உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று: பெணாலிட்டி ஷாட்டில் பிரேசில் வெற்றி

522
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலுடன் சிலி அணி மோதிய விறுவிறுப்பான ஆட்டம் இன்று போலோஹாரிசோண்ட்டில் நடைபெற்றது.

சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணியும், போட்டிகளை நடத்தும் நாடு என்ற முறையில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரேசில் அணியும் தத்தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் விளையாடின.

ஆட்டத்தின் முன்பாதி நேரத்துக்குள் முதல் கோலை பிரேசில் பதிவு செய்ய, அதற்கு பதிலடியாக சிலியும் தனது கணக்கில் ஒரு கோலினை பதிவு செய்ததால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. பின்னிறுதி ஆட்டத்தின் இறுதி நேரம் வரை மேற்கொண்டு எந்த அணியும் கோல் ஏதும் பதிவு செய்ய முடியாமல் திணறின.

பின்னர், அளிக்கப்பட்ட 3 நிமிட உபரி நேரத்திலும் 1-1 என்ற ஸ்கோர் கணக்கை உயர்த்திக் கொள்ள முடியாமல் இரு அணிகளும் திண்டாடின. இரு அணிகளில் ஒன்று மேற்கொண்டு ஒரு கோலை அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மேலும் 30 நிமிட நேர நீட்டிப்பில் ஆக்ரோஷமாக மோதிய சிலி வீரர்கள் கடைசியாக அடித்த ஒரு கோலும் வலையின் கம்பியில் பட்டு திசை திரும்பியதால் பார்வையாளர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

120 நிமிட நேர ஆட்டத்திலும் 1-1 என்ற சமநிலையே நீடித்ததால் ‘பெணாலிட்டி கிக்’ முறையில் அடுத்த கோலுக்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் அளிக்கப்பட்டன.

பிரேசில் ஒரு பெணால்ட்டி அடிக்க சிலியின் பந்து பிரேசில் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. பிரேசில் இரண்டாவது கோலை பதிவு செய்ய, பெணாலிட்டியில் முதல் கோலை சிலி பதிவு செய்தது. பிரேசிலின் அடுத்த பெணாலிட்டி கோல் முயற்சியை சிலி தடுத்து ஆட்கொண்டது.

இதனையடுத்து, சிலியின் கடைசி பெணாலிட்டி கோலை தடுத்த பிரேசில் நாக் அவுட் சுற்றில் சொந்த மண்ணில் வெற்றியை சுவைத்தது.

SHARE