உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடன் அரசுகளின் முதல் நடவடிக்கை, கைது செய்தல் பின் தடுத்து வைத்தல், அதன் பின் தெருவோர பிணங்கள் ஆக்கல், முடிவாக காணாமல் போகச்செய்தல் எனத் தொடர்ந்த வரலாற்றில், தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர் நிலைதான் மிகவும் கொடுமையானது.
உடலங்களை காணாதவரையில் அவர்கள் எங்காவது உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் எவரும் நம்புவர், விரும்புவர்,
அவ்வாறான மனநிலையில் இருப்பவர் தம் இறுதிவரை தேடலை தொடர்வர். தம்மை வருத்தியாவது உண்மையை அறிய அவர்கள், சாகும்வரை உண்ணாவிரதம் கூட இருக்க முற்படுவர்.
அண்மையில் வவுனியாவில் நடந்த நிகழ்வும், அதை தொடர்ந்து பல இடங்களில் நடந்தவையும் அது போன்றதே.
இந்த சம்பவம் இதுதான் முதல் முறை அல்ல. யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் ஆரம்பமாகி இன்றுவரை தொடர்கிறது.
சரணடைவோருக்கு புனர்வாழ்வு என்ற அரசின் அறிவிப்பை நம்பிவர், தம் உறவுகளை தாமே அரச படைகளிடம் ஒப்படைத்தனர், இன்று அவர்கள் எங்கே என கேட்கும் போது, பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
ஆனால் நல்லாட்சியின் பிரதமர் எந்த வித பொறுப்பும் இல்லாத பதிலை கூறுவது வேதனையானது. காணாமல் போனவரை வெளிநாடுகளில் தேடும்படி அவர் கூறுவது நகைப்புக்கிடமானது.
இராணுவத்தினரிடம் சரணடைந்தவர் வெளிநாடுகளில் என்றால், ராணுவம் என்ன வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜன்சி நடத்துகிறதா? அல்லது புனர்வாழ்வு நிகழ்ச்சி திட்டத்தில் அவர்களை வெளிநாட்டு பிரஜைகள் ஆக்கும் வேலைத்திட்டம் இருந்ததா?
ஆயுதம் ஏந்தி அரசை எதிர்த்து போராடியவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பினால், அவர்கள் உள்நாட்டுக்கு அனுப்பும் பணம் மூலம், அந்நிய செலாவணி நிலுவை உயர்வடையும் என்ற எண்ணமா?
ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் பல தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய போது, அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
உண்மையில் அவர் அதை உள்ளூர விரும்பினார். காரணம் பெருமளவு இளையவர் வெளியேற்றம் போராட்டத்தை பலவீனப் படுத்தும் என்பது அவரின் கணக்கு.
தப்பான அவரின் கணக்கால், பெரும் நிதி மூலங்களை புலம் பெயர் தமிழர் வழங்கி, புலிகளின் விமானப்படை வரை உருவாக வழிசமைத்தது.
பிரதமர் ரணில் தனது மாமனார் ஜே ஆர் போட்ட தப்புக்கணக்கால் நிகழ்ந்த வளர்ச்சியால், புலிகளின் விமானப்படை போட்டுச்சென்ற குண்டுகளால், பற்றி எரிந்த தென்னிலங்கை நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டுவந்த மகிந்த அரசையும், அதன் சொல்ப்படி நடந்த இராணுவத்தையும் மைத்திரியிடம், சேதாரம் இன்றி பாரப்படுத்த, அவர்களை சர்வதேசத்திடம் இருந்து காப்பேன் என கொடுத்த வாக்கை, காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தால் விட்ட அறிக்கை தான் அது.
மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் வென்றாலும் பதவி ஏற்கும்வரை தென்னம் தோட்டம் ஒன்றில் தான் தங்கியிருந்தார்.
காரணம் மகிந்த ஆதரவு படை தன்னை வேட்டையாடி விடும் என்ற பயம். மகிந்தவுக்கு அலரி மாளிகையில் மூக்கணாம் கயிறு கட்டி, அவரை ஹெலி மூலம் மெதனமுலையில் இருந்த மகிந்தவின் வீடு வரைக்கும் பாதுகாப்பாக அனுப்பிவிட்டுத்தான் ரணில் மைத்திரியை ஜனாதிபதி பீடம் ஏற்றினார்.
இன்றும் தான் மகிந்தவுக்கு கொடுத்த வாக்கை காப்பற்றவே ரணில் முனைகிறார்.
காணாமல் போனவர்கள் எங்கே என்ற உண்மை நிலை அவருக்கு தெரியும். அதை வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.
அதனால் தான் இந்த தடுமாற்றம். நல்லாட்சி அரசு அமைந்து ஆண்டுகள் இரண்டு முடிந்து விட்டது. கடந்த அரசில் நடந்த தவறுகளை ஆராய்ந்து அறிய இத்தனை கால அவகாசம் தேவைதானா என்ற கேள்வி எந்த சாமானியருக்கும் எழும். பல தடவைகள் கேட்டுப்பார்த்தும் முடிவு தெரியாமல் போனதால்தான் உண்டுவிரத போராட்டம்.
அதைக்கூட அவசரகதியில் பிரதமர் அனுப்பிவைத்த அமைச்சர் கொடுத்த எழுத்து மூல உறுதிமொழி அவர்களை இன்று நீர் அருந்தும் நிலைக்கு உட்படுத்தியது.
அது கூட ஒரு தற்க்காலிக தீர்வுமட்டுமே. அடுத்து வரும் ஜெனீவா அமர்வுவரை எந்தப்பிரச்சனையும் இங்கு இல்லை அல்லது அரசு எல்லா விடயங்களிலும் கரிசனை கொண்டுள்ளது என்பதை காட்டும், அரசியல் நாடகம்தான் இது.
தன்னை ஒரு நல்லாட்சியின் நாயகனாக தான் ஏற்ற பாத்திரத்துக்கான பிரதமரின் நடிப்பு இது.
மாறாக நடந்தது என்ன என்பதை அறிந்தவர் பலர் பிரதமரின் தொடர்பில் இன்றும் இருக்கின்றனர்.
அதில் முக்கியமானவர் சரத் பொன்சேகா. லசந்தவின் கொலையை அறிந்த இவருக்கு நிச்சயம் தான் இராணுவ தளபதியாக இருந்தபோது நடந்தவைகள் தெரியாமல் போகாது.
வெள்ளைக் கொடியுடன் வந்தவரைக்கூட கொல்லும்படியான உத்தரவுகள் தனக்கு வந்ததாக அன்று அம்பலாங்கொடையில் கூறியவர், தங்களிடம் சரணடைந்தவர்களை என்ன செய்தோம் என்று இன்று கூறலாமே.
சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவின் படுகொலை பற்றி அவரிடம் விசாரித்து கொண்டிருக்கும் இதே அரச புலனாய்வாளர்கள் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த வேளையில், நடந்தேறிய சம்பவமான அரசபடைகளிடம் சரணடைந்தவருக்கு நடந்தது என்ன என்று ஏன் விசாரிக்கவில்லை.
இங்கு தான் பிரதமரின் திருகுதாளம் வெளிப்படுகிறது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச முன்னிலைப் படுத்தபடலாம் என்ற காற்றுவாக்கில் வரும் செய்திதான் அது.
ஜனாதிபதி போட்டியாளரான கோத்தபாயவை தன் வழிக்கு கொண்டுவரவும், இயலாதபட்சத்தில் அவருக்கு குழிதோண்டவும் லசந்தவின் கொலையை அறிந்தவர் சரத்பொன்சேகா என்பதனால் அவரை தூண்டிவிடும் பிரதமர், சரணடைந்தவர் விடயத்தில் அடக்கி வாசிக்க முயல்கிறார்.
காரணம் அதில் சம்மந்தப்பட்டது இராணுவம். மகிந்தவை காப்பற்றுவது போலவே இராணுவத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை பிரதமருக்கு உண்டு.
கொடுத்த வாக்கை காப்பாற்ற மகிந்தவுக்கு அரண் அமைக்கும் பிரதமர், தனது நடவடிக்கைமூலம் இராணுவத்துக்கு எந்த சேதாரமும் வந்துவிட கூடாது, அது கோத்தவுடன் கைகோர்த்துவிட கூடாது என்பதில் கவனமாக உள்ளார்.
அதனால் தான் தனது மருமகனான பாதுகாப்பு பிரதி அமைச்சரை அனுப்பி உறுதி மொழி கொடுத்து, சாகும்வரையான உண்ணா விரதத்தை முடித்து வைத்தார். மேலதிகமாக சேர் பி இராமநாதன் இரத்த உறவான டி எம் சுவாமிநாதனையும் அனுப்பிவைத்தார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது சாதாரணமாக வழக்காடலில் உள்ள விடயம். ஆனால் ஒரு கல்லில் ஒரு குலை மாங்காய் அடிப்பது தான் பிரதமர் வழக்கம்.
மாமன் ஜே ஆர் கற்றுக்கொடுத்த பாடத்தை தனது மருமகனிடமும் போதித்து, உண்ணா விரதம் இருந்தவரை நம்பச்செய்ய வவுனியா அனுப்ப, அவரும் அதனை செவ்வனே செய்து முடித்தார்.
யானை [ UNP] வழி வந்தது பூனையாகுமா?. மேலதிகமாக பொருத்து வீட்டு நாயகனும் பொன்னம்பலத்தின் பூட்டனும் களத்தில்.
தமிழர் தலையை மொட்டை அடித்து அதில் மிளகாய் கூட இவர்கள் அரைப்பார்கள். அதை ஏமாந்த சோனகிரிகளாய் எம் தலைமைகள் பார்த்திருப்பார்.
பொங்கு தமிழ், எழுக தமிழ் எல்லாம் நடக்கும். பின்னர் சோடா போத்தல் மூடியை திறந்ததும், புஸ் என்று வெளியேறும் காற்றுப்போல எல்லாம் அடங்கிவிடும்.
வயதானாலும் கை தளராது ஆனந்தசங்கரி அய்யா மட்டும், தொடர்ந்தும் பிரதமருக்கும் அதன் பிரதியை ஜனாதிபதிக்கும் கூடவே பத்திரிகைகளுக்கும் எழுதி அனுப்பிவைப்பார்.
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை செய்யும் இவர்கள் அரசியல் வேடதாரிகள்.
– ராம் –