உடல் எடையை குறைப்பதற்கான நடைபயிற்சியில் கடைப்பிடிக்க வேண்டியவை

390
இந்த முறையில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்

இந்த முறையில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்
செய்யக்கூடிய உடற்பயிற்சிகளுள் மிகவும் எளிதானதாக தோன்றுவது வாக்கிங் எனப்படும் நடைபயிற்சியாகும். கடினமான பயிற்சிகளை செய்ய விரும்பாதோரும் உடல் எடையை குறைத்திட விரும்பி நடக்கின்றனர். வாக்கிங் எங்கும் எப்போதும் செய்யக்கூடிய பயிற்சி. எந்த வயதினரும் வாக்கிங் செல்ல முடியும். அதற்குப் பெரிதாக எந்த ஆயத்தமும் தேவையில்லை. காலணியை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பிக்கவேண்டியதுதான். நடைபயிற்சி செய்வது இதயத்திற்கு ஆரோக்கியமும், எலும்புகளுக்கு வலிமையையும், மனதையும் ஆரோக்கியமாக காப்பதற்கு உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்காக நடைபயிற்சி செய்வோர் சில விஷயங்களை கடைபிடித்தால், நல்ல பலன் கிடைக்கும்..

வாக்கிங் செல்வதால் கலோரி செலவாகும். ஆனால், மற்ற உடற்பயிற்சிகளை விட குறைவாகவே ஆற்றல் செலவழிக்கப்படும். ஆற்றலின் அளவை கருத்தில் கொண்டால் வாக்கிங் மிகவும் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சியாகும். ஆகவே, சற்று அதிகமாக வாக்கிங் செல்லவேண்டும். தினமும் 15 நிமிடம் நடைபயிற்சி சென்றால், உடல் எடை குறையாது. ஆகவே, தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடப்பது நல்லது. எடை குறைவதற்காக நீங்கள் நடந்தால், பொறுமையாக ஆரம்பியுங்கள். அரை மணி நேரம் வாக்கிங் செல்ல ஆரம்பித்து, இரண்டு வாரங்கள் கடந்ததும் 10 நிமிட நேரத்தை அதிகரியுங்கள். இப்படி நேரத்தை அதிகரித்து தினந்தோறும் ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்..

உள்ளதை சொல்லவேண்டுமானால் உடற்பயிற்சி செய்வதற்கென்று தனி நேரம் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் உங்களுக்கு நடக்கலாம் என்று தோன்றுகிறதோ அப்போது நடக்கலாம். ஆனால், சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஊக்கத்தை அளிப்பதோடு எடையை குறைக்க உதவும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு நடப்பது மிகவும் நல்லது. காலை உணவு உண்பதற்கு முன்பு உடல் கலோரியை இழந்த நிலையில் இருக்கும். அப்போது நடப்பது உடலின் கொழுப்பு கரைய உதவும்..

வாக்கிங் செல்லும்போது மேல் கைகளை நன்கு அசைத்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால் வழக்கத்தை விட 5 முதல் 10 சதவீதம் அதிகமான ஆற்றல் செலவழியும். நடக்கும்போது கைகளை செங்குத்தாக மடக்கி, தோள்பட்டையிலிருந்து முன்பக்கமாக தள்ளி பின்னர் இழுத்து நடக்கவும்..

உடல் எடையை குறைப்பதற்கு நடப்பது நல்ல விஷயம். ஆனால் வெறுமனே நடப்பதால் மட்டும் உடல் எடை விரைவில் குறையாது. உங்கள் உணவு பழக்கத்திலும் கவனத்தை செலுத்தவேண்டும். ஆரோக்கியமான, கலோரி குறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு, வாக்கிங்கும் சென்றால் உடல் எடை குறையும்..

SHARE