இதேபோல, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் வென்ரிலேற்றர்கள் கேட்பதாகவும், தங்களது தேவைக்காகவும் பிற நாடுகளுக்கு உதவுவதற்காகவும் பெரும் எண்ணிக்கையில் அவற்றைத் தயாரிக்க உள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

பிற நாடுகள் செய்ய முடியாதவற்றைச் செய்யக்கூடிய நிலையில் அமெரிக்கா உள்ளதாகவும் மிக விரைவாக ஒரு இலட்சம் வென்ரிலேற்றர்களைத் தயாரித்து இத்தாலி, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வென்ரிலேற்றர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளைத் தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் சட்டத்தின் ஒரு பகுதியை ட்ரம்ப் செயற்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார்.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 27 ஆயிரத்து 400ஐத் தாண்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் நிமிடத்துக்கு நிமிடம் கொரோனா தொற்று நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்தபடியே உள்ள நிலையில் ஒரு இலட்சத்து 33 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், 4 இலட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன் அவர்களில் 23 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE